My Blog List

Saturday, 5 May 2012

பொருளாதாரமும் வரலாற்று ஆசிரியர்களும்

இர்பான் ஹபீப் 

தமிழில்: அசோகன் முத்துசாமி

 1
 இதர விஞ்ஞானங்கள் மற்றும் துணை விஞ்ஞானங்கள் போலவே
பொருளாதார வரலாற்றுக்கும் அதற்கே உரிய கடந்த காலம் ஒன்று
இருக்கிறது; அது மிகுந்த ஆர்வத்திற்குரிய ஒரு துறையாக இருந்த நாட்கள் உண்டு; அது சற்று வீழ்ச்சி அடைந்ததுபோல் தோன்றிய நாட்களும் உண்டு. 1870லிருந்து 1900 வரையிலான காலகட்டத்து பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய விமரிசனம் தாதாபாய் நௌரோஜியின் கட்டுரைகளால் ஆரம்பிக்கப்பட்டு, ஒட்டுமொத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கும் நீடிக்கப்பட்டபோது இந்தியாவில் அதற்கு விடிவுகாலம் பிறந்தது. இந்த நீட்டிப்பு பிரதானமாக கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் வெளியிடப்பட்ட ரொமேஷ் சந்தர் தத் எழுதிய இரண்டு தொகுப்புகளில் வந்தது. தவிர்க்க முடியாமல் மறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வெளிவந்தன; 1929ல் முதலில் வெளியிடப்பட்ட வேரா அன்ஸ்டேயின் 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி'2 என்கிற நூல் அனைத்து விஷயங்களிலும் அதிகாரபூர்வமான பிரிட்டிஷ் நிலைப்பாட்டை வழங்கியது.3 இந்த விவாதம் கிட்டத்தட்ட ஏககாலத்தில் காலனியத்திற்கு முந்தைய கடந்த காலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது; 'அக்பர் மரணத்தின்போது இந்தியா: ஒரு பொருளாதார ஆய்வு' என்கிற டபுள்யூ.எச்.மோர்லேன்ட் என்பவரின் நூல் அந்த விவாதத்தில் குறிப்பிடத்தக்கது; பிரிட்டிஷ் ஆட்சியில் வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிற நௌரோஜியின் கருத்துக்களை அவர் மனதில் கொண்டிருந்தார் என்பது தெளிவு; அதற்காக அவர் 'மேல் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் தற்போதைய வாழ்க்கையைவிட அக்பர் காலத்தில் மிக மிக வசதியாக வாழ்ந்தார்கள்' (1910-14) என்ற முடிவிற்கும், 'கீழ் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் தற்போதைய வாழ்க்கையைவிட மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள்' என்கிற முடிவிற்கும் வருகிறார்.4 மோர்லேன்ட் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டுடனேயே எழுதினார்; அவருடைய பிந்தைய எழுத்துக்களில் அவருடைய விவாதம் செய்யும் நோக்கம் வடிந்துவிட்டது போல் தோன்றுகிறது.5 என்றபோதிலும், அவரது 'அக்பர் மரணத்தின்போது இந்தியா' என்கிற நூல் இந்தியப் பொருளாதார வரலாறு குறித்த எதிர் ஆய்வுகளைத் தூண்டியது. ஆய்வு செய்தவர்களில் பிரிஜ் நாராயண் (1929) மற்றும் ராதாகமல் முகர்ஜி (1934)6 ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அதிகமான ஆவணங்களை ஆராய்ந்த, ஏராளமான தரவுகளைப் பயன்படுத்திய அவர்கள் தனிநபர் சராசரி வருமானத்தின் அடிப்படையில் இந்திய மக்களின் பல்வேறு பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சியைவிட முகலாய ஆட்சியில் நன்றாக வாழ்ந்தார்கள் என்று வாதிட்டனர்.
 முதலில் 1930களிலும் பின்னர் இரண்டாம் உலகப் போரின்போதும் மார்க்சியக் கருத்துக்கள் பரவியதானது பொருளாதார வரலாற்றின் மீதான ஆர்வம் தோன்றுவதற்குப் புதிய காரணமாக இருந்தது; குறிப்பாக, பொருளாதார அமைப்பு மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் அம்சத்தின் மீதான ஆர்வம். யு.என்.கோஷல் (1929), எஸ்.கே.தாஸ் (1937), என். பந்த்யோபாத்யாயா (1945)7 ஆகியோர் பண்டைய இந்திய பொருளாதார வரலாறு பற்றி முன்னர் எழுதியிருக்கிறார்கள்; ஆனால், மார்க்சிய முறையை வெளிப்படையாக பாராட்டிய டி.டிகோசாம்பியின் 'இந்திய வரலாற்று ஆய்விற்கு ஒரு அறிமுகம்' (1956) என்கிற நூல் சமூக அமைப்புகள் (உற்பத்தி முறைகள்) மற்றும் அவற்றிற்குள் நிலவிய வர்க்க முரண்பாடுகள் ஆகியவை பற்றிய விவாதங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாற்று ஆய்விற்கான இன்னும் பரந்த ஒரு கண்ணோட்டத்தைத் திறந்துவிட்டது.8 'இந்திய நிலப்பிரபுத்துவம் கிபி 300 முதல் கிபி 1200வரை' என்கிற ஆர்.எஸ்.சர்மாவின் நிபுணத்துவம் மிக்க நூல் (டெல்லி 1965, இரண்டாம் பதிப்பு 1965) அந்த மரபில் எழுதப்பட்டதாகும்.9 மார்க்சிய மரபிற்கு வெளியேயும் பொருளாதார வரலாறு குறித்து பல மதிப்புமிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று பத்தாண்டுகளில் பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் இந்த ஆய்வுப் பொருளுக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
 என்றபோதிலும், இந்திய கல்விப் புலத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. நவீன இந்தியாவின் பொருளாதார வரலாறு உள்பட 'பொருளாதார வரலாறு' பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றது. அடிப்படையான பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு கீழான இடம் கொடுக்கப்பட்டிருப்பதும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தையிடங்கள் ஆகியவற்றின் பொருளதாரமே (வர்த்தகப் பொருளாதாரம், வர்த்தக நிர்வாகம், இத்யாதி) முதன்மையான ஆதரவைப் பெற்றுக் கொண்டிருப்பதும் இதற்கு ஓரளவு காரணம். 1990லிருந்து உலகமயம் என்கிற சொல் பல பொருளாதார நிபுணர்களின் மந்திரமாக ஆனது; கற்பனை செய்யப்பட்ட 'வரலாற்றின் முடிவு' எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அவற்றுக்கு முன்னர் உஙண்மையில் பொருளாதார வரலாறு அழிந்திருந்தது.
 'ஹோமோ ஹெயரார்ச்சிகஸ்: சாதி அமைப்பும் அதன் உட்பொருளும்' என்கிற தன்னுடைய நூலில் லூயி டுமான்ட் 1970ம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு பொருளாதாரமும் வரலாறும் சம்பந்தமில்லாதது என்று வாதிட்டிருந்தார். அதை அவரது மேதமைக்குக் கிடைத்த பாராட்டாகக் (ஒரு வேளை, அது சந்தேகத்திற்கு உரிய பாராட்டாக இருக்கலாம்) கொள்ளலாம்:
 'பாரம்பரிய இந்தியாவிற்கு பொருளாதாரம் என்கிற பிரிவின் பொருத்தப்பாடு குறித்தும், மற்றும் இந்திய சமுதாயத்தில் அசையும் பொருட்கள், தட்டுமுட்டுச் சாமான்கள், பணம், வர்த்தகம் ஆகியவற்றில் சொத்தின் இடம் என்கிற அத்துடன் தொடர்புடைய பிரச்சனை குறித்தும் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் முதலாவதாக, அரசியலில் இருந்து சுயேச்சையான ஒரு தனிப் பிரிவாக பொருளாதாரம் தோன்றியது 18ம் நூற்றாண்டில்தான் என்கிற பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுகின்ற அடிப்படையான உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.'10
 மற்றொரு பத்தியில் அவர் பின்வருமாறு கூறுகிறார்:
 'பொதுவாக இந்திய இலக்கியத்திலும் நாகரீகத்திலும் காணப்படும் காலம், நிகழ்வுகள், வரலாறு ஆகியவற்றின் மீதான அலட்சியம் ஒரு வரலாற்று ஆசிரியரின் பணியை மிகவும் கடினமாக்குகின்றது....ஆனால், இந்த நிலைமைகளில் கிறிஸ்துவ நாகரீக வரலாற்றுடன் அல்லது சீன நாகரீக வரலாற்றுடன் கூட ஒப்பிடக் கூடிய அர்த்தத்தில் இந்தியாவிற்கென்று வரலாறு இருக்கிறதா?'11
 இதில் காணப்படும் அருள் பாலிக்கும் பாவனையால் இந்த வாதத்தின் வியக்கவைக்கும் குழந்தைத்தனத்தை மறைக்க முடியவில்லை. ஒரு நாடு வரலாறு குறித்த சிறந்த நூல்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் அந்நாட்டிற்கு வரலாறு என்றே ஒன்று இருக்காது என்பது போல், ஒரு நாடு பொருளாதார விஞ்ஞானத்தை வளர்க்கவில்லை என்றால் அந்நாட்டிற்கு பொருளாதார வரலாறே இருக்காது என்று நம்மை எண்ணிக் கொள்ளச் சொல்கிறார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதாத ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை மற்றவர் எழுதக் கூடாது என்று தடுக்கப்பட்டாலும் படலாம்.
 அவரது வாதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தபோதிலும் பெரும்பகுதி அறிவாளிகளை தன்பக்கம் திரட்டுவதில் டுமான்ட் வெற்றி பெற்றுவிட்டார் என்பது வெளிப்படை. பொருளாதார வரலாற்றை அரங்கிலிருந்தே வெளியேற்ற முடியவில்லை என்றால், பொருளாதாரக் காரணிகளைச் சிறுமைப்படுத்தலாம் அல்லது முக்கியமான வகைகளில் அலட்சியப்படுத்தலாம்: பின்நவீனத்துவம், நேமியரிஸ்ட் வரலாற்றியல் (சர் லூயிஸ் பெர்ன்ஸ்டைன் நேமியர்-இங்கிலாந்து வரலாற்றாசிரியர்), 'விளிம்புநிலை வர்க்கங்கள்' எனப்படும் பிரெஞ்சுக் கோட்பாடு, கீழ்நிலை மதங்கள் (அல்லது சாதிகள்), கீழ்த்திசை எதிர்ப்பு மற்றும் தேசிய இனவெறி ஆகிய அனைத்தும்,  'முழுமையான வரலாறு' என்று மார்க் பிளாக்கால் அழைக்கப்பட்ட கருத்தாக்கத்தை ஒட்டு மொத்தமாக அகற்றியது போல், இந்திய வரலாற்றிலிருந்து அதன் பொருளாதார கருமூலப்பகுதியை நீக்குவதில் தங்களுக்கு உரிய பங்கைச் செய்துள்ளன.

