My Blog List

Monday 30 April 2012

தொழிற்சங்கம் பற்றி


ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு கம்பெனிகளின் மற்றும் அவற்றின் தரகு கூட்டாளிகளும் தமது லாபத்தை பெருக்குவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மிக கொடூரமாக தாக்குதல் தொடுத்துவருகின்றன. குறிப்பாக 1990களுக்குப் பிறகு இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்த தொடங்கியவுடன் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடிகளை இந்திய போன்ற மூன்றாம் உலக நாட்டு உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதும் இங்குள்ள அனைத்து வளங்கள் மீதும் மலிவான உழைப்பு, மூலாதாரங்கள் மீது பெரும் ஏகபோகத்தை செலுத்தி வருகின்றன. இதற்கு சேவை செய்யக் கூடிய அடிவருடி கூட்டங்கள் தான் ஆட்சியாளர்களான இந்த தரகு முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள்.

உலகில் உள்ள பின்தங்கிய நாடுகளின் மீதான சர்வதேச நிதி மூலதனத்தின் கொடூரமான தாக்குதலை குறிப்பதற்கான ஒரு வார்த்தைதான் உலகமயமாக்கல் என்பது. உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி மூலதனம் அதுவும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகள் மீது மட்டுமல்லாது நாட்டின் அனைத்து சமூக அரசியல் வாழ்வின் மீதும் தனது ஆக்டோபஸ் போன்ற பிடிப்பை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை முக்கியமானதொரு கூறாகக் கொண்டுள்ள ஏகாதிபத்திய உலகமய கொள்கையின் செயலாக்கம் தொடங்கி இருபது ஆண்டுகளாகியுள்ளன. ஏற்கனவே இருந்த அரசுக் கட்டுப்பாடு ஏதும் இப்போது கிட்டத்தட்ட இல்லை. அதாவது நிரந்தரத் தன்மையுடைய வேலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துவது அல்லது ஆட்குறைப்பு செய்வது, தொழிற்சாலைகளை மூடுவது போன்றவை. இதுவே இப்போது நடைமுறை உண்மையாக இருக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் கூலியில் ஒரு அற்பமான அளவையே கூலியாகப் பெறுகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அமர்த்தப்படுவது வேகமாக அதிகரிக்கிறது. இது எதில் வெளிப்படுகிறது? உற்பத்திச் செலவுகளில் கூலிகளின் பங்கு குறைவதிலும் மொத்த வேலைகளில் ஒப்பந்த வேலைகளின் பங்கு அதிகரிப்பதிலும் இது வெளிப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது. இந்திய கம்பெனிகளுடைய மொத்த செலவுகளில் கூலிகளின் பங்கு 1991-92 நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருந்தது; 2002-03 நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறைந்தது.

உலகமயமாக்கல் காலகட்டத்தில் பனியமர்வுத் தரத்தை நிர்ணயிக்கும் எளிமையான அளவுகோளின் ஒரு முனையில் நிரந்தர வேலைமுறை என்பதும் மறுமுனையில் அமர்த்து துரத்து (hire and fire) ஒப்பந்த வேலைமுறையும் இருக்கிறது. அளவுகோளின் கீழ்முனையான அமர்த்து-துரத்து (hire and fire) வேலைமுறை என்ற இடத்திற்கு அனைத்துத் தொழிலாளர்களையும் தள்ளுவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும்.

1975க்குப் பிறகு பெரும் தொழிற்சாலைகளின் ஒவ்வொரு பிரிவும் துணைத் தொழில் (Ancillary unit) என்ற போர்வையில் சிறுசிறு தொழில்களாயின. இத்துணைத் தொழில்களில் பணிப்புரியும் தொழிலாளர்களின் ஊதியமானது பெரும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரின் ஊதியத்தைவிடக் குறைவாக ஆகிப்போனது.

1970களின் இறுதியில் சூடுபிடிக்க ஆரம்பித்த காஷூவல்மயம் (Casual Labour) போக்கனாது சீர்திருத்தம் ஆரம்பிக்கும்போது உச்சக்கட்டத்தை எட்டியது. காஷூவல்மயம் என்பது அசுர வேகத்தில் பயணம் செய்ய “அவுட்சோர்ஸ்” என்ற புதிய உத்தி உலகமயமாக்கல் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் மனிதர்களின் தலையை வெட்டுவதற்கு ஆட்கள் போதாமல் கில்லட்டின் இயந்திரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டதோ அதே போன்று வேலைவாய்ப்பை காலி செய்வதற்கு அவுட்சோர்ஸ் உத்தி முதலாளிய வர்க்கத்தால் பயன்படுத்தபட்டு வருகிறது.

அவுட்சோர்ஸிங் என்பது தொழிலின் கருவான நடவடிக்கைகளை மட்டும் நிறுவனத்தின் நேரடி செயல்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவற்றை நிறுவனத்திற்கு வெளியே உள்ளவர்களை வைத்துச் செய்வது. தற்போது அந்தக் கருவான நடவடிக்கைகள் கூட அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. அவுட்சோர்சிங் கொள்கை மூலமாக வெளியே செல்லும் நிர்வாக வேலையில் உற்பத்தி (production) மட்டுமே நிறுவனத்திற்கு வெளியே செல்வதில்லை. இதனுடன் சேர்ந்து நிதி நிர்வாகம் (Finance) கொள்முதல் நிர்வாகம் (Purchase) கணக்கு வழக்கு (Accounts and Administration) நிர்வாகம் மற்றும் பொருள்கையிருப்பு நிர்வாகம் (inventory) ஆகியவையும் சென்று இருக்கின்றன. இப்பணிகளில் மட்டும் அல்லாமல் அவுட்சோர்ஸ் ஆர்டர் பெறுபவரால் பணியமர்த்தப்படுபவரின் பணித் தரமானது காஷூவல் முறையை விடக் கேவலமாக உள்ளது.

மொத்தத்தில் அவுட்சோர்சிங்கானது தொழிலாளியைப் பொருத்துவரை நிரந்தரத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திலிருந்து ஒப்பந்தத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திற்கு மாற்றிவிட்டது.

இதன் விளைவு தொழிலாளி ஒரு வர்க்கமாக அணிதிரள்வதை தடுப்பதுதான் அடிப்படையாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அரசின் அறிக்கையில் கூறுவதாவது நாட்டில் 45.9 கோடி தொழிலாளர்களின் (விவசாய தொழிலாளிகள் உட்பட) 43.3 கோடி பேர் அமைப்பாக்கப்படாமல் உள்ளனர். அதாவது 94.33 சதவீதம் அமைக்காப்படாமல் உள்ளனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறையில் மட்டுமல்லாமல் சேவைத்துறையிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து, மருத்துவம், கல்வி, அஞ்சல், தொலைத்தொடர்புத், தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் பணிப்புரியும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமான நிமையில் உள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஊழியர்களை ஒப்பந்தத் தொழிலாளி மயமாக்கும் போக்கு உச்சக் கட்டத்திற்கு சென்று தற்போது இது டிரிப்ரேட் (Trip Rate) என்று மாறிவருகிறது. இது காஷூவல் முறையைவிட மோசமானது.

கல்வித்துறை மிகவும் மட்டமான பணியமர்வுத் தரமுடைய ஊழியர்களைக் கொண்டது இத்தொழில். கல்வியைத் தனியார்மயமாக்கியதும் ஆசியர்களின் பணிதரம் தாழ்ந்துபோனதும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்ச்சிப் போக்குகள் தனியார் கல்வி நிறுவனங்களின் நூறுசதவீத காஷூவல் ஆசிரியர் மூலமாக வெற்றிகரமாக வியாபரம் நடத்திவரும் தொழிலாக விளங்குகிறது.

