My Blog List

Saturday 5 May 2012

இந்திய கழனிகளை மேய வரும் அமெரிக்க கோயில் காளை


அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத் துறை குத்தகைக்கு விடப்படுகிறது. இனி இந்தியக் கழனிகளிலும் காடுகளிலும் அமெரிக்கக் கோயில் காளைகள் சுதந்திரமாக மேயும். அதற்கான உடன்பாட்டில் மவராசன் நமது பிரதமர் மன்மோகன் சிங் பொற்கரங்களால் கையெழுத்திடப் போகிறார்.
பொதுவாக ஒரு நாடுதான் இன்னொரு நாட்டுடன் அந்த நாட்டின் அரசுடன் ஒப்பந்தம் காணும் ஆனால், புதுமையிலும் புதுமையாக அமெரிக்க விவசாய கம்பெனிகளை முன்னிறுத்தி நமது பிரதமர் உடன்பாடு காண்கிறார்.
விவசாயத் துறையைத் தனியார்மயமாக்குவது தாராளமயமாக்குவது என்று ஏற்கெனவே மன்மோகன்சிங் அரசு தீர்க்கமாக முடிவு செய்துவிட்டது. அதனைச் செயல்படுத்த அமெரிக்க கார்கில், மான்சாண்டோ விவசாய கம்பெனிகளை மன்மோகன் சிங் அரசு கொட்டுமேளத்தோடு அழைத்து வருகிறது.
சென்ற வாரம் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்க விவசாய கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளிப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்துவிட்டனர். அவர்களுடைய தேசபக்தியை எப்படி மெச்சுவது என்று தெரியாது திகைத்து நிற்கிறோம்.
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தவப் புதல்வன் மன்மோகன் சிங் வாஷிங்டன் சந்நிதானத்தில் எழுந்தருளினார். அப்போது அமெரிக்க விவசாய கம்பெனிகளை புது மாப்பிள்ளைகள் மாதிரி இந்தியா அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி முடிவு செய்துவிட்டார்கள். வழக்கம்போல் மூடிவைக்கப்பட்டிருந்த அந்த உடன்பாடு இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு அமெரிக்காவில் திவாலாகி வரும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இங்கே கடைதிறக்க அனுமதி அமெரிக்காவில் ஆட்டம் காணும் வங்கிகள் இங்கே பாய் விரிக்க அனுமதி அமெரிக்க டுபாக்கூர் பல்கலைக் கழகங்கள் இங்கே கிளைகள் தொடங்க அனுமதி என மளமளவென்று காரியங்கள் நடைபெறுகின்றன. இதே நிலை நீடித்தால் என்ன நடைபெறும்? இந்த பழம்பெரும் பூமி, அமெரிக்காவின் ஒரு காலனியாகிவிடும்.
இந்தியாவின் வாழ்வாதாரம் விவசாயம். அந்த விவசாய துறையை வியாபாரமயமாக்குவது அதற்கு அமெரிக்க விவசாய கம்பெனிகளை அழைத்து பூமி பூஜை நடத்திக் கொடுப்பது என்பதுதான் உடன்பாடாகும்.
ஒருபக்கம் அமெரிக்க மான்சாண்டோ பன்னாட்டு நிறுவனமும் இன்னொரு பக்கம் கார்கில் நிறுவனமும் ஓசையின்றி இங்கே அடியெடுத்து வைத்திருக்கின்றன. மரபணு மாற்றுப் பயிர்களைப் புகுத்த அவை தங்கள் விதைகளையும் வேறு சாதனங்களையும் விற்பனை செய்யக் காத்திருக்கின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை முறியடித்து இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாதை அமைத்திருக்கிறார்கள். அவைதான் உடன்பாடாகும்.
மான்சாண்டோ நிறுவனத்தின் பி.டி. பருத்தி விதைதான் முதன்முதலாக ஆந்திராவில் விவசாயிகளின் தற்கொலைப் படலத்தை தொடங்கி வைத்தது. அடுத்து பி.டி. கத்திரிக்காய் விதைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதற்கு நடு முழுமையும் எத்தகைய எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பின என்பதைப் பார்த்தோம். ஆனால் அதனைப் பற்றியெல்லாம் இனி கவலைப் பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை என்று மன்மோகன் சிங் அரசு கருதுகிறது.
உடன்பாடு முழுமையாகச் செயல் வடிவம் பெறும்போது பாரம்பரிய விவசாய முறைகள் அழியும். ஏற்கெனவே அழிவின் விளிம்பு நோக்கிப் பயணம் செய்யும். இந்திய விவசாயிகள் பள்ளத்தாக்கில் வீழ்வார்கள். இனி எவ்விதத் தங்குதடையுமின்றி மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயிர் செய்யப்படும். அதற்கு அந்த அமெரிக்க கம்பெனிகளின் விதைகளைத்தான் வாங்கவேண்டும். அந்த விதைகளை வேறு யாரும் உற்பத்தி செய்யக் கூடாது. பயிர் செய்யும் ஒவ்வொரு முறையும் அந்த கம்பெனிகளின் விதைகளைத்தான் வாங்க வேண்டும்.