  2
 இந்திய வரலாற்றின் சில பிரச்சனைகள் பற்றி தோராயமான கால வரிசைப்படி ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன்; அவற்றுக்கு இந்த உலகமய-பின்நவீன காலகட்டத்தில் புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; அந்த விளக்கங்களில் பொருளாதாரம் கட்டாயமாக பின் இருக்கைக்கு தள்ளப்பட்டிருப்பது அல்லது முற்றிலுமாக கைவிடப்பட்டிருப்பது என்பது பொதுவான அம்சமாக இருக்கிறது.
 பொருளாதார வரலாறு பரிவர்த்தனையிலிருந்து துவங்குகிறது என்று வழக்கமாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் ஒருவரால் மற்றவருக்குக் கொடுக்கப்படுவதை அந்த கொடுக்கும் ஒருவரிடம் இருக்கும் உபரி அல்லது அவரது தேவைக்கு அதிகமாக அவரிடம் இருப்பது என்று கருதிக் கொள்ளலாம். ஆடம் ஸ்மித் இந்தப் பொருளில்தான் 'உபரி' என்கிற சொல்லை தன்னுடைய 1776ம் ஆண்டு 'வெல்த் ஆப் நேஷன்ஸ்' என்கிற நூலில் பயன்படுத்தியதாக ஆக்ஸ்போர்ட் அகராதி கூறுகின்றது. என்றபோதிலும், அத்தகைய உபரியை உண்டாக்கும் ஆற்றல் பெறப்பட்டவுடன் அது காலப் போக்கில் அந்த உபரி பறிக்கப்படுவதற்கான அடிப்படையாக ஆகிவிடுகின்றது; இந்த இரண்டாவது அர்த்தத்தில்தான் மார்க்ஸ் இந்த சொல்லைப் பயன்படுத்தினார் என்கிற உண்மையையும் அந்த அகராதி முறைப்படி அங்கீகரிக்கின்றது.12
 இந்த விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்கும் மார்க்சே இந்த உபரி குறித்த பிந்தைய கருத்தாக்கம் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தைவிட நீண்ட வரலாறு கொண்டது என்று குறிப்பிடுகிறார். எகிப்தில் உழைப்பின் விலை மிகக் குறைவாக இருந்ததால்தான் அங்கு மாபெரும் நினைவுச் சின்னங்களைக் கட்ட முடிந்தது என்று கிரேக்க வரலாற்றாசிரியர் டியோடோரஸ் சிக்குலஸ் (கிமு முதலாம் நூற்றாண்டு) வலியுறுத்தியதை மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார்.13 இந்தியர்களுக்குப் பொருளாதார நிகழ்வில் ஆர்வம் இல்லை என்கிற டுமான்டின் கருத்துக்கு மாறாக, 1693-94ல் எழுதிய பீம்சென் என்கிற வரலாற்றாசிரியர், தென்னிந்தியாவில் மிகக் குறைந்த கூலியில் மிக அதிக உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள் மிகப் பெருமளவு வருவாய் (மகசூல்) ஈட்டுவதற்கு வழி செய்ததால்தான் பெரிய பெரிய கோவில்களை அந்த ஆட்சியாளர்களால் கட்ட முடிந்தது என்பதைக் கூறுவதற்கு பீம்சென் (1693-94) என்கிற வரலாற்றாசிரியருக்கு போதுமான மதிநுட்பம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.14
 வி.கோர்டன் சில்டே என்கிற பிரசித்தி பெற்ற தொல்லியலாளர் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் முக்கிய வளர்ச்சிப் போக்குகளான விவசாயத்தின் தோற்றம் மற்றும் நகரங்களின் (அவற்றை அவர் புதிய கற்காலப் புரட்சி என்றும், நகரப் புரட்சி என்றும் அழைக்கிறார்) தோற்றத்தை விளக்கியபோது இந்த இரண்டு நிகழ்வுகளையும் இறுதியில் இணைப்பது உபரியே என்பதைக் கண்டறிந்தார். உபரியின் உற்பத்தியிலும், வெளியிலிருந்து வருபவர்களால் அது பறிக்கப்படுவதிலும் பலாத்காரம் (வென்றடக்குவது) ஒரு முக்கிய பங்காற்றியது என்று அவர் கூறினார். தனக்குத் தேவையானதை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்காக, தன்னுடைய புதிய எஜமானர்களுக்காக உற்பத்தி செய்வதற்காக கடுமையாக உழைக்கும்படி பலாத்காரத்தின் மூலம் விவசாயி கட்டாயப்படுத்தப்பட்டான்.15 கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்து சமவெளி நாகரீக நகரங்களை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு, அந்நகரங்களில் இருந்த அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு விவசாயிகள் உற்பத்தி செய்த உபரியால்தான் உணவு கிடைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.16
 சிந்து சமவெளி நாகரீகத்தின் பொருளாதார அடித்தளம் பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்தை கோசாம்பியும் அதே வழியில்தான் வளர்த்தெடுக்கிறார். நகரக் குடியிருப்புகளில் மக்கள் அடர்த்தி குறைவாக இருப்பதற்கு உபரி உற்பத்தி குறைவாக இருப்பதே காரணம் என்கிறார்; கலப்பை இல்லாததே உபரி உற்பத்தி குறைவாக இருப்பதற்குக் காரணம் என்கிறார்.17 கோசாம்பியின் (1956) காலத்திற்குப் பிறகு நடந்த ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும் நகர்ப்புற மக்கள் தொகை அடர்த்தி முன்னர் நினைத்தைவிட மிக அதிகமாக இருந்தது என்பதற்கும், சிந்து சமவெளி நாகரீகத்தில் எருதால் இழுக்கப்பட்ட கலப்பை பயன்படுத்தப்பட்டது என்பதற்குமான சான்றுகளை அளித்துள்ளன. ஆனால், சில்டேயும் கோசாம்பியும் கூறிய வர்க்கங்களுக்கும் உபரிக்கும் இடையில் அடிப்படையான உறவுகள் இருந்தது என்பதை இது பாதிக்காது.
 1960களின் பிற்பகுதியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்களின் சிந்தனையை ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய 'புதிய தொல்லியல்' முறையைக் (புராசெஸ்சுவல் ஆர்கியாலஜி எனப்படும் அதன் புதிய வடிவத்தைக்) கடைப்பித்தவர்களால் இந்தக் கருத்துக்கள் குறித்து இப்போது மிக நுணுக்கமாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதை விளக்கிக் கூறியவர்களில் அமெரிக்க அறிஞர் லூயிஸ் பின்போர்ட் முதன்மையானவர். இந்த சிந்தனை முகாம் தொடக்கத்திலேயே வரலாற்றுக்கு முந்தைய காலத்தை விளக்குவதற்கு செவ்வியல் தொல் பொருள் ஆய்வாளர்கள் பயன்படுத்திய வரலாற்று மரபை நிராகரிக்கின்றது. அதற்குப் பதிலாக அமெரிக்க மானுடவியலிள் பரிபாஷைகளைப் பயன்படுத்துகிறது. இவ்விடத்தில் 'அரசுக்குப்' பதிலாக தலைமையும், வர்க்க சமுதாயத்திற்குப் பதிலாக சிக்கலான அல்லது நுட்பமான சமுதாயமும், சுதந்திர வர்த்தக சந்தை பரிவர்த்தனை ஊகங்கள் மூலம் உபரி பிரித்தெடுக்கப்படுகிறது என்றும் அது வரையறுக்கிறது.18 
 சில்டே மற்றும் கோசாம்பி ஆகியோரை விமரிசித்து பின்வருமாறு எழுதுகிறார் ஷெரீன் ரத்னாகர்:
 'உபரி உற்பத்தி செய்யப்படுவதே (சிந்து சமவெளி நாகரீகத்தில்) சமூகத்தை அடுக்குகளாகப் பிரிப்பதற்கு மிக முக்கியம் என்று சிலர் கூறக் கூடும்; ஆனால், இதை நிரூபிப்பது மிகவும் கடினமாகும். இங்கு முழு விவாதத்தில் நாம் இறங்க முடியாது; ஆனால், என்ன நுகர முடியுமோ அதை விட அதிகமாக உற்பத்தி செய்வதுதான் உபரி (இது தவறான வரையறையாகும்) எனக் கருதப்பட்டால் ஒரு சமுதாயம் ஏன் தேவையின்றி அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுகின்றது. உபரி என்பது உண்மையில் விநியோகத்தின் ஒரு அம்சமாகும்......'19
 இந்த கூற்றுகள் கண்கூடான பிழைகளைக் கொண்டவையாகவும், அது போலவே கண்கூடான முரண்பாட்டைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. ரத்னாகர் கொடுக்கும் பிழையான வரையறை அவருடையதே ஆகும். சமுதாயத்திற்குத் தேவையானதை வட அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதுதான் உபரி என்று யாருமே கூறவில்லை. அதற்கு மாறாக, துவக்கநிலை உற்பத்தியாளரால் தான் உயிர் வாழ்வதற்குத் தேவையானதை விட அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதையே உபரி என்கிறோம். மேலும், உபரி விநியோகத்தைப் பாதிக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால், சமூகத்தை அடுக்குகளாகப் பிரிப்பதற்கான ஆதாரம் உபரியைப் பிரித்தெடுப்பதுதான் என்கிற கூற்றை நிரூபிப்பது எப்படி கடினமாகும்?'
 கப்பம், நில வாடகை அல்லது வரி என்று உபரியைப் பிரித்தெடுக்காமல் நகர கைவினை உற்பத்திப் பொருட்களை கிராமப்புற உணவுப் பொருட்களுக்கும், கச்சாப் பொருட்களுக்கும் பண்ட மாற்று செய்து கொள்வதன் மூலம் மட்டுமே சிந்து சமவெளி நாகரீகத்தின் நகர்ப்புற மக்கள் வாழ்ந்திருக்க முடியும் என்று எண்ணுவதன் மூலம் தொல் பொருள் ஆய்வாளர்கள் ஒரு பிரச்சனையை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது இப்படித்தான் நடந்திருந்தது என்றால், தொல் பொருள் ஆய்வாளர்களால் கிராமப்புற குடியிருப்புகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் கிராம மக்கள் தங்களது சொந்த உற்பத்திப் பொருட்களுக்கு பண்ட மாற்றாக பெற்ற பல வகையான நகர்ப்புற உற்பத்திப் பொருட்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இருக்கவில்லை. சிந்து பகுதியின் கிராமப்புற குடியிருப்புகளில் பொதுவாக கரடு முரடாக, உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மட்பாண்டங்கள்தான் கிடைத்தன. அப்படி எனில், நகர்ப்புறங்களுடன் உண்மையான பரிவர்த்தனை எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்பதும், கிராமங்களிலிருந்து உற்பத்திப் பொருட்கள் கப்பமாக நகரங்களை நோக்கிச் சென்றதுதான், ஒரு வழிப் போக்குவரத்துதான் பெரும்பாலும் நடந்தது என்பதும் கண்கூடு.
 சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய ஒரு அமெரிக்க தொல் பொருள் ஆய்வாளரின் சமீபத்திய நூல் ஒன்றில், சரக்கு பரிவர்த்தனையின் அடிப்படையில் நகரங்கள் எழவில்லை என்றது மட்டுமின்றி, அந்த நாகரீகத்தின் வரலாற்றை பரிசீலிக்கையில் பொருளாதாரக் காரணிகளை கண்காணாத தூரத்திற்கு பின்னுக்கு தள்ளிவிடுகிறார். சிந்து சமவெளி நாகரீகம் தன்னுடைய சூன்யவாதக் கொள்கைகளின் காரணமாக எழுந்தது, வீழ்ந்தது என்று கிரிகோரி போஷல் வாதிடுகிறார்; சூன்யவாதக் கொள்கை என்பது தெளிவாகத் தெரியாத, விளக்கப்படாத தனித்தன்மை கொண்டதாகும்.20 மென்மையாகச் சொல்வது என்றால், மொத்த கூற்றுமே போஷலின் சிந்தனையில் மட்டுமே இருக்கிறது; ஒரு வேளை, அந்த கூற்றுக்களை அதன் ஆசிரியர் எவ்வளவு நம்புகிறாரோ அதே அளவிற்கு எவ்வித போதனையும் பெறாத ஒரு வாசகர் நம்பாமல் போகலாம்.