தகவல் தொழில்நுடபம் பொறுத்தவரை இங்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் அமலாவதில்லை. இதில் 8 மணி நேர வேலை என்பது கிடையாது. சராசரியாக 9 மணிமுதல் 10 மணி நேரம் வரை உழைக்கிறார்கள் என்று நிறுவனங்களின் மனிதவளத் துறைகள் கூறினாலும் அது திட்ட ஒப்பந்தங்கள் (project) இல்லாத நாட்களில் வேலைப் பளு குறைவாக இருப்பதை குறிப்பதாகும். எனினும் திட்ட ஒப்பந்தங்கள் இருக்கும் நாட்களில் 14லிருந்து 16 மணி வரை வேலைநேரம் நீட்டிக்கப்படுகிறது. இத்தொழிலில் 35 வயதைக் கடந்தவர்களுக்கு இடமில்லை. 35 வயதைக் கடந்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே பணியாற்ற முடியும் என்பதால் தற்போது பணியிலிருக்கும் அனைவரும் அடுத்த பத்தாண்டுகளில் வேலையில்லாதவர்களாகி விடுவார்கள். அவர்கள் அனைவரும் வேறு வேலைக்கும் செல்ல முடியாது. ஆகவே தொழிலாளர் உரிமை, நலன் மற்றும் பணிப்பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ள சைபர் கூலிகள் (cyber cooli)தான் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள்.

பன்னாட்டு நிறுவனமும் மற்றும் தரகு முதலாளிகளும் தமது லாபத்தை அதிகபட்சமானதாக்கிக் கொள்வதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகின்றன. அதாவது தொழிலாளர் நலச் சட்டங்களைத் தளர்த்துவது விருப்பத்திற்கேற்ப வேலைக்கமர்த்திக் கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் உரிமையை இந்திய ஆளும் தரகு நிலப்பிரபுத்துவ அரசு உத்தரவாதப் படுத்தும் விதமாக 2008-2009 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு மூன்று பரிந்துரைகளை முன்வைக்கிறது.

அ) முதலாளி தன் விருப்பம்போல் வேலையிலிருந்து தொழிலாளியை வெளியேற்றுவதற்கான உரிமை.

ஆ) நிரந்தர தொழிலாளார்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் வைத்துக் கொள்வது.

இ) 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேர வேலையாக உயர்த்துவது.

போன்ற பரிந்துரைகளை பொருளாதார ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழிலாளர்களின் கொத்தடிமைக் கூடாரங்களாக உள்ளன. இங்கு தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எட்டு மணிநேர வேலை, தொழிற்சங்க உரிமை, வேலை நிறுத்த உரிமை, உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மலிவன கூலி உழைப்பின் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் அதீத லாபம் (super profit) பெருவதற்கு சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் வழிவகுக்கின்றன.

இந்தியாவின் கனிவளங்களும், மனித உழைப்பும் ஏகாதிபத்திய வாதிகளால் கேள்விக்கேட்பாரன்றி கொள்ளையடிக்கப் படுகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் ஒரு சங்கமாக ஒன்று சேர்ந்து இத்தகைய தாக்குதலை எதிர்த்து போராட வேண்டியது உடனடி பணியாகியுள்ளது.

முதலாளிய வர்க்கத்தால் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் பெருகுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு போர்குணமிக்க தொழிற்சங்க அமைப்பு தேவையாகியுள்ளது. அத்தகைய தொழிற்சங்கம் எவ்வாறு கட்டியமைக்கப்பட வேண்டும்? அதன் கடமைகள் என்ன? என்பதற்கு மார்க்சிய லெனினிய அடிப்படையில் ஒரு தெளிவான வரையரை வேண்டும்.

நம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்குமிடையே உள்ள இணக்கம் காணமுடியாத பகைமையை தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்டவேண்டும்.

மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதும் இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தொழிலாளர்களுக்கு ஊட்டுவதுதான் இன்றைய முதன்மையான கடமை.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க கூலி உயர்வுக்காக மட்டுமின்றி சொத்துடமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுதல் வேண்டும். தொழிற்சங்கங்கள் கூலி முறையைத் ஒழிப்பதற்கும் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார இழிவு கூலி உயர்வாக இருப்பதலோ குறைவாக இருப்பதிலோ இல்லை. தன் உழைப்பிற்குத் தன் உழைப்பின் உற்பத்திப் பொருள் முழுவதையும் பெறுவதற்குப் பதிலாகத் தன் சொந்த உற்பத்திப் பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டியிருப்பதுதான். அதன் மாபெரும் இழிவாகும் என்பதை எடுத்துறைக்க வேண்டும்.

ஆனால் தொழிற்சங்கவாதிகலும் திருத்தல்வாதிகளும் உழைக்கும் மக்கள் நடத்தும் அன்றாட நலன்களுக்கான போராட்டமும் வர்க்கப் போராட்டங்கள் என்ற தவறான கருத்தை மக்களுக்கிடையில் பரப்பி வருகின்றனர்.வர்க்கப் போராட்டம் குறித்து மார்க்சியவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றியும் மிதவாதிகள் கண்ணோட்டத்தைப் பற்றியும் வேறுபடுத்தி பின்வருமாறு லெனின் கூறுகிறார்.

 “ “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமாகும்” மிதவாத கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுள்ள சந்தர்ப்பவாதிகள் மார்க்சின் தெட்டத் தெளிவான இவ்வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை ஒரு வக்கிரமான முறையில் வியாக்கியானம் செய்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் என்போர், “பொருளாதாரவாதிகளும்”, அவர்களுடைய அண்ணன்மார்களான “கலைப்புவாதிகளையும்” உள்ளிட்டோர் ஆவர்.

வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற எல்லா மோதல்களும் ஒரு வர்க்கப் போராட்டம் என்று கருதுகிறார்கள். ஆகையால், அவர்கள் மிக உயர்ந்த, மேலும் வளர்ச்சிப் பெற்ற நாடு தழுவிய வர்க்கப் போராட்டத்தை அரசியலாக கருதாமல் ஒவ்வொரு ரூபிளுக்கும் அதிகமாக 5 கோபெக்குகளுக்காக (ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகமாக 5 காசுகளுக்காக உதாரணம் கூறலாம்)நடத்துகின்ற போராட்டத்தை “ஒரு வர்க்கப் போராட்டம்” என அங்கீகரிக்கிறார்கள்.இவ்வாறு பொருளாதாரவாதிகள் ஆரம்ப நிலையிலுள்ள வர்க்கப் போராட்டத்தைத்தான் அங்கீகரிக்கிறார்கள். அதனுடைய வளர்ச்சி பெற்ற வடிவத்திலுள்ள போராட்டத்தை அங்கீகரிப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் மிதவாத முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து எவ்வகையான போராட்டம் அவர்களால் மிகவும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றதோ அத்தகைய போராட்டங்களை மட்டுமே வர்க்கப் போராட்டம் என பொருளாதாரவாதிகள் அங்கீகரிக்கிறார்கள். மிதவாதிகளால் ஏற்க முடியாத உயர்நிலையிலுள்ள வர்க்கப் போராட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் தொழிலாளர் அரசியல் வாதிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் இம்முறையில் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய புரட்சிகரமான கண்ணோட்டத்தை நிராகரிக்கிறார்கள்.