உடன்பாட்டின்படி இந்திய அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த அமைப்பில் மான்சாண்டோ, கார்கில் போன்ற அமெரிக்க விவசாய கம்பெனிகளும் இடம் பெறும். ஓர் உற்பத்தியின் மீது யாருக்கு காப்புரிமை என்ற பிரச்சனை எழுந்தால், அதனை இந்த அமைப்பு தீர்த்து வைக்கும். அப்படித் தீர்வு காண முடியாவிட்டால் அமெரிக்காவில் தீர்ப்பு எழுதப்படும்.
இந்த அபாயகரமான, இந்திய விவசாயத்திற்கு நெருப்பு மூட்டுகின்ற இந்த அமைப்பை அங்கீகரிக்க நமது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்பது அமெரிக்க கம்பெனிகளின் நிர்ப்பந்தம். அதனையும் மன்மோகன்சிங் அரசு மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மன்ற மசோதா முன்மொழியப்பட்டது. பாரம்பரிய விவசாய முறையை பற்றி யார் சொன்னாலும் அவர்களுக்குத் தண்டனை உறுதி என்று இந்த மசோதா சிவப்பு விளக்குக் காட்டியது. இதற்கு மாநிலம் முழுமையும் எதிர்ப்பு, ஏற்பட்டதால் அரசு மசோதாவோ சட்டமோ செயலுக்கு வராது என்று முதல்வர் கலைஞர் தெரிவித்தார்.
மான்சாண்டோ கம்பெனிகளின் கள்ளக் குழந்தைதான் அந்தச் சட்டம் என்பதனை நாம் விளக்கி இருந்தோம். ஆனால், இப்போது தமிழகம் கைவிட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நடனமாடப் போகிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்பவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க அந்த மசோதா வகை செய்கிறது. ஆமாம், இந்திய விவசாயிகளுக்கு அமெரிக்கக் கைவிலங்கு காத்திருக்கிறது. பொன் விலங்குதான், பூட்டிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
விவசாய அறிவுசார் அமைப்பில் மூவர் குழு வானளாவிய அதிகாரம் படைத்தது. அந்தக் குழு எடுக்கும் முடிவினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கூட எதிர்க்க முடியாது. வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறது.
இந்த உடன்பாடு இந்தியாவின் உணவுத் தேவைக்குப் பாதுகாப்பு அளிக்குமாம். அதே சமயத்தில் இந்திய மண்ணில் சத்தான உணவுப் பொருட்களை விளையச் செய்து அதனை அமெரிக்கா வாங்கிக் கொள்ளுமாம்.
இந்தியாவில் இப்போது சோற்றுக்குப் பஞ்சமில்லை. இதுவரை நாமே திட்டமிட்டு நாம்தான் உணவு உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். எனவே, அமெரிக்க விவசாய கம்பெனிகள் நமக்கு எப்படி உதவி செய்யும்? என்ன உதவி செய்யும்? இன்னும் பத்தாண்டுகளில் உலகம் முழுமையும் தங்கள் கம்பெனி விதைகள்தான் விற்கப்பட வேண்டும் என்பது மான்சாண்டோ கம்பெனியின் குறுக்கோளாகும்.
புதிய கண்டுபிடிப்புகளை எலி, பூனை, பெருச்சாளி, குரங்கு, கோழி ஆகியவற்றுக்குக் கொடுத்து சோதனை செய்வார்கள். இப்போது நம்மை அந்தத் தரத்தில்தான் அமெரிக்க கம்பெனிகள் நிறுத்துகின்றன. அந்த கம்பெனிகள் கண்டுபிடித்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்திய மண்ணில் பயிர் செய்யப் போகிறார்கள். அதற்காக இந்திய விவசாயத் துறையையே மன்மோகன் சிங் அரசு குத்தகைக்கு விடுகிறது. நிலமும் பாழ்படும். மனமும் பாழ்படும்.
உள்ளம் உடைந்து போய்விடாதீர்கள். உடன்பாட்டில் இன்னும் பல பாம்புகள் படமெடுத்து நிற்கின்றன. அவற்றையும் பாருங்கள். அமெரிக்கத் தொழில்நுட்ப அடிப்படையில் அந்த கம்பெனிகள் இங்கே உணவுப் பொருட்களையும் அதற்காக சங்கிலித் தொடராக விற்பனை நிலையங்களையும் திறந்து வைக்கும்.
அந்த அங்காடிகள் ஏகபோக கம்பெனிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். வேண்டுமானால், அந்த அங்காடிகளில் நாம் எடுபிடி வேலை செய்யலாம். குப்பை கூட்டலாம், எச்சில் தட்டு கழுவலாம்.
உடபாட்டைச் செயல்படுத்துவதற்கான முதலீடுகளையும் செலவுகளையும் அமெரிக்க கம்பெனிகளே ஏற்றுக்கொள்ளும். பொதுவாக, பாரம்பரிய இந்திய விவசாயம் நம் கண்களுக்கு முன்பே தீவைத்துக் கொளுத்தப்படும். நமது பரம்பரை உணவுதானிய, காய்கனி உற்பத்திகளுக்குக் கொள்ளி வைக்கப்படும். அமெரிக்க கம்பெனிகளே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யப் போவதால் நமது உணவுப் பழக்கமும் ஒழிக்கப்படும். ஜெய்ஹிந்த்!
நன்றி: சோலை: குமுதம் ரிப்போர்ட்டர் 14.03.2010

No comments:

Post a Comment