  3

 இந்தியாவின் சமூக வரலாற்றில் சாதி அமைப்பு ஒரு முக்கியமான நிறுவனமாகும்; டுமான்ட்டின் 'ஹோமோ ஹெயரார்ச்சிகஸ்' தான் சந்தேகத்திற்கு இடமின்றி சாதியின் மீதான யுத்தத்திற்குப் பிந்தைய பெரிய சமூகவியல் வாக்குமூலம் என்று நமக்கு கூறப்படுகிறது.21 நாம் ஏற்கனவே டுமான்ட் பற்றி பார்த்துள்ளோம்; இந்திய சமுதாயத்தின் ஆய்வுக்கு வரலாறும், பொருளாதாரமும் தேவையற்ற விஷயங்கள் என்று அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறார். மொத்த சாதி கட்டமைப்புமே ஒரேயொரு தத்துவார்த்தப் பிறழ்வின் விளைவு என்று கூறுவதற்கு ஏற்ற வகையில் களம் தயார் செய்யப்படுகின்றது; சிந்து சமவெளி நாகரீகத்திற்கு உரியது என்று போஷல் கூறினாரே அதே சூன்யவாதக் கொள்கையின் வகையைச் சேர்ந்ததாக நாம் இந்த கூற்றை கருதலாம். தரவரிசைப் படுத்துதல் மற்றும் பிரித்து வைத்தல் உள்பட சாதி அமைப்பின் எல்லா உட்கூறுகளையும் 'தூய்மை அசுத்தம் எனும் எதிரிடைகளின் ஒரு உண்மையான ஒற்றைக் கோட்பாட்டிற்குள்' சுருக்கிவிடலாம் என்று டுமான்ட் கூறுகிறார்.22
 அதற்குப் பின்னர் அவர் 'ஹோமோ ஹெயரார்ச்சிகஸ்' என்கிற இந்தியக் கோட்பாட்டின் அடிப்படையாக இருக்கிற 'தூய்மை-அசுத்தம்' என்கிற மரபே சாதி அமைப்பை (அதன் வெவ்வேறு வடிவங்கள் அனைத்திலும்) உருவாக்குவதில் தீர்மானகரமான காரணியாக இருக்கிறது என்று கருதுகிறார்.
 பண்டைய இந்தியாவில் எங்கும் பரவியிருந்த தூய்மை மற்றும் தீண்டாமை ஆகிய கருத்துக்களின் இருப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனால், சாதி அமைப்பின் நடைமுறைகளால் என்ன மாதியான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன என்று கேட்கவும் கூடாதா? இந்த சமூக நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் அவற்றை நியாயப்படுத்துவதற்காக இந்த தூய்மைக் கோட்பாடு எவ்வளவுதான் பிரயோகிக்கப்பட்டாலும், அந்த சமூக நடைமுறைகளை அமலுக்குக் கொண்டு வருவதில் சமூக ஆதிக்க வர்க்கங்களின் பொருளாதார ஆதாயத்திற்காக எடுக்கப்படும் திட்டமிட்ட முயற்சிகளுக்கு பங்கில்லையா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்.
 ஒவ்வொரு சாதிக்கும் இன்ன தொழில் என்று நிர்ணயிக்கப்பட்டதும், ஒவ்வொரு சாதிக்குள்ளும் அகமணமுறை கொண்டதுமான சாதி அமைப்பு ஒரு குறிப்பிட்ட வகையான உழைப்பு முறையைக் (அல்லது உற்பத்தி முறை-மொர்) கொண்டதாக இருக்கிறது; அது அடிமை முறை, பண்ணையடிமை முறை, சுதந்திர கூலி உழைப்பு முறை ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது என்கிற முக்கியமான கருத்தொன்றை 1954ம் ஆண்டு வெளியிடப்பட்ட தன்னுடைய கட்டுரை ஒன்றில் டி.டி.கோசாம்பி தெரிவிக்கிறார். உற்பத்தியின் மிக ஆரம்ப கட்டத்திலான வர்க்கமே சாதி என்றும், முதல் நிலை உற்பத்தியாளரிடமிருந்து (தொழிலாளி அல்லது விவசாயி-மொர்) உபரியைப் பறிப்பதற்கு மிகக் குறைந்த அளவே பலப்பிரயோகம் தேவைப்படுகின்ற வகையில் பொது புத்தியை உருவாக்கும் ஒரு மத முறையாகும் சாதி என்றும் அவர் வாதிடுகிறார்.23 எங்கும் நிலைநிறுத்தப்பட்ட சாதி உணர்வு வர்க்கச் சுரண்டலையும் வர்க்கப் பிரிவினையையும் சுரண்டப்படும் வர்க்கத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யவும், சுரண்டும் வர்க்கங்களுக்கு மக்களின் எதிர்ப்பை கட்டாயமாக நசுக்க வேண்டிய செலவில்லாமல் செய்யவும் ஆன கருவியாக சாதி அமைப்பை கோசாம்பி காண்கிறார். சொத்தின் மீதான ஏகபோக உரிமையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார உறவுகளின் கீழ் என்ன வாழ்க்கை நிலைமை இருந்திருக்குமோ அதைவிடவும் கீழான வாழ்க்கை நிலையை ஏற்றுக் கொள்ளும்படி வெவ்வேறு அளவிலான அடக்குமுறையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உடல் உழைப்பாளிகளான தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் ஆகியோர் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதையும் இத்துடன் சேர்த்துக் கூறலாம். இந்த முடிவிற்கு நாம் வந்துவிட்டால், சாதி அமைப்பினால் பெரும் பயனடைபவர்கள் அதை விளக்கிக் கூறும் பிராமண பூசாரிகளல்ல, ஆளும் வர்க்கங்களே (அவர்கள் எந்த சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும்) என்பது தெளிவாகிவிடும்.24
 சாதி அமைப்பு உருவாக்கப்பட்ட இரண்டு முக்கியமான வழிகளைப் பற்றி கோசாம்பி வலியுறுத்த முனைந்தார். ஒன்று, மானுடவியல் சம்பந்தப்பட்டது: இனக்குழுக்கள் ஒரு பொது சமுதாயமாக இணைக்கப்பட்டது; அதுவே சாதியின் அடிப்படையாக இருக்கிறது.25 மற்றொன்று மதம் சம்பந்தப்பட்டது: பூசாரிகள் என்ற முறையிலும், சட்டங்களை வகுப்பவர்கள் என்கிற முறையிலும் பிராமணர்கள் இடைவிடாமல் தலையிட்டது.26 என்றபோதிலும், சாதி அமைப்பை பிராமணர்கள்தான் உருவாக்கினார்கள் (அநேகமாக கோசாம்பியும் அப்படி நினைக்கவில்லை) என்று கற்பனை செய்வதும் கடினம்.
 சாதி அமைப்பின் தோற்றம் பற்றி நம்மிடம் இருக்கும் உண்மையான சான்றுகளைப் பார்த்தால், சாதி குறித்து வேதங்களில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதைக் காணலாம். நான்கு வர்ணங்கள் நிச்சயமாகக் குறிபிடப்பட்டிருக்கின்றன; ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தொழிலைப் பரம்பரையாகச் செய்து வரும், அகமண முறையால் பரஸ்பரம் தனிமைப்படுத்தப்பட்ட சாதிகளாக இல்லை; வர்க்கங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாதி அமைப்பை நியாயப்படுத்தும் கோட்பாடுகளில் மிக வலிமையானதான கர்மவினைக் கோட்பாடு (ஆன்மா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இடம் பெயர்தல்) ஒரு மையக் கோட்பாடாக முதன் முதலில் சமணத்திலும் பவுத்தத்திலும்தான் காணப்படுகின்றது. அங்கும் அது சத்திரியர்களால் காப்பாற்றப்படும் ஒரு ரகசியமாகவே காணப்படுகின்றது; பிராமணர்களால் காப்பாற்றப்படும் ரகசியமாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.27 மேலும், சாதி பற்றிய மிக மிகப் பழைமையான காலநிர்ணயம் செய்யத்தக்க சான்று புத்தர் காலத்தில், மத்திய கங்கைச் சமவெளியின் மவுரியர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த (மகத மற்றும் கோசலப் பேரரசுகள்) பாலி மரபில்தான் காணப்படுகின்றது. அப்படி எனில், நாமறிந்த சாதி அமைப்பு முதன் முதலில் இந்தப் பகுதியில், அக்காலத்திய பொருளாதார மாற்றங்களின் தூண்டலால், அமைக்கப்பட்டிருக்கக் கூடும்; பொருளாதார மாற்றங்கள் என்றால், அதிகரித்த வர்த்தகம் மற்றும் பண உறவுகள்; கோசாம்பி இவை குறித்து நம்மை கவனப்படுத்துகிறார்.28 கிமு 327-325ல் சிந்து வெளியில் அலெக்சாண்டரின் படையெடுப்புகள் பற்றிய கிரேக்கப் பதிவுகளில் எதுவும் சாதிகள் பற்றியோ அல்லது சாதி நடைமுறைகள் பற்றியோ மிகச்சிறிய குறிப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது; பிராமணர்கள் தத்துவஞானிகளாகவும், அமைச்சர்களாகவும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது தவிர. சாதிகள் பற்றிய முதல் கிரேக்கப் பதிவு மெகஸ்தனிசுடையதாகும் (கிமு 300); அவர் பாடலிபுத்திரத்தில் மவுரிய அரண்மனையில் கிரேக்க ஹெல்லினிஸ்டிக் அரச வம்சத்தைச் சேர்ந்த (அலெக்சான்டருக்குப் பிந்தைய-மொர்) தூதராக இருந்தவர்.29
 இந்த உண்மைகளிலிருந்து, கிமு 6 அல்லது 5ம் நூற்றாண்டில் மத்திய கங்கைச் சமவெளியில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களின் சமூக விளைவாகவே சாதி அமைப்பு அதன் அடிப்படையான பண்புக் கூறுகளுடன் தோன்றியது என்ற முடிவிற்கு நாம் நியாயமாகவே வரலாம்; பின்னர் பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகள் அதிகரிக்க அதிகரிக்க அது பரவத் துவங்கியது; குறிப்பாக, நடைமுறையில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஒரு அரசியல் அதிகாரத்தின் கீழ் மவுரியப் பேரரசு கொண்டு வந்த கிமு 3 மற்றும் 4ம் நூற்றாண்டுகளில் பரவத் துவங்கியது. இந்தக் கருதுகோள் உறுதியானால், ஒரு பகுதியில் நிலவிய பொருளாதாரச் சூழல்களின் நிர்ப்பந்தத்தினால் சாதி அமைப்பு உருவானதாகத் தோன்றும். சாதி அமைப்பு தோன்றிய பகுதியில் ஆதிக்க சக்திகளின் (சத்திரியர்கள், பிராமணர்கள் அல்ல)30 கட்டளைகளே பொருளாதார வேறுபாடுகளை சாதி வடிவில் வைப்பதற்கு உதவியிருக்கக் கூடும் என்றபோதிலும், சாதியின் வேர்கள் பொருளாதார வேறுபடுத்தல்களில் இருக்கின்றன. சாதிப் பழக்கம் வெளிநோக்கிப் பரவுவதில் பவுத்த, சமண துறவிகள், பிராமணர்கள் பாத்திரம் வகித்ததைப் போலவே மவுரியப் பேரரசின் அதிகார வர்க்கமும் ஒரு பாத்திரம் வகித்திருக்கக் கூடும். அப்படி எனில், அதைத் தொடர்ந்து சாதி நடைமுறைகளை தர்மசாஸ்திரத்தில் விதிகளாக வகுத்ததில் பிராமணர்களின் தனி வேறுபட்ட பங்களிப்பு இருந்திருப்பதைக் காணலாம்; இது அடிப்படையில் ஏற்கனவே சமுதாயத்தில் நிகழ்ந்துவிட்ட ஒன்றை ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. (இந்த தர்மசாஸ்திரங்களில் குறிப்பிடத்தக்க முதல் சாஸ்திரம் மனுஸ்மிருதியாகும்; அது கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது). இந்தப் புரிதலின் படி, பிராமணர்கள் இன்று சாதி அமைப்பை எப்படி பாதுகாக்கிறார்களோ அது போலவே வளர்ச்சி அடைந்த சாதி அமைப்பு பிராமணியத்தைப் பாதுகாத்தது).
 