மேலும் வர்க்கப் போராட்டமானது அரசியல் துறையைத் தழுவினால் மாத்திரமே அது உண்மையான நிலையான வளர்ச்சி பெற்றதாக ஆகிவிடுகிறது என்று சொன்னால் மட்டுமே போதாது. அரசியலிலும் கூட ஒருவர் தன்னை அற்ப விவகாரங்களுடன் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒருவர் இன்னும் ஆழமாகவும், அதனுடைய சாரத்தை அடையும் வரை செல்லலாம். வர்க்கப் போராட்டம் அரசியலை தழுவிக் கொள்வதோடு மட்டும் நிற்காமல், அத்துடன் அரசியலில் மிக சாராம்சமாக உள்ள அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சனையை தன் பிடிக்குள் கொண்டு வரும்போதுதான் அதை முழுமையான வளர்ச்சி பெற்ற ‘நாடு தழுவிய’ வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் அங்கீகரிக்கிறது.

அதற்கு மாறாக, மிதவாதமானது தொழிலாளர் இயக்கம் ஓர் அளவு பலம் அடைந்துவிட்டபோது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அது வர்க்கப் போராடத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை குறுக்கி, கட்டுப்படுத்தி, காயடிக்க முயல்கிறது; மிதவாதமானது அரசியல் துறையிலும் வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் துறையில் அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சினை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றி இவ்வகையாக மிதவாதம் திரித்துக் கூறுவது முதலாளிகளின் எவ்வகையான வர்க்க நலன்கள் இடமளிக்கிறது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல”.
(லெனின் தொகுப்பு நூல் எண் 19 பக்கம் 121, 122)

அரசியல் போராட்டமும் பொருளாதாரப் போராட்டமும்

அரசியல் போராட்டத்திற்கும் பொருளாதாரப் போராட்டத்திற்கும் உள்ள உறவு நிலையை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டம் பொருளாதாரப் போராட்டம் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டதுதான் வர்க்கப் போராட்டம்.

ஒரு புரட்சிகரமான சூழிந்லையில் வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக அரசியல் போராட்டம் இருக்கிறது; இரண்டாம் நிலையான அம்சமாக பொருளாதாரப் போராட்டம் இருக்கிறது.

பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்து ஒன்று மற்றொண்றின் சக்திக்கு மூலாதாரமாக அமைகிறது. இவ்விரண்டு போராட்ட வடிவங்களும் இணைக்கப்பட்டால்தான் ஒரு சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை தோற்றுவிக்க முடியும்.

அரசியல் போராட்டம் பற்றி நமக்கு ஒரு தெளிவான வரையறை வேண்டும். அதாவது தொழிலாளி வர்க்கம் தனது நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமைதாங்கி நடத்தும் போராட்டம்தான் அரசியல் போராட்டம்.

ஆனால் திருத்தல்வாத தொழிற்சங்கங்களும் ஆளும் வர்க்கத்தின் தொழிற்சங்கங்களும் பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் ஒன்றிணைப்பதில்லை. அப்படி ஏதாவது அரசியல் போராட்டத்தை நடத்தினாலும் அது தொழிலாளர்களின் தனி நலன்களுக்கான போராட்டமாகத்தான் உள்ளது.

தொழிற்சங்கப் போராட்டம் ஏன் மக்களிடையே அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ பெறுவதில்லை?

திருத்தல்வாதிகள் தொழிலாளர் போராட்டத்தை பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் இவ்வர்க்கங்களுக்கு தலைமைத் தாங்கும் வர்க்கப் போராட்டமாகவும் அரசியல் போராட்டங்களை நடத்துவது இல்லை.உண்மையில் பொருளாதார நலன்களுக்கான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதை எதிர்த்து தொடுக்கப்படும் ஒடுக்கு முறையை விட பிற வாழ்வுத்ட் துறைகளில் குறிப்பாக சாதிமத, மொழி இன ஒடுக்குமுறைகள் குறைவானதல்ல.

எனவே அரசியல் வகையில் பிற வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை தொடுக்கப்படும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஒடுக்குப்படுபவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஈடுபடும்போதுதான் அவர்கள் குறுகிய சுயநல உணர்விலிருந்தும் பின் தங்கிய தொழிற்சங்க உணர்விலிருந்தும் விடுபட்டு வர்க்க அரசியல் உணர்வைப் பெறுவது மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் ஆதரவைப் பெறுவதும் சாத்தியம்.

அறைகாலனிய அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு சமூக அமைப்பில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெறுவது மட்டுமல்லாமல் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில் வர்க்கப் போராட்டத்தின் மூலமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தி சோசலிச புரட்சியை நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறமுடியும்.

எனவே, தொழிலாளி வர்க்கத்திற்கு தலையாய பணியாக இருப்பது நாட்டையும் தன்னையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிற வர்க்கங்களை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அடிமைப்பட்டிருக்கும் வர்க்கங்களை திரட்டுவதுதான்.

Thursday 26 April 2012

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்


மாக்சிம் கார்க்கி -உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும், பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.
இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப் புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.
இளமைக்காலம்
கார்க்கியின் இளவயது வாழ்வு, துயரமும், கண்ணீரும், இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது, அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது -
“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத் தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக்கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும், நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே (Hyne) தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதயவலி பற்றி தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந் தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவ மனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்துவிட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையிலிருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.
முதல் கவிதை
ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான்.அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன். விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.
கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல்காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழி லாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரியிடமும் கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார்.அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது. கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.
அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். எனது பெரும் பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்தவரை அவரது கவிதை களைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவேயில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.
கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதி யிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.
மகனின் மரணம்
கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரைப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளி லிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவியுடன் பதில் எழுதினார்.
பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக் லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர் சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கி விட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.
உலகத் தொடர்புகள்
கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிற நாட்டு இலக்கியங்களைப் பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார்.பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்களிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜன நாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழிவாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன் கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.
குடும்ப வாழ்க்கை
கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும், மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமே படமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது.தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார். சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண் பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்த மாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.
ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண் டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித் துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாப்பினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண் டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப்பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர்.இறுதியாக கார்க்கி பேசினார். மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடையிலும் பகட்டுத் தோற் றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது. அன்பனே! இனி மேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக் களுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார்.கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத் தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.
கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்க வழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார்.அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார். தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார்.ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத் துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.
அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில் தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார். சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும், திறமையையும் பாராட்டினார்.அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார்.உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.
உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாளர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப் புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்தமாக எடுத்துரைத் தார். “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளை யும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச் சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறு கிற கதைதான் உலகின் பேரதிசயமான கதை யாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத் தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.
கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உரு வாக்குவோர் மக்கள்தான்.இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்ற தாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங் களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.
எழுதக் கற்பித்த ஆசிரியர்
இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார்.அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.
கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகை களுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.
புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர் வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத் திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:
அன்புள்ள நண்பரே,
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித் திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதைக்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங் களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருக வேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடி யாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.
உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந் தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோ சனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள். இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சி களையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெற முடியும். எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர் கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன் தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.
கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதி யான விமர்சனங்களும் கடிதங்களும் விவாதங் களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம்.“அன்பர் களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர்களாகவும் சிறந்து விளங்க வேண் டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.
இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார்.லெனின் கார்க்கியின் வீட் டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.
கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக்கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல் லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள ஆற்றுக்குப் போனாள்.தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண் களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால் கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.
கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந் தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப் படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித் துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார். வெளி நாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப் பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதி வந்தார்.கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளை யாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.
இலக்கிய மேதை
ரஷ்ய இலக்கியத்தில் பிற எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது கார்க்கியே எல்லா வழிகளிலும் சிறந்து விளங்கினார்.புஷ்கின், கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், லெர்மன் தோவ், கிராஸ்கோவ், ரேபின், லெஸ்கோ, ஆஸ்ட்ராவ்ஸ்கி ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்து கார்க்கி மனப்பாடம் செய்திருந்தார். அவர் டால்ஸ்டாயை ரஷ்ய மக்களின் உண்மையான தவப்புதல்வன் என்று கூறினார். புஷ்கின் பற்றி கார்க்கி “புஷ்கின் ரஷ்ய நாட்டின் மகத்தான கவிஞர். அவரது இலக்கியத் தொண்டு ரஷ்யாவுக்குப் பெருமை சேர்த்தது. புஷ்கின் அனைத்து ஆரம்பங்களின் ஆரம்பம்” என்று கூறினார்.
கார்க்கி அன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அள வற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாபெரும் கவிஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நேரம் கார்க்கி வெளியூரிலிருந்தார். பின்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் வேதனைப் பட்டார்.
சில தினங்களுக்கு முன்பாகவே அந்தக் கடிதம் கிடைத்திருந்தால் மாயகோவ்ஸ்கியின் மரணத் தைத் தடுத்திருக்க முடியும் என்று மிகுந்த துயர மடைந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி அரும்பாடுபட்டவர். அதனால் அவரது மரணம் கார்க்கியை உலுக்கிவிட்டது.
கார்க்கி கணித நூல்களைத் தவிர மற்ற எல்லா நூல்களையும் படிப்பார். தத்துவம், ஆன்மிகம், உளநூல் ஆகிய நூல்களையும் பொறுமையாக வாசிப்பார். ஒருமுறை சில அமெரிக்க விஞ்ஞானி கள் அவரைக் காண வந்திருந்தனர். அவர் களுடைய ஒரு கேள்வி கணிதம் பற்றியதாக இருந் தது. அதற்கு கார்க்கி “கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கி விடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை” என்று கூறினார்.
கார்க்கி குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவார். அவருக்குச் சிறுவயது முதலே அனா தைக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பசியாற்றி அனுப்பும் பழக்கம் அவருக்கிருந்தது. 1898இல் அவரது கதைகள் அனைத்தும் தொகுப் பாக வெளிவந்தன. அப்போது அவருக்குக் கிடைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக் காகவே செலவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் கிடைத்தது. ஏராளமான குழந்தைகளைத் தனது வீட்டில் திரட்டி அவர்களுக்குப் புதுஉடைகள், விளை யாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்து ஒரு திருவிழாப் போன்று கொண் டாடினார். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்வித்தார். கார்க்கி வெளியில் செல்லும் போது பையில் இனிப்புகளைக்கொண்டுபோவார்.வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்புவார்.
கார்க்கியின் தனிப்பெரும் பண்பு தொழி லாளி, விவசாயி, ஏழை மக்கள் மீது அவருக்கிருந்த கரிசனம் தான். அவர்களுடைய வளர்ச்சி, முன் னேற்றம் குறித்து அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவரிடம் ஆழமாக அவரது பேச்சிலும் எழுத் திலும் இந்த நம்பிக்கை ஒளிவு மறைவின்றி வெளிப் பட்டது.
கார்க்கி வாலிபராக இருந்தபோது நீட்சேயின் கவிதைகளை ஆழ்ந்து படித்தார். அவைகளில் அவர் தனது தத்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார். “வீழ்ந்து கிடக்கும் மனிதனை மேலும் வீழ்த்தாட்டு” என்பது அவரது தத்துவமாக இருந்தது என்று கார்க்கி கூறினார். மேலும் அவர் தாஸ்தவெஸ்கி தனது இலக்கியத்தில் புகுத்தி இருந்த தத்துவம் “கர்வமுள்ள மனிதனே, சரண டைந்துவிடு” என்பதுதான். என்னுடைய தத்துவம் “வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத் துத் தூக்கிவிடு” என்பதுதான் என்று கார்க்கி கூறினார்.
கார்க்கியின் துணைவியார் திருமதி பெஷ் கோவா அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருமுறை கார்க்கியுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமத்தில் அப்போது விவ சாயிகள் நாற்று நடுகை நடத்திக் கொண்டிருந் தார்கள். கார்க்கி அவர்கள் வேலை செய்வதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.நான் அவரைப் பரிவுடன் பார்த்தேன். அவர் “இருபதாண்டுகளுக்கு முன்பு நான் இந்த கிரா மத்திற்கு வந்திருக்கிறேன். இதே விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மெலிந்த உட லையும், உக்கி உருகிப்போன கண்களையும், வறுமையில் வாடிய அவர்கள் நிலையையும் கண்டு அன்று நான் கண்ணீர் வடித்தேன். மனம் தாங்காமல் அன்று நான் கண்ணீர் விட நேர்ந்தது. ஆனால் இன்று நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். இன்று சோசலிச ஆட்சியில் எனது தாய் நாட்டின் உழைப்பாளி மக்களிடம் உரு வாகியுள்ள ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தாயகத்தை வளர்ப்பதில் அவர்கள் காட்டும் கூட்டு முயற்சியும் அற்புதமானவை. அவர்களின் சிரித்த முகங்களும், இன்பமாய் ஒலிக்கும் கிராமிய கீதங்களும் என்னிடம் இன்பத்தை வாரியிறைப் பதைக் காண்கிறேன்” என்று கூறினார். அன்று விவசாயிகளோடு கார்க்கியும் பயிர் நட்டு அவர்களுக்கு உதவினார்.
ரஷ்யாவில் கார்க்கி கைதூக்கிவிட்ட மனிதன் அசுர சக்தி பெற்றவனாகி உலகிற்கே வழி காட்டியானான். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார். கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அழியாத சொத்து. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.