  4

 காலனிய ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றிய கருத்துக்களைப் பரிசீலிப்பதற்கு நாம் இப்போது பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாம். முகலாயப் பேரரசு காலத்தில் (கிபி 6 முதல் 18ம் நூற்றாண்டின் துவக்கம் வரையிலும்), அரசால் விதிக்கப்படும் நில வரியே உபரியின் பெரும்பகுதியாக இருந்தது என்று கருதப்படலானது; தென்னிந்திய ஆட்சியாளர்களால் 1690களில் நிலத்திலிருந்து அதிக வருவாய் பெறப்பட்டது பற்றிய பீம்சேனின் கூற்றில் (இக்கட்டுரையின் முதல் பாகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) இந்த கற்பிதம் உள்ளிடையாகப் பொதிந்திருக்கிறது. நடைமுறையில் வரியையும் நில வாடகையையும் சமமாகப் பாவித்ததானது இந்தியாவில் மன்னரே அனைத்து நிலங்களுக்கும் உரிமையாளர் என்று ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் கூறுவதற்கு இட்டுச் சென்றது.31வரி-நிலவாடகைச் சமன்பாடுதான் பிரிட்டிஷ் வருவாய்த் தீர்வுகளின் (sமீttறீமீனீமீஸீt) துவக்கப் புள்ளியாகவும் இருந்தது. அது குறித்து ஜேம்ஸ் மில் மிக விரிவான கோட்பாட்டு ஆராய்ச்சி செய்தார்.32 பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இந்த துவக்க புள்ளி பற்றி எரிக் ஸ்டோக்ஸ் சுருக்கமாக பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:
 'அரசின் வருவாயில் பாதிக்கும் மேற்பட்டது நிலத்தின் மீது விதிக்கப்படும் வரியிலிருந்து பெறப்படுவதாகும்; விவசாயி உயிர்வாழ்வதற்குத் தேவையானதை மட்டும் அனுமதித்துவிட்டு, கிட்டத்தட்ட நிலத்தில் உற்பத்தியாகும் உபரி அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டதானது, இந்திய சமுதாயத்தின் கட்டமைப்பை வடிவமைப்பதில் தீர்மானகரமான செல்வாக்கு வெலுத்தியது'.33
 மத்திய கால இந்தியாவின் இந்தோ-பெர்சிய எழுத்துக்களை விரிவாக ஆராய்ச்சி செய்த பின்னர் இதே கருத்தை பல வருடங்களுக்கு முன்னரே டபிள்யூ.எச்.மோர்லன்ட் தெரிவித்திருந்தார். 'பருவ நிலைக்கு அடுத்தபடியாக, நாட்டின் பொருளாதார வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய காரணியாக ஆட்சி நிர்வாகமே இருந்தது' என்கிற கருத்தைக் கூறினார்.34
 எனினும், பனிப்போர் காலத்தில் மேற்குலகில் காற்று மாறி அடித்தது; பொருளாதாரத்தின் மீது அரசு செல்வாக்கு செலுத்துகிறது என்கிற அந்த உண்மையே சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது; காலனியத்திற்கு முந்தைய இந்திய அரசு பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியதையே மறுக்கும் அறிஞர்களின் படைப்புகள் பெருக்கெடுத்து வந்தன; பொருளாதாரம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது என்பதும், மத்தியத்துவப்படுத்தப்பட்டது என்பதும் மாயையே என்பதை அப்படைப்புகள் வலியுறுத்தின. 'மத்தியகால தென்னிந்தியாவில் விவசாய அரசும் சமுதாயமும்' என்கிற நூலை பர்டன் ஸ்டெய்ன் 1980ல் வெளியிட்டார். அதில் அவர் தனித்தனி பிரிவுகளால் ஆன அரசு என்கிற தன்னுடைய கோட்பாட்டை வளர்த்தெடுந்திருந்தார்; அதில் சாதி, மதம், இனம் ஆகியவை பிரிக்கப்பட்ட இறையாண்மையை பங்கிட்டுக் கொள்கின்றன. அவரது கருத்துக்கள் சி.ஏ.பைய்லியின் மீது உடனடியாக செல்வாக்கு செலுத்தியது போல் தோன்றுகிறது. விவசாய உற்பத்தியின் மதிப்பில் 40%ஐ ரொக்கமாக எடுத்துக் கொள்ள முகலாய அரசு முயற்சித்தது என்பதை ஏற்றுக் கொள்கிறார்; ஆனால், ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள் செழித்த நகரங்கள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் நிலைமையில் முகலாய அரசின் வீழ்ச்சியால் ஏற்படும் விளைவுகளைக் காண மறுத்தார்.35 1985ல் பிராங்க் பெர்லின் 'பொருளாதார வரலாறு முகலாய மற்றும் மராத்தா ஆட்சிகளின் அடிப்படையில் விளக்கப்படுவதற்கு' எதிராக இடித்துரைத்தார். அவற்றில் இடைநிலை சக்திகளின் இணக்கமற்ற தன்மையை அலட்சியப்படுத்திவிட்டு பொருளாதாரத்தில் அரசின் தலையீடு குறித்து மிகைப்படுத்தப்படுகின்றது.36 அதற்கடுத்த ஆண்டு ஆன்ட்ரே விங்க் தன்னுடைய 'பிட்னா' என்கிற விநோதமான கோட்பாட்டை முன்வைத்தார்; அந்த கோட்பாட்டின் படி முகலாய அரசை பெயரளவிற்கான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாக அவர் பார்த்தார்.
முகலாயப் பேரரசிற்கும் மராத்தா விரிவாக்கத்திற்கும் இடையில் ஒரு நேரடியான தொடர்ச்சியை அவர் கண்டார்; பிரிட்டிசார் இந்தியாவை அடிமைப்படுத்தியதையும் அந்தப் போக்கின் ஒரு பகுதியாகவே அவர் கருதினார்.37 சி.ஏ.பைய்லியின் கருத்துக்களை முசாபர் ஆலம் தன்னுடைய 'முகலாய வட இந்தியாவில் பேரரசின் நெருக்கடி' (1986) என்கிற நூலில் அப்படியே எடுத்துப் பயன்படுத்தினார். அந்த நூலின் தலைப்பில் நெருக்கடி என்கிற சொல் இருந்தபோதிலும் பேரரசை அதன் இறுதி நாட்களில் பாதித்த வரி விவசாயம் (வரிக்காக விவசாயம் செய்தல்) போன்ற கொடுங்கோல் நடைமுறைகளிலும் அவர் வளர்ச்சி இருந்ததாக பாசாங்கு செய்தார்.38