Wednesday 25 April 2012

ஜார்ஜ் தாம்சனும் பண்டைய கிரேக்கமும்


தாம்சன் (1903-1987)பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஈடுஇணையற்ற கிரேக்க மொழிப்புலமையாளர்; பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்த ஆய்வாளர்; மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்த்தெடுத்தவர். அவர் அயர்லாந்தின் மேற்குத் திசையில் உள்ள பிளாஸ்கெட் தீவுக்குச் சென்று அங்குள்ள பழங்குடி மக்களுடன் நேரில் பழகி, அவர்களின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆய்வு செய்தவர். அத்துடன் அய்ரிஷ் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். இப்புலமைப்பாட்டைக் கிரேக்கத் தொல்சீர் இலக்கிய ஆய்வுக்குப் படைப்பாக்கத்துடன் கையளித்தார்.
மார்க்சிய மெய்யியலால் ஈர்க்கப்பட்ட தாம்சன் பிரித்தானியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ‘சோசலிசத்திற்கான பிரித்தானியப் பாதை’ என்னும் திருத்தல்வாதத் திட்டத்தை எதிர்த்துக் கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் எழுதிய ‘மார்க்ஸ் முதல் மா-சே-துங் வரை’, ‘முதலாளியமும் அதன் பிறகும்’, ‘மனித சாரம்’ ஆகிய மூன்று நூல்களும் அவரது மார்க்ஸியப் பார்வையை வெளிப்படுத்தும். இந்நூல்கள் மார்க்சிய அடிப்படைக் கல்விக்கான நூல்களாகவும், மார்க்சிய முறையியலைக் கற்பிக்கும் நூல்களாகவும் விளங்குகின்றன. தமிழாய்வுலகில் பெருஞ்சாதனைகள் புரிந்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரின் கலாநிதி பட்ட நெறியாளராக விளங்கியவர் ஜார்ஜ் தாம்சன்.
இங்கிலாந்தில் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தேசியத் தொல்சீர் இலக்கியக் கழகத்தின் கௌரவத் தலைவராகப் பணியாற்றியவருமான ரிச்சர்ட் ஸீஃபோர்டு Reciprocity and Ritual : Homer and Tragedy is Developing City - state, Money and the early Greek Mind : Homer, Tragedy and Philosophy உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களையும் சுமார் 70 பெருங்கட்டுரைகளையும் எழுதியவர். இவர் ஜார்ஜ் டெர்வென்ட் தாம்சன் 1987-இல் மறைந்ததையொட்டி, 1989 - இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாம்சனின் வாழ்வும் பணியும் என்ற கருத்தரங்கில் Thomson and Ancient Greece என்ற தலைப்பில் வாசித்தளித்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இக்கட்டுரை.
தாம்சன் எழுதிய ‘Pre-Historic Athens’, ’Aeschylas and Athens’, ‘First Philosophers’ ஆகிய நூல்களில் அவர் நாடகம் ஆகியவற்றின் தோற்றம், சமூக உருவாக்கம், கிரேக்கப் பண்பாட்டு உருவாக்கம் ஆகியவற்றை எப்படி ஆய்வு செய்துள்ளார் என்று ரிச்சர்ட் ஸீஃபோர்டு இக்கட்டுரையில் நோக்கியுள்ளார்.
நாடகம் எவ்வாறு தோன்றியது? அருவமான சிந்திப்பு எவ்வாறு தொடங்கியது? இந்த இரண்டு கேள்விகளின் மூலம் பல வினவுப் பெருள்கள் பற்றி ஜார்ஜ் தாம்சன் மிகப் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார். இவை மிகவும் சுவையானவை; நம்மை நாமே புரிந்துகொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த இரண்டு வினாக்களுக்கும் விடையளிப்பதற்கு, பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய ஆய்வு மிக மிக இன்றியமையாதது. இன்று வரை இத்தகைய பிற அடிப் படைக் கேள்விகளை எழுப்ப விரும்பாத தொழில்முறை கிரேக்க மொழிப் புலமையாளர்கள் இவற்றுக்கான பதில்கள் பெரும்பாலும் வெறும் ஊகங்களாகவே இருக்கும் என்று விடையளிக்கின்றனர்.
அந்த ஊக விடை தவறானதாகவே இருக்கும். ஆனால், சில கேள்விகள் கேட்கப்படாததற்கு உண்மை யான காரணம் ஊகம் மட்டுமே செய்வதுதான். பழம் இலக்கிய ஆய்வுகளில் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஊகம் செய்யப்படுகிறது என்பது தொல்சீர் இலக்கியப் புலமை வாய்ந்த யாவரும் அறிந்ததே! தொல்சீர் இலக்கியப் புலமையில் ஊகம் என்பது போதுமான அளவுக்கு மதிப்பார்ந்ததுதான். ஆனால், அவ்வூகம் வரம்புக்குட்பட்ட சூழல் சார்ந்ததாகவும், அனுபவம் சார்ந்ததாகவும் இருந்தால் மட்டுமே மதிப்புடையதாகும். இப்படிப்பட்ட கேள்விகள் ஏன் கேட்கப்படுவதில்லை என்பதற்கான உண்மையான காரணங்களில் முதலாவது அவை மிகவும் சிக்கலானவை. அத்துடன் சுருக்கமாகக் சொன்னால் அக் கேள்விகளைக் கேட்பதற்கு தாம்சனிடம் இருந்ததைப் போன்று பல்துறைசார் புலமை இணைவும், மிகவும் அதிஉயர் புலமைப் பயிற்சியும் தேவைப்படுகிறது. இரண்டாவது, அருவமான சிந்திப்பையும் நாடகத்தையும் உருவாக்கிய சமூக - வரலாற்று வளர்ச்சியைப் பற்றிய தேடலைத் தவிர, வேறு எந்த வகையாலும் இந்த வினாக்களுக்குப் பதில் அளிக்க முடியாது. கிரேக்க மொழிப் புலமையாளர்கள் பண்டைய கிரேக்கத்திலும் தங்கள் சொந்த சமூகத்திலும் நடக்கும் உள்ளார்ந்த போராட்டத்திற்கும், அப்போராட்டத்தின் பண்பாட்டு விளைவுகளுக்கும் இடையேயான உறவைப் புரிந்து கொண்டால் மட்டுமே வரலாற்று வளர்ச்சி பற்றிய தேடலை மேற்கொள்ள முடியும்.
இவ்வேளையில் நான் தெரிந்தெடுக்கிற இரண்டு சிக்கல்களும் வெறுமனே வரலாற்றுக்குரியவை அல்ல. கிரேக்க மெய்யியலும் கிரேக்க நாடகவியலும் முதன் முதலாகத் தோன்றி வெகுவிரைவிலேயே வியக்கத்தக்க அளவுக்கு உயர்ந்த இடத்தைப் பிடித்தன. அவற்றுக்கு நாம் சிறப்புக் கவனம் செலுத்தத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்தக்கூடிய குறிப்பிட்ட பண்புக் கூறுகள் (உதாரண மாக, சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலில் முரண் கூறுகளின் போராட்டம் அல்லது துன்பவியலில் வதை படுதலின் மையநிலை) உண்டு. தாம்சன் மெய்யியலும் நாடகமும் எப்படித் தோன்றின என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால், பண்டைய மெய்யியல், நாடகம் ஆகியவற்றின் தனித் தன்மைகளை அறிந்துகொள்ள முடியாமல் போவது எப்படி என்பதை எடுத்துரைத்தார். இந்த இரண்டு காரணிகளும் குறிப்பிட்ட வழிமுறையில் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவால் தொன்மம், சடங்கு ஆகியவற்றிலிருந்து தோன்றியவை.