 இந்த அரசை மறுக்கும் போக்கு இருந்ததை ஏற்றுக் கொள்வது என்பது இந்த தளத்தில் அக்கோட்பாட்டின் ஆதிக்கம் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்வதாக ஆகாது. அக்கோட்பாட்டின் ஆதரவாளர்களுடைய நூல்களை எம். அக்தர் அலி மிகக் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாக்கினார்.39 முகலாயப் பேரரசின் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்த சிரீன் மூஸ்வியின் முக்கியமான நூல் ஒன்று 1987ல் வெளிவந்தது. முகாலய இந்திய பற்றிய ஏராயமான தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டிருந்தன; அந்த அளவிற்கு தரவுகளுடன் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் வேறு நூல் எதுவும் வரவில்லை.40 1993ம் ஆண்டு ஜான் ரிச்சர்ட்ஸ் என்பவர் தன்னுடைய மேற்கத்திய சகாக்கள் பலரின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டு மத்தியத்துவப்படுத்தப்பட்ட முகலாய அதிகாரம் இருந்தது என்பது ஒரு யதார்த்த உண்மை என்றும், இந்திய சமுதாயத்தின் மீதான அதன் தாக்கங்கள் கணிசமானவை என்றும் கூறினார்; இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தனிப்பிரச்சனை என்றும் நியாயமாகவே கூறினார்.41
 முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாதாரங்கள் குறித்த உள்ளார்ந்த அக்கறையுள்ள ஆய்வுகள் எதிலும் அரசின் நில வரிப் பிரச்சனை மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தியாவில் நிலவிய வரி-வாடகை சமன்பாடு தன்னளவிலேயே ஒரு பொருளாதார ஒழுங்கமைப்பைக் குறிக்கின்றது என மார்க்ஸ் கருதினார் என்பது தெளிவு. 1853ம் ஆண்டு இந்தியா பற்றிய எழுத்துக்களிலிருந்து ஆரம்பத்தில் இது குறித்து பெறப்பட்ட அவரது ஞானம் பின்னர் தொடர்ந்து விரிவாக்கப்பட்டது. எப்படியாயினும் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றிய  விட்போஜெல்லின் இணக்கமற்ற மறுகட்டமைப்பை மார்க்சின் கருத்துக்களுக்கான ஒரு நம்பகமான வழிகாட்டியாக கொள்வது தவறாகும்.42 இந்தியாவில் விவசாய உற்பத்தி தனிநபர்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக மார்க்ஸ் கருதினார் என்பது நிச்சயம். சாதி அடிப்படையிலான விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டதாக அவர் கிராம சமுதாயத்தைப் பார்க்கவில்லை; ஆனால், கிராமத்திற்குள்ளேயே ஆன ஒரு இயற்கையான பொருளாதாரத்தையும் சாதியால் தீர்மானிக்கப்பட்ட பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டது என்று கருதினார். கிராமம் உற்பத்தி செய்த உபரி தானியமாகவும், பணமாக மாற்றத்தக்க வகையிலும் பிரித்தெடுத்துக் கொள்ளப்பட்டது; பணமாக மாற்றத்தக்க வகையில் உபரி எடுக்கப்படும்போது உருவாகும் பரிவர்த்தனைப் பொருளாதாரம் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான ஒரு இணைப்பாக வளர்ச்சி அடைகிறது.43 முகலாயக் காலத்துப் பொருளாதாரம் பற்றிய அத்தகைய ஒரு விவரிப்பு இன்று வரையிலான ஆய்வுக் கண்டுபிடிப்புகளுடன் பொருந்திப் போகின்றது. அப்படி எனில், உற்பத்தி முறைகளின் வகைப்படுத்தல்களில் பொருளாதாரத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று பரிசீலிப்பது ஏற்கத்தக்கதாகும்.
 ஆசிய பாணி உற்பத்தி முறையை நிலப்பிரபுத்துவத்துடன் அடையாளப்படுத்த மார்க்ஸ் தயாராக இருக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.44 இந்த இரண்டு பொருளாதார அமைப்புகளும் முதலாளித்துவத்திற்கு முந்தையவை என்பதும், மார்க்ஸ் அவற்றை சிறு உற்பத்தி முறை என அழைத்தார் என்பதும் உண்மைதான்.45 ஆனால் இதற்கு அப்பால் அனைத்து அடையாளமும் முடிவுறுகின்றது. விடோல்ட் குலா நிலப்பிரபுத்துவம் குறித்து ஒரு விளக்கத்தை அளிக்கின்றார். அது பின்வருபவற்றை  வலியுறுத்துகின்றது.1) விவசாய உற்பத்தி சந்தைக்காக நடக்காது. வேறு வார்த்தைகளில் கூறினால், அதில் ஒரு இயற்கையான பொருளாதாரம் நிலவும். 2) பெரிய நிலப்பிரபு பண்ணையைச் சுற்றி அதனருகில் நிலவாடகைக்காக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட  விவசாயிகள் வாழ்கிற ஒரு கார்ப்பரேட் முறை நிலவும்.46 பெரும்பகுதி உபரி பரிவர்த்தனைப் பொருளாதாரத்திற்குள் நுழையும் இந்தியப் பொருளாதாரத்தை, நில வாடகைக்காக விவசாயிகள் கட்டாயமாக உழைப்பது என்பது நடைமுறையில் இல்லாத ஒரு பொருளாதாரத்தை ஏற்கத்தக்க எந்த நிலப்புரபுத்துவ அமைப்பு விதிகளுடனும் பெருந்திப் போகாது.
 டி.டி. கோசாம்பியும், ஆர்.எஸ்.சர்மாவும் இந்திய நிலப்பிரபுத்துவம் என வகைப்படுத்திய கிபி முதலாம் ஆயிரம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவில் நிலவிய நிலைமைகளுடன் குலாவின் வரையறை பொருந்திப் போகுமா என்பது தனிக் கேள்வி. இந்திய நிலப்பிரபுத்துவ நூற்றாண்டுகளில் சரக்கு பரிவர்த்தனை மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது என்பதில் பிற்தைய இரண்டு அறிஞர்களும் ஒத்த கருத்து கொண்டிருக்கிறார்கள்; உழைப்பு நிகழ்முறை வடிவம் எனும் முக்கியமான பிரச்சனையில் இருவரும் வெவ்வேறு கருத்து கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் அரை அடிமைத்தன விவசாய வர்க்கம் இருந்தது என்று ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார்; ஆனால், கோசாம்பி மறுக்கிறார்.47 மறுபக்கம், இந்திய நிலப்பிரபுத்துவத்தில் வரி-வாடகைச் சமன்பாடு நிலவியதா என்பது தெளிவற்றதாக இருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்படவில்லை எனில், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் மற்றும் ஆசிய பாணி உற்பத்தி முறை ஆகியவற்றுக்கும் இந்திய நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருந்தது என்பதை அளவிடுவது கடினமாகும்.

  5

 முகாலயர் காலத்தில் இந்தியாவின் உபரியில் பெரும்பகுதி வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்றால், அவை மீண்டும் ரொக்கப் பணமாக மாற்றப்படுவதற்காக விற்கப்பட்டிருக்க வேண்டும்; கைவினைக் கலைஞர்களின் உற்பத்திப் பொருட்களும் சரக்குகளின் வடிவத்தை எடுத்திருக்க வேண்டும்; அவை தானியமாகப் பெறப்பட்ட வரி அல்லது பணமாகப் பெறப்பட்ட வரியால் விலைக்கு வாங்கப்பட்டிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், முகாலயப் பேரரசின் பொருளாதாரத்ததால் குறிக்கப்படும் ஆசிய பாணி உற்பத்தி முறையில் ஒரு விரிவான சரக்கு உற்பத்தித் துறை இருந்திருக்க வேண்டும். அப்படி எனில், குறைந்த பட்சம் ஒரு கரு அளவிலாவது முகாலயப் பேரரசு காலத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ந்து கொண்டிருந்திருக்காதா என்கிற கேள்வி எழுப்பப்படலாம். 1944ம் ஆண்டு
 தான் எழுதிய முன்னோடியான ஒரு கட்டுரையில் வில்பிரெட் கான்ட்வெல் ஸ்மித் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.48 உண்மையான முதலாளித்து உறவுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சில காரணிகள் பற்றி கவனப்படுத்தும் ஒரு ஆய்வு நானும் செய்தேன்.49 என்றபோதிலும், மூலதனம் நூலின் முதல் பாகத்தின் இறுதிப் பகுதியில் மார்க்ஸ் மிகச் சிறப்பாக விவரித்துள்ள வகையில் ஆதி மூலதனத் திரட்டல் எதுவும் நடக்கவில்லை என்றால் அசலான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படும் சாத்தியம் இல்லை என்கிற அடிப்படையான அம்சம் மொத்த விவாதத்திலும் கவனிக்கபடாமல் விடப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.50
 முதலாளித்துவம் முதலில் வெற்றி பெற்ற இங்கிலாந்தில் ஆதிமூலதனத் திரட்டலுக்கு இட்டுச் சென்ற இரண்டு வகையான நிகழ்முறைகள் பற்றி மார்க்ஸ் இவ்விடத்தில் கவனிக்கிறார். முதலாவதாக, 18ம் நூற்றாண்டில் என்குலோசர் (பொது நிலங்களை தனியார் -நிலப்பிரபுக்கள்- பண்ணைகளாக மாற்றி அதில் விவசாயிகளை வைத்து விவசாயம் செய்விப்பது-மொர்) நிலங்கள் மூலம் ஆங்கிலேய விவசாயிகளிடமிருந்து உபரியைப் பறிப்பது மிக முழுமையான அளவில் நடத்தப்பட்டு மூலதனம் திரட்டப்பட்டது. இரண்டாவதாக, காலனிகளிலிருந்து பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்டு வந்த செல்வம். அதை மார்க்ஸ் பின்வரும் மறக்க முடியாத பத்தி ஒன்றில் தொகுக்கிறார்:
 'அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது; பூர்வகுடிகளை அடிமைப்படுத்தி, நிர்மூலமாக்கி, சுரங்கங்களில் புதைத்தது; கிழக்கிந்தியாவை வென்றடக்கிக் கொள்ளையடிக்கத் துவங்கியது; கருப்புத் தோலுடையவர்களை வர்த்தக ரீதியாக வேட்டையாடுவதற்காக ஆப்பிரிக்காவை குழிமுயல்பண்ணையாக ஆக்கியது; ஆகியவை முதலாளித்துவ உற்பத்தி சகாப்தத்தின் எழுச்சி மிகு விடியலைக் குறித்தன. எதைப் பற்றியும் கவலையற்ற இந்த  நடவடிக்கைகள் ஆதி மூலதனத் திரட்டலின் முதன்மையான இயங்கு விசையாக இருந்தன.'51
 இந்த பத்தியில் சொல்லப்பட்ட ஒவ்வொரு கருத்தும் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. புதைகாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் 1518ம் ஆண்டிலிருந்து துவங்கிய ஸ்பெயின் ஆதிக்கத்தின் முதலாம் நூற்றாண்டில் மத்திய மெக்சிகோவில் இருந்த அமெரிந்திய மக்கள் தொகை 25 மில்லியனிலிருந்து வெறும் ஒரு மில்லியனாக வீழ்ச்சி அடைந்ததை நிரூபித்திருக்கின்றன.52 அவ்வளவு மலிவாக செலவிடப்பட்ட அமெரிந்திய ரத்தம் வெள்ளிப் பாளங்களாக மாற்றப்பட்டன; 1493 லிருந்து 1700 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்கா ஸ்பெயினிற்காக 51000 டன்கள் வெள்ளி உற்பத்தி செய்தது; அக்கால கட்டத்தில் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளியில் அது 81 விழுக்காடாகும்.53 இது உலக வர்த்தகத்தில் மேற்கு ஐரோப்பாவின் வாங்கும் சக்தியை மிகப் பெருமளவு பலப்படுத்தியது. எரிக் ஜே ஹாமில்டன் வலியுறுத்தியது போல், விலை மறு மதிப்பீட்டின் மூலம் ஐரோப்பாவில் உருவாகிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கத்திற்குச் சாதமான வகையில் செல்வத்தை மறு விநியோகம் செய்தது.54 மேற்கு ஐரோப்பாவிற்கும், குறிப்பாக பிரிட்டனுக்குள், மற்ற வழிகளிலும் செல்வம் பாய்ந்தது வந்தது; குறிப்பாக, அட்லான்டிக் கடல் கடந்த அடிமை வியாபாரத்தின் மூலம். 1700 வாக்கில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இங்கிலாந்தின் தொழிற் புரட்சி காலமான 18ம் நூற்றாண்டில் பெரும்பாலும் பிரிட்டிஷ் அடிமை வியாபாரிகளின் ஆதரவுடன் 6 மில்லியன் அடிமைகள் எடுத்துச் செல்லப்பட்டனர்.55 1767-1776க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகளில் அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்தில் 36% இந்திய ஜவுளிகள் வடிவில் இருந்தன; அவை இந்தியாவிலிருந்து பிரிட்டன் கப்பமாக பெற்றவையாகும்.56 1757ம் ஆண்டு பிளாஸ்ஸி யுத்தத்திற்குப் பின்னர் இந்தியாவிலிருந்தும், மேற்கிந்தியத் தீவுகளின் அடிமைப் பண்ணைகளிலிருந்தும் பிரிட்டன் பறித்தெடுத்துச் சென்ற செல்வத்தின் அளவை உத்சா பட்நாயக் மிகக் கவனமாக ஆய்வு செய்திருக்கிறார்.57 முதலாளித்துவத்தின் தோற்றம் பற்றிய வரலாற்றின் ஒரு பகுதியாக மொத்த காலனிய அமைப்பின் உருவாக்கத்தை அமியா பக்சியின் சமீபத்திய முக்கியமான நூல் ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.58
 கார்ல் மார்க்சின் எழுத்துக்களில் உலகளாவிய காலனியச் சுரண்டல்  வலைப்பின்னல் மற்றும் அதற்கு ஆதரவாகக் காட்டத்தக்க ஏராளமான சான்றாதாரங்கள் பற்றிய பத்தி முதலாளித்துவத்தின் தோற்றத்தால் பொருளாதார வரலாறு குறித்த ஆய்வை ஒரு நாடு அல்லது ஒரு பகுதிக்கு மட்டும் உட்பட்டதாக ஆக்குவது சாத்தியமில்லை என்பதைக் காட்டுகிறது; அப்படிச் செய்தால் பொருளாதார மாற்றங்களின் பின்னால் இருக்கும் காரணிகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. இங்கிலாந்தில் மூலதனத் திரட்டலுக்குதவிய காலனிய மூலாதாரங்கள் பற்றி பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் கவனம் செலுத்தவில்லை. எடுத்துக் காட்டாக, குரோசெட் என்பவர் அடிமை வியாபாரத்திலிருந்து வந்த லாபம் பிரிட்டனில் மூலதனத்தில் சேர்ந்திருக்கலாம் என்று ஏளனமாகக் குறிப்பிடுகிறார்; மார்க்சும் இத்தகைய அவநம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் கூட அவர் நினைத்தார்.59 மிகச் சிறந்த மார்க்சிய வரலாற்றாசிரியரான மோரிஸ் மேற்கொண்ட ஆதி மூலதனத் திரட்டல் குறித்த மார்க்சின் கருத்துக்களின் ஒரு தலைபட்சமான புரிதலும் இதற்கு பகுதியளவு காரணமாக இருக்கலாம். மார்க்சால் முற்றிலும் அனுமதிக்கப்படாத வகையில் ஆதி மூலதனத் திரட்டல் நிகழ்முறையை மிகவும் யதார்த்தமற்ற வடிவிற்குள் டோப் வைக்கிறார். அதை அவர் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கிறார்: கையகப்படுத்தும் கட்டம் (16ம் நூற்றாண்டு) 'கைகூடும்' கட்டம். அப்படிப் பிரிப்பது காலனிய அமைப்பை ஆதிமூலதனத் திரட்டலின் ஒரு காரணி என்பதிலிருந்து விலக்கி வைக்கிறது.60
 பிரிட்டிஷ் வரலாற்றியலில் நாம் எதைக் காண்கிறோமோ அதை இப்போது இந்தியாவில் காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியில் நிலவிய பொருளாதார அசமத்துவங்கள் பற்றிய தேசியவாத விமரிசனத்தின் மையமாக இருந்த கப்பம் அல்லது மூலதன வெளியேற்றம் மற்றும் சுதந்திர வர்த்தகக் கட்டத்தின் தொழில் நீக்கம் ஆகியவை பற்றிய பழைய விவாதங்கள் இப்போது எந்த கவனத்தையும் பெறுவதில்லை. 'இந்தியாவின் பொருளாதார வரலாறு (கேம்பிரிட்ஜ்)' எதிர்பார்த்தபடியே இந்த விஷயங்களை ஒதுக்கிவிட்டது; அதே பொருள் குறித்து தீர்த்தங்கர் ராய் எழுதிய நல்ல வரவேற்பைப் பெற்ற சற்று சிறிய சமீபத்திய நூல் ஒன்றும் அப்படியே செய்தது.61 நாம் நம்முடைய நிறைவுப் பகுதியில் காணப்போவது போல் இத்தகைய ஒரு மறதி பொருளாதார வரலாற்றாசிரியர்களுக்கு மட்டும் உரியதல்ல.