இங்கே சில வேளைகளில், இந்தத் தோற்றுவாய்கள் மறுதலிக்கப்படுவதற்குக் காரணம் இவை அறியப் படாதவை என்பதாலல்ல; அத்தோற்றுவாய்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள் பொருத்தமில்லாதவை என்பதால்தான். இறுதியில் சடங்கிலிருந்து தொன்மம் அல்லது நாடகம் வழியே மெய்யியல் தருவிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்ட முடிந்தாலும்கூட, மெய்யியல் என்பது தொன்மம் அன்று; நாடகம் என்பது சடங்கும் அன்று. இந்த மறுப்பு என்பது இயங்கியல் அடிப் படையிலான உறுதியான மறுதலிப்பு. இக்கூற்று குறுகிய பார்வையில் விசித்திரமான, தான்தோன்றித்தனமான செருக்காகத் தோன்றலாம். உறுதியாகத் துன்பியலானது சடங்கு அன்று; துன்பியல் வேறொன்றாக நிலை மாற்றப் படும் சடங்கு. இதேபோல சாக்ரட்டீசுக்கு முந்தைய மெய்யியல் தொன்மச் சிந்திப்பு அன்று; வேறொன்றாக நிலைமாற்றப்படும் தொன்மச் சிந்திப்பு. தாம்சன் வறட்டுத் தனமான கொள்கைநோக்குக் கொண்டவர் இல்லை. ஆனால் ஒன்று எதிலிருந்து உருமாற்றம் பெற்றதோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று இல்லை; அதன் தோற்றுவாயை அறியாமல், அதன் சிறப்புப் பண்பைப் புரிந்துகொள்ள முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்துகிறவர்.
இந்தச் சுருக்கமான இடையீட்டுக்குப் பிறகு தாம்சனின் படைப்பில் வலுவான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். துன்பியலின் தோற்றுவாய்களைப் பற்றி அல்ல. (இங்கே தொகுத்துக் கூறுவதற்கு முடியாத அளவுக்கு இதுவொன்றும் சிக்கலான ஒரு பிரச்சினை இல்லையென்றாலும், ஏஸ்கைலஸ் எழுதிய ஒரேஸ்டியா நாடகத்தில் வரும் கடவுள் கதாபாத்திரங்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரேஸ்டீயா நாடகத்தின் கதை: அகமெம்னானின் மனைவி க்ளைடெய்ம்னெஸ்ட்ரா தனது கள்ளக்காதலன் அய்ஜிஸ்தோஸுடன் சேர்ந்து கணவன் அகமெம்னானைக் கொலை செய்கிறாள்; அதனை அறிந்த அகமெம்னானின் மகன் ஒரேஸ்டெஸ் தன் தாய் க்ளை டெய்ம்னெஸ்ட்ராவையும், அய்ஜிஸ்தோஸையும் பழிக்குப் பழியாகக் கொலை செய்கிறான். இந்தத் தாய்க் கொலைக்காக ஒரேஸ்டெஸைப் பழிதீர்க்கும் அணங்குகள் பழி தீர்க்கத் துடிக்கின்றன.
அவன் தனது காப்பாளரான அபல்லோ தெய்வத்தின் புனிதத் தலத்துக்குச் சென்று, அத்தெய்வத்தின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துவிட்டான். அதன் விளைவாக, அவன் ஏதென்சுக்குச் செல்கிறான். அங்கே ஒரேஸ்டஸுக்கும் பழிதீர்க்கும் அணங்குகளுக்கும் இடையே உள்ள வழக்கைத் தீர்ப்பதற்கான நீதிமன்றத்தை அப்பல்லோ நிர்மாணிக்கிறார். வழக்கை விசாரித்த ஏரியோபாகஸ் கடவுள்களின் மன்றம் ஒரேஸ்டெஸை விடுதலை செய்கிறது. இந்தத் தீர்ப்பினால் கோபமுற்ற பழிதீர்க்கும் அணங்குகள் ஏதென்ஸுக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழலை உருவாக்கு கிறது. ஆனால், அவர்களுக்கு நகரில் ஒரு முக்கிய பகுதி வழங்கப்படுகிறது. பழிதீர்க்கும் அணங்குகள் ஏதென்ஸை வாழ்த்திப் பாடுகின்றனர்; பானதீனையா என்னும் கிரேக்கத் திருவிழாவை நினைவூட்டுத் தீப்பந்த ஊர்வலம் நிகழ்கிறது. இப்படியாக நாடகம் நிறைவுறுகிறது.
இந்த வழக்கு நிகழ்வுக்கும், முடிவுக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன? பேராசிரியர் பேஜ் கூற்றுப்படி, “விசாரணைக் காட்சியே பார்வையாளர்களுக்கு வலுக்குறைந்ததாகக் தோற்றமளிக்கிறது. ஆனால் அதிலுள்ள தவறுகள் அதன் தூய தொல்பழமை நோக்கத்துக்கு உட்பட்டதாகக் கருதி ஏற்றுக்கொள்ளப் படலாம்”. இந்தக் கருத்துரையில் வரலாற்றுணர்வு கொஞ்சம்கூட இல்லை. பேஜ்-ஆல் நாடகத்தைச் சரியாக மதிப்பிட இயலவில்லை. காரணம், அவரால் நாடகத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. நாடகத்தின் வழக்குக் காட்சியில் தோன்றும் சிக்கல்களின் சமூக முக்கியத் துவத்தைப் பற்றிய தாம்சனின் விளக்கத்தை இங்கே குறிப்பிடுவதற்கு நேரமில்லை.
நம் பார்வையெல்லாம் அந்தப் பழிதீர்க்கும் அணங்குகளின் மீதுதான்! அவற்றின் நிலைப்பாடு என்ன? நீதிமன்றத்தில் அதுவரை சொல்லப் படாது முதன்முதலாகச் சொல்லப்பட்ட அந்த முதல் தீர்ப்புக்குக் காரணமான வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஒப்புதல் அளித்ததன் முக்கியத்துவம் என்ன? அவர்கள் அடைந்த தோல்விக்கும், தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இசைந்து போனதற்கு உள்ள முக்கியத்துவம் என்ன? மூலநூலின் வரையறைகளுக்குள்ளிருந்து தருவிக்கப் படும் இப்படிப்பட்ட வினாக்கள் தாம்சனை நூலுக்குப் புறத்தேயும், பின்னோக்கியும் இட்டுச் சென்றன.
ஏதென்ஸ் நகர் கிரேக்கத்தின் பிற பகுதிகளில் நிகழ்ந்த மனிதக் கொலை செய்யும் குற்றங்களையெல்லாம் வன்முறையால் ஒடுக்காது, நீதிமன்றங்களில் சட்ட பூர்வமாகத் தீர்த்து வைத்து அப்பகுதிகளைச் சீர்திருத்தியது என்றும், அத்துடன் பொதுவாக சமய சக்திகளால்தான் மனிதர்கள் நகரங்களை உருவாக்கினார்கள், சட்ட விதி களை நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் ஏதெனியர்கள் நம்பினார்கள். இதையே சற்று மாறுபட்ட நிலையில் நோக்கினால் நீதித்துறை நிறுவனத்தின் வளர்ச்சி, அரசு வளர்ச்சியின் திறவுகோலாக இருப்பதைப் பார்க்க முடியும். கொலை வழக்கு மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது என்ற காரணத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அரசு வலுவில்லாது இருக்கிற இடத்தில் அல்லது அரசே இல்லாத இடத்தில் குருதிக்காகப் பழி வாங்கும் மரபு, சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தல், (குறிப்பாக, கொலையாளி அதே இனக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால்) பரிகாரம் போன்ற வேறு வகையான நடை முறைகள் இருக்கும் என்று இனவரைவியல் மூலம் நாம் அறிகிறோம்.
பழிதீர்க்கும் அணங்குகள் தாய்வழி சமூகத்தின் குருதி உறவுமுறையின் ஆக்கம் என்று தாம்சன் அறிந்துகொள்வதற்கு இனவரைவியல் உதவி புரிந்தது. அவர்கள் ஏன் இறந்தவர்களின் உருவகமாகத் தோற்ற மளித்துப் பாம்புகளைத் தங்கள் கூந்தலில் அணிந்து கொள்கின்றனர் என்று அவர் அறிவதற்கும் உதவியது இனவரைவியல். மேலும் அவர்களுக்கு (பழிதீர்க்கும் அணங்குகளுக்கு) ஊழணங்குகள் (fates), மொய்ரே (Moirae) என்னும் கடவுள் மற்றும் பலருடன் உள்ள நெருங்கிய உறவை தாம்சன் அறிய இனவரைவியல்தான் உதவியது. உண்மையில், வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களை ஆய்வு செய்வதன் மூலம் எப்படி கிரேக்க மதம், பண்பாட்டை எடுத்துரைக்க முடியும் என்பதற்கான ஓர் உதாரணமாகவே இந்தப் பழிதீர்க்கும் அணங்குகள் புலப்படுகின்றன. அத்துடன் தாமஸ் ப்ளாஸ்கெட் தீவின் பண்பாடு, தொல்குடிப் பண்பாட்டை ஒத்திருந்ததையொட்டி, அரசுருவாக்கத்துக்கு முந்தைய பண்பாடு பற்றிய புலனறிவு பெற்றவராக தாம்சன் விளங்குகிறார் (தாம்சன் அயர்லாந்திலுள்ள மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்ட ப்ளாங்கெட் தீவு மக்களின் மொழி, பண்பாடு பற்றி நீண்ட காலம் களஆய்வு மேற்கொண்டவர் என்பதைக் கட்டுரையாளர் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார்).
தொன்மையான தொல்சீர் கிரேக்க வரலாறு, இரத்த உறவுகளின் அழிவில் தோன்றிய நகர அரசு, அரசு உருவாக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியாய் இருப்பதை நாம் பார்க்கிறோம். அத்துடன், வரலாற்றின் நிலை மாற்றம், அதாவது புழக்கத்திலிருக்கும் குருதிக்காகப் பழி வாங்கும் மரபு, பரிகாரம், தூய்மைப்படுத்தல், சமூகத்திலிருந்து விலக்கிவைத்தல் போன்ற முறைகளால் தீர்க்கப்பட முடியாத ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான மைய நீதி நிறுவனத்தின் தோற்றத்தை மிகச் சுருக்கமான வடிவில் ஒரேஸ்டியா நாடகத்தில் நாம் பார்க்கிறோம்.
இந்த நிலைமாற்றம் இரண்டு வகைப்பாடுகளில் தோற்றம்பெறுகிறது. முதலாவதாகப் பழைய நிலையி லிருந்து இயற்கையாக நீதிமன்றம் எழுகிறது. அதீனாவின் வழக்கு விசாரணையை இரண்டு தரப்பினர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இரண்டாவது, பழிதீர்க்கும் அணங்கு களால் எடுத்துரைக்கப்படும் பழைய நடைமுறை தர்க்க முறையால் புதிய நடைமுறையாக மாற்றப்படுகிறது. பழி தீர்க்கும் அணங்குகளுக்கு மரியாதையான இடம் வழங்கப் படுகிறது. அதன் மூலம் அவர்கள் தங்கள் கோபத்தை நல்லெண்ணமாக மாற்றிக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் படுகிறார்கள். இச்செயல் பழிதீர்க்கும் அணங்குகளின் பழைய நடைமுறை மீதுள்ள அச்சத்தையும், அதே வேளை அவர்களின் பழைய நடைமுறை வலுவிழந்து வருகிறது என்பதையும் புலப்படுத்துகிறது. பொதுவாக, நகர அரசினுடைய ஒலிம்பியன் மதத் தோற்ற வடிவில் சமூக அமைப்பில் தொடர்ந்து நீடித்து வரும் பழங்கால நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றின் தொடர்ச்சியை நாம் காணநேரிடுகிறது.
இந்த உதாரணம் மூன்று கூறுகளை விளக்குகிறது.
1.     தாம்சன் பண்டைய சான்றாதாரங்களுக்கு வெளியே ஆய்வு செய்து தனது கொள்கைசார் புரிதலைப் பெற்றுக்கொண்டார். அவரது தொடக்கம் கொள்கைசார் உருவரையாக இருக்கவில்லை. சான்றாதாரங்களால் தோற்றுவிக்கப்பட்ட குறிப்பிட்ட சில சிக்கல்களுக்கு மரபுவழி ஆய்வுக்குரிய வரம்புகளுக்குள் விடை காண முடியவில்லை. மரபுவழி ஆய்வுமுறையின் வரம்புகளைக் களைந்தெறிந்தார்.
2.     மூலப்பிரதியில் காணப்படும் முரணிலைகளை முழுதளவிய வரலாற்று நோக்கினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
3.     பழிதீர்க்கும் அணங்குகளின் பண்டைச் செயல் பாடு எளிதாக மறுக்கப்படவில்லை; மாறாக, அவர் களுக்கும், ஒரேஸ்டெஸுக்கும் இடையேயான முரணி லைக்குத் தீர்வு, புதிய ஒன்றாக உருப்பெறுகிறது. அந்தப் படிநிலையை நாடகாசிரியர் ஏஸ்கைலஸும், ஐயத்துக்கு இடமின்றி ஏதெனியர்களும் கூட உணர்ந்தறிகின்றனர். தாம்சன் ஏஸ்கைலஸின் திறன்மிக்க உரையாளர். எவ்வாறெனெனில் அவர் தனது நோக்குடன் இயங்கியல் அடிப்படைகளைச் சிறப்பான முறையில் இணைத்துக் கொண்டுள்ளார்.
பண்டைய கிரேக்கத்தைப்பற்றிய ஆய்வில் மானிடவியலைப் பயன்படுத்துகிற முதல் நபர் அல்லர் தாம்சன். இதனால், அவருக்கும் அவரது முன்னோடி களுக்கும் இடையேயான உறவைப் பற்றிய வினா என் மனத்துள் எழுகிறது. பல்வேறு வகைப்பாடுகளில் தாம்சன் கேம்பிரிட்ஜ் கிரேக்க மொழிப் புலமைப் பள்ளி என்றழைக்கப்படுகிறவர்களின் வழியில் வந்தவர். அவர்களுள் முக்கியமானவர்கள் ஜேன் ஹாரிசன், எஃப்.எம்.கார்ன்ஃபார்ட். கிரேக்க மதத்தைப் பற்றி ஜேன் ஹாரிசனின் படைப்பு, சமகாலத்தைப் பற்றிய ஆய்வின் மூலம் தர்கைம் எடுத்துரைத்த மதத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவு பற்றிய கோட்பாடு, அண்மைக்கால மானிடவியல், தொல்பொருளியல் வளர்ச்சி வழங்கிய புதிய சான்றுப் பொருட்களின் மூலம் அடையப்பட்ட புரிதல் முன்னேற்றம் ஆகியவற்றின் கூட்டிணைப்பு ஆகும். அவர் தாம் எழுதிய தீமிஸ் என்னும் நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மதம் என்ற கலைச் சொல்லுக்கான பொருள் விளக்கத்தோடு நாம் நமது பணியைத் துவங்குவது இல்லை.
மாறாக மதம் என்று நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்ம்மைகள் அனைத் தையும் சேகரிப்போம். அவற்றில் வெளிப்படும் மனிதச் செயல்பாடுகளிலிருந்தே மதத்தை நோக்குவோம்”. இந்நூல், கூட்டுச் செயல்பாட்டிலிருந்தும் உணர்ச்சி நிலையிலிருந்தும் தோன்றும் மதம்சார் மறுகையளிப்பு என்ற தர்கைமியக் கோட்பாட்டுடன் இணைந்து, கிரேக்க மதத்துக்கும், பழங்குடி சமுதாயங்களின் மதத்துக்கும் இடையேயான ஒத்த தன்மைகளைப் பற்றிய ஆய்வில் அடிப்படையான வளர்ச்சியாக இருந்தது. தற்போது மதத்தின் தோற்றுவாய் என்ற முறையில் சடங்குக்கு முக்கிய இடம் கொடுப்பது இன்னொரு முக்கிய நிகழ்வாகியது. சடங்கு என்பது சமுதாயம் சார்ந்த, கூட்டுச் செயல்பாடு. அதே வேளையில் சடங்கு, கலை, இலக்கியம், ஏன் மெய்யியலில்கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளது.