  6

 கடந்த ஐம்பதாண்டுகளில் நவீன இந்திய வரலாறு குறித்த இரு சிந்தனை முகாம்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. கேம்பிரிட்ஜ் முகாம் (காலனியாதிக்க முகாம்-மொர்) மற்றும் சபால்டர்ன் முகாம் (காலனியாதிக்கத்திற்கு ஆட்பட்ட மக்களின் முகாம்-மொர்) ஆகியவையே அந்த இரண்டு முகாம்கள். பொருளாதார அல்லது தேசிய மனக்குறைகள் போன்ற பெரிய காரணங்களைத் தவிர்த்துவிட்டு முன்னணி இந்தியர்களின் உள்நோக்கங்களைக் கண்டுபிடிப்பதற்காக சர் லூயிஸ் நேமியரால் பிரபலப்படுத்தப்பட்ட வழிமுறைகளைப் பிரயோகிக்கும் போக்கால் குறிக்கப்பட்ட முதலாவது முகாம்.
'இந்திய தேசியத்தின் தோற்றம்: 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போட்டியும் ஒத்துழைப்பும்' (கேம்பிரிட்ஜ், 1968)62 என்கிற தன்னுடைய நூலில் அனில் சீல் முதல் கணையை ஏவுகிறார். இந்திய 'அரசியல் கணக்கு' ஆராய்ச்சியை இங்கிலாந்து ஏதேனும் ஒருவகையில் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கக் கூடும் என்கிற எண்ணம் களங்கப்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. எப்படியாயினும் இந்தியப் பொறுப்பு (இந்தியாவை ஆள்வது) என்பது பிரிட்டிசாருக்கு ஏன் மிகப் பெரியதாகவும், லாபமற்றதாகவும் இருக்கிறது63 என்றும், இந்தியாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே பிரிட்டிசார் இந்தியாவில் இருப்பதற்கான காரணம் என்று ஊகித்துக் கொள்ளும்படியும் எழுதுகிறார். தாதாபாய் நௌரோஜியைப் பொருத்த வரையில், லண்டனில் தான் வசதியாக வாழும் நோக்கத்துடன் மட்டுமே அவர் இந்தியாவிலிருந்து செல்வம் வெளியேற்றப்படுவது மற்றும் இந்தியர்களின் வறுமை ஆகிய பிரச்சனைகளை எழுப்புகிறார். 'லண்டனில் வசதியான ஓய்வூதியம் பெறும் கனவு கண்டு ஏமாற்றமடைந்தது நௌரோஜி மட்டுமல்ல' என்றும் எழுதினார்.64 1870களில் பஞ்சங்களில் 5 மில்லியன் இந்தியர்கள் பலியானார்கள்; 1878-82ல் பிரிட்டிஷ் ஜவுளி இறக்குமதியின் மீதான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டன; அது இந்தியாவின் மொத்த ஜவுளித் தொழிலையும் ஆபத்துள்ளாக்கியது. எனினும் சீலால் பின்வருமாறு எழுத முடிகிறது: ' தேசிய இயக்கம் உருப் பெற்றுக் கொண்டிருந்த 1870கள் மற்றும் 1880களின் இந்திய அரசியல் கணக்கு வர்க்கக் கோரிக்கைகளின் தூண்டுதலாலோ அல்லது பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களாலோ அந்த இயக்கம் அமைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது'.65
 இந்தியர்களின் தவறான உள்நோக்கங்கள் பற்றிய இத்தகைய அனுமானங்களை ஜீடித் பிரவுன் எழுதிய 'அதிகாரத்தை நோக்கிய காந்தியின் எழுச்சி: இந்திய அரசியல்' (கேம்பிரிட்ஜ் 1972) மற்றும் 'காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும்' (கேம்பிரிட்ஜ் 1977) ஆகிய நூல்களிலும் காணலாம். அந்த இரண்டு நூல்களிலுமே அவர் ஆய்வு செய்யும் இரண்டு மகத்தான இயக்கங்களான 'ஒத்துழையாமை இயக்கம்' (1920-22) மற்றும் 'சட்ட மறுப்பு இயக்கம்' (1930-34) ஆகியவற்றின் பொருளாதாரப் பின்னணி பற்றி எதுவுமே இல்லை. மறுபுறமோ, நேமியரிசம் மற்றும் உடனடி சமூகவியல் ஆகியவைச் செயல்படுவது போல் தோன்றுகிறது; காந்தியின் பனியா சாதியை மனதில் கொண்டு அவரது சகாக்களை அவர் 'துணை ஒப்பந்தக்காரர்கள்'66 என்று அழைக்கிறார். கூ£ந்தி தன்னுடைய துணை ஒப்பந்தக்காரர்களுக்கு அளித்த ஒரே லாபம் பல்வேறு கால அளவிலான சிறைத்தண்டனை மட்டுமே மட்டுமே என்பதைப் பற்றி பிரவுனிற்குக் கவலையில்லை!
 1982ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரான ரானாஜித் குகா என்பவர் 'சபால்டர்ன் ஸ்டடிஸ்'67 (அடித்தட்டு மக்களின் ஆய்வுகள்) என்கிற நூல் தொகுப்புகளை வெளியிட்டார். 'காலனிய இந்தியாவின் வரலாற்றியலின் சில அம்சங்கள் குறித்து' என்கிற முன்னுரையில் மார்க்சிய சொற்கள் மற்றும் மார்க்சிய சிந்தனையாளர் கிராம்சி சிறையில் இருந்தபோது பயன்படுத்திய சங்கேதச் சொற்களைப் பெருமளவு பயன்படுத்தும் குகா இந்தியாவில் மார்க்சிய வரலாற்றியல் இருக்கிறது என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நடப்பிலிருக்கும் வரலாற்றியலை வெறுமனே 'காலனிய மேட்டுக்குடி இயல்' என்றும் 'முதலாளித்துவ தேசிய மேட்டுக்குடி இயல்' என்றும் வகைப்படுத்துகிறார். மற்றும் முதலாளித்துவ-ஜனநாயகம் அல்லது சோஷலிசம் என எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்களையும் வெறுக்கத்தக்க 'மேட்டுக்குடி' வகையில் சேர்த்து விடுகிறார். மூன்றாவது வரலாற்றியலான சபால்டர்ன் (அடித்தட்டு மக்கள்)68 வரலாற்றியல் ரானாஜித்தாலும் அவரது கூட்டாளிகளாலும் இப்போது உருவாக்கப்படப் போகின்றது. சாபல்டர்ன் சமுதாயங்கள் தங்களது வரலாற்றை மீட்டெடுக்க முயல்வார்கள் என்று அவர்கள் பற்றிய ஒரு கட்டுக்கதை உருவாக்கப்பட்டது. இத்தகைய வெற்றுப் புனைவுகளை பின்வரும் அதிகாரபூர்வ அறிவிப்புகளில் காணலாம்: 'மேட்டுக்குடி அரசியலில் அணிதிரட்டல்கள் செங்குத்தாக நடத்தப்பட்டது; அடித்தட்டு  மக்களின் அரசியலில் அது கிடை மட்டமாக நடத்தப்பட்டது'. கிடைமட்ட அணிதிரட்டல் என்பது எப்போதும் சாதிக்க முடியாத ஒரு வெறும் கற்பனையாகும்; கீழ்த்தட்டு மக்கள் மத்தியிலாகட்டும் அல்லது மேட்டுக்குடியினர் மத்தியிலாகட்டும் அது சாத்தியமில்லை. ஆனால், குகா மற்றும் அவரது சகாக்களைப் பொருத்த வரையில் பாரம்பரியமான கோட்பாடு அல்லாத வேறு எந்தக் கோட்பாட்டையும் கொண்டிருக்கிற அனைத்து இயக்கங்களும், உள்ளூரைச் சாராத எந்த தொலைநோக்கும் கொண்டிருக்கிற அனைத்து இயக்கங்களும் வெறுக்கத்தக்கவையாகும்.
 தங்களைத் தாங்களே சபால்டர்ன் வரலாற்றியலாளர்கள் என்று வர்ணித்துக் கொள்பவர்கள் மக்களின் மிகவும் பாரம்பரியமான பிரிவினரால் உள்ளூர் அளவில் எழுப்பப்படும் பொருளாதாரக் குறைபாடுகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே இதன் அர்த்தம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்திய மக்கள் அனைவருக்கும் அல்லது பெரிய வர்க்கங்களுக்கும் குறைபாடுகள் இருந்தன என்பது அவர்களது கவனத்தில் இருந்து தப்பிவிடுகிறது; ஏனெனில், தாதாபாய் நௌரோஜி, ரொமேஷ் சந்திர தத் அல்லது ஆர்.பி.தத்69 போன்ற 'மேட்டுக்குடி' ஆய்வாளர்களால் மட்டுமே இவ்விஷயங்களை ஆய்வு செய்ய முடியும்! மார்க்சின் மூலதனம் நூல் போல 'மேட்டுக்குடி' மேதமையால் மட்டுமே முதலாளித்துவம் நுட்பமாக தொழிலா¬ளியை சுரண்டுவதை அம்பலப்படுத்தியது போல! இப்படி பொருளாதாரம் மொத்ததையும் முற்றிலுமாக அலட்சியப்படுத்துவது சபால்டர்ன் வரலாற்றியலாளரின் விவரிப்பில் காலனியத்தைச் சேர்க்காமல் விட்டுவிட முனையும்; உள்நாட்டு நிலைமையில் ஒரு அல்லது மற்றொரு மேட்டுக்குடியினரின் ஆதரவாளராக அது தோன்றும் விஷயங்கள் தவிர மற்றபடி காலனியத்தை விவரிப்பிற்கு வெளியே விட்டுவிடவே அது முனையும். காலனிய இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்களான கப்பம், தொழில் நீக்கம், வரி மற்றும் கட்டண சூழ்ச்சிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வருமானப் பகிர்வு போன்றவை விஷயத்தில் தன்னுடைய கண்களை மூடிக் கொள்ளும் சபால்டர்ன் வரலாற்றியல் தன்னுடைய புகழை எப்படி நிலைநாட்டியது என்பது உண்மையிலேயே வியப்புக்குரியதாகும். சாபல்டர்ன் வரலாற்றாசிரியர்கள் இடைவிடாமல் தேசிய இயக்கத்தையும் அதன் லட்சியங்களையும் அவதூறு செய்வதால் (அவர்களின் தற்போதைய தாக்குதல் இலக்கு 'அரசு' மற்றும் 'தேசம்') அவர்களது எழுத்துக்கள் கேம்பிரிட்ஜ் முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவாக இந்தியா பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களுக்கும் உகந்ததவையாக இருக்கின்றன. அவர்களைப் போற்றும் எட்வர்ட் செய்த் போன்றவர்கள் கூட அவர்களது எழுத்துக்களை நவகாலனியத்தால் எளிதில் தங்களுடையதாகச் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆபத்தும், பன்னாட்டு நவகாலனியத்திற்கு இசைவானதாக இருக்கும் ஆபத்தும் இருப்பதாக எச்சரிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த பள்ளத்தைப் பற்றி அவர் எச்சரித்தார்;70 ஆனால், அவர்கள் வெகு காலத்திற்கு முன்னரே அந்த பள்ளத்தில் விழுந்து விட்டனர்.
 நமது கடந்த காலத்தின் பொருளாதார அம்சங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவதற்கான நேரம் நிச்சயமாக வந்துவிட்டது. மூலதனம் முதலாம் பாகத்தின் ஜெர்மன் பதிப்புக்கு 1873ம் ஆண்டு எழுதிய முன்னுரையில் அப்போது வந்து கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி பற்றி மார்க்ஸ் எழுதினார்; 'அது தனது செயற்களத்தின் சர்வவியாபாகத் தன்மையாலும், தனது செயலின் உக்கிரத்தாலும், புதிய, புனித பிரஷ்ய-ஜெர்மானியப் பேரரசின் துதிபாடிகளான திடீரென்று முளைத்த காளான்களின் மண்டையிலும் கூட இயக்கவியலைப் புகுத்தும்'.71 அந்த மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பப் புள்ளியில் மார்க்ஸ் இந்த வரிகளை எழுதினார்; அந்த நெருக்கடி 1896 வரை நீடித்தது. அதே காலகட்டத்தில் ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக சோஷலிசம் வலுவாக நிலைநிறுத்தப்பட்டது. இன்று நாம் அது போன்றதொரு நெருக்கடியின் பிரசவ வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்; அந்த நெருக்கடி அன்றாடம் ஆழமாகிக் கொண்டிருக்கிறது; சந்தை மற்றும் உலகமயம் ஆகியவை பற்றிய அனைத்துக் கட்டுக்கதைகளையும் அது அன்றாடம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆதலால், அடிப்படையான பொருளாதார உண்மைகளின் பால் நமது கவனத்தைத் திசை திருப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது; அது ஒன்றால் மட்டுமே கடந்த காலம் குறித்த நமது கண்ணோட்டங்களைத் திருத்திக் கொள்ளவும், எதிர்காலத்திற்கான பாதையை உறுதியாக வகுத்துக் கொள்ளவும் நமக்கு உதவ முடியும்.

No comments:

Post a Comment