கிரேக்க இலக்கியம், தொன்மம், மதக் கோட்பாடு ஆகியவற்றின் பெரும்பாலான கூறுகளுக்குச் சமூகத்தின் சமுதாய பொருட்சார் தேவை களிலிருந்து தோன்றும் சடங்கே தோற்றுவாயாக அமை கின்றது. கிரேக்க மதம் முதல் பழைய கிரேக்க மெய்யியல் வரையிலான இந்த ஆய்வு முறையின் விரிவாக்கம், எஃப்.எம்.கான்ஃபார்டின் சாதனைகளுள் ஒன்று. குறிப்பாக அவர் பண்டைக்கால கிரேக்க அண்டக் கோட்பாட்டி லிருந்து ஹெலியாடின் ‘தியாகனி’யில் காணப்படும் அண்டத்தின் தோற்றத்தைப் பற்றிய ஒரு தொன்மத்தி லிருந்து தோன்றும் அடிப்படைகளையும், கிரேக்கச் சடங்கு முறையல்லாத, கிழக்கத்திய சடங்கான பாபி லோனிய புத்தாண்டு சடங்கிலிருக்கும் அடிப்படை களையும் எடுத்துரைக்கிறார்.
இப்போது இந்த நோக்குநிலையில்தான் கிரேக்கப் பண்பாட்டிற்கும், ‘மிக முற்பட்ட காலத்தியவை’ எனப் படும் பண்பாடுகளுக்கும் இடையேயான உறவுச்சிக்கல் மிகவும் முனைப்பாகத் தெரிகிறது. கேம்ப்ரிட்ஜ் பள்ளியின் போக்கு சடங்கு நிறைவேற்றுவதில் உள்ள கிரேக்கப் பண்பாட்டின் மூலப் பண்புகளையும், மிக முற்பட்ட காலத்திய பண்பாட்டிலுள்ள மூலப் பண்புகளையும் வெளிப்படுத்தி, அதன் மூலம் கிரேக்கர்களின் வியக்கத்தக்க தோற்றுவாயைப் பொய்த் தோற்றமென்று ஒதுக்கித் தள்ள முனைந்தது. ஆனால், கிரேக்கர்கள் பல முக்கிய விஷயங் களில் ஒற்றுமைப் பண்புகளுடன்தான் இருக்கின்றனர். உதாரணமாக, மெய்யியல் எனப்படும் அருவச் சிந்திப்பின் வளர்ச்சிநிலையில் அல்லது துன்பவியல் உருவாக்கத்தில் உள்ள தன்மையைக் குறிப்பிடலாம். இத்தகைய முக்கிய மான வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்வதற்கு இன வரைவியல் மிகவும் அவசியம். ஆனால், அது போது மானது அன்று.
கேம்ப்ரிட்ஜ் பள்ளியால் அடிப்படை மாற்றத்தை விளக்கமாக எடுத்துரைக்க முடியவில்லை. ராபர்ட் ப்ரௌனிங், ‘ஜேன் ஹாரிசன் வரலாற்று வாய்மையற்றவர்’ என்று விமர்சித்துள்ளார். மீண்டும் தாம்சனிடம் வரு வோம். சம்பந்தப்பட்ட ஆய்வுப் பொருளின் வரையறைக் குள்ளேயே தீர்வு காணப்பட முடியாத அடிப்படைப் பிரச்சினை அல்ல என்றாலும், அதன் பரப்பெல்லையை மேலும் விரிவாக்கினால் மட்டுமே விடை காண்பது சாத்தியம் என்று அவர் கண்டறிந்ததால், தாம்சன் ஆய்வுப் பொருளுக்குள் ஆழ்ந்து செல்கிறார். இன்னொன்றையும் பார்ப்போம். சான்றாதாரங்களுடன் சமப்படுத்திப் பார்க்கிற அளவுக்கு மார்க்சியம் இங்கே கொண்டுவரப் படவில்லை. அதைக் காட்டிலும் தாம்சன்தான் அந்தச் சான்றாதாரங்கள் மீது அடிப்படைக் கேள்விகளைத் தொடுக்கும் தனது ஆற்றல் மூலம் சிக்கல்களை மார்க்ஸியத்துக்கு கொண்டு செல்லுகிறார். இது ஒரு சிக்கலான நிலைதான். இருந்தாலும் இதைச் சுருக்கமாக விளக்க முயல்கிறேன். உலகத் தோற்றத்தைப் பற்றிய தொன்மங்களிலிருந்து வளர்ந்ததுதான் கிரேக்க
மெய்யியல். அது மனிதப் பண்பிலிருந்து புறநிலைப் படுத்தல் சார்ந்த படிநிலையின் மூலம் வளர்ச்சி நிலையை அடைந்தது. பூமி, ஆகாயம், கடல் போன்றவை தெய்வங் களாகக் கருதப்பட்டமை முடிவுற்றது. நிலம், காற்று, நீர் போன்ற மூலக்கூறுகளாயின. உலகில் இவற்றின் தன்மை மனிதப் பண்பேற்றப்பட்ட நிலையில் இல்லை. அனைத்தும் அதனதன் பருப்பொருள் தன்மையிலேயே புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பிறகு, மெய்யியலாளர் அனாக்ஸிமெனிஸ்-ன் பார்வையில் நோக்கும் பொழுது, பருப்பொருளளவிலான எல்லாக் கூறுகளும் ஒற்றைக் கூறான காற்றின் வடிவங்களே. காற்றின் நிறைந்த அல்லது குறைந்த விசையின் மூலம் பருப்பொருட்கள் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது; அதன் அடர்த்தி குறைந்த வடிவில் அது நெருப்பு; அதன் அடர்த்தி மிகுந்த வடிவில் அது பூமி. அதாவது, அனாக்ஸி மெனிஸ் காற்றின் அளவு வேறுபாட்டின் அடிப்படையில் பண்பு வேறுபாட்டை விளக்கினார்.பூமிக்கும், காற்றுக்கும் இடையேயுள்ள வெளிப்படையான பண்பு வேறுபாடு என்பது உள்ளபடியே வெளியில் உள்ள காற்றின் வேறுபட்ட அளவிலான ஒரு கூறு என்பதுதான். பண்பு வேறுபாட்டை அளவு வேறுபாட்டு அளவுக்கு குறைப் பதற்கான போக்கு ‘முழுமுதலை’ நோக்கியதாக இருந்தது. பின்னர் கிரேக்க மெய்யியல் உலகம் கணிதத்தால் ஆனது என்று கூறிய பிதாகோரஸ் மூலமும், அனைத்து இயக்கத் தையும் கட்டுப்படுத்தும் அருவக் கோட்பாடான கடவுள் வாக்குடன் அடையாளங் காட்டப்படும் நெருப்பிலிருந்து உருமாறும் விளைபொருள்களே அடிப்படை மூலக் கூறுகள் என்று கூறிய ஹெராக்லீடோஸ் மூலமும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பண்பு வேறுபாட்டை அளவு வேறுபாட்டுக்கு குறைத்தல் மட்டுமல்ல, பருப்பொருளிலிருந்து சிறப்பு அருவநிலையை (எண்கணிதம்) பிரித்துக் காட்டும் நெறியிலும், பிதாகோரஸ், ஹெராக்லீடோஸ் இருவரும் தனித்தனியே அவரவர் வழியில் கருத்துரைக்கின்றனர்; இந்தப் போக்கினை மேலும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அறியக்கூடிய எல்லாப் பண்புகளையும் எதிலிருந்து விலக்கிப் பார்க்க முயல்கிறாரோ, அந்த முழுமையின், அதாவது ‘ஏகம்’ என்று அவரால் அழைக்கப்படும் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக்கும் எந்த இருப்பும் இல்லை என்று மறுதலிக்கிறவரானார் பார் மெனைடஸ். அடுத்து, மெய்யான இருப்பு, இருப்பின் மெய்யான கருத்து ஆகியன குறைந்த நம்பகத் தன்மையைக் கொண்ட பிளாட்டோவின் உருவக் கோட்பாட்டுக்கு வழி கோலுகிறது. அதன் மூலம் நாம் அறியக்கூடிய உலகிலிருந்து தனி விலக்கு பெற்ற அருவக் கோட்பாட்டின், தனித்த வளர்ச்சியுடன் இணைந்து, உலகைத் தீர்மானிக்கும் பண்பு வேறுபடுத்தலிலிருந்து படிநிலை விலக்கலைப் பெறுகிறோம்.
மேற்கூறிய வகையில் தாம்சன் கிரேக்க மெய்யியலின் வளர்ச்சியை வெறுமனே அறியச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் அதை விளக்கவும் செய்தார். இந்த அறிவுத் துறை வளர்ச்சியின் காலம் என்பது சரக்கு உற்பத்தி மற்றும் பணம் சார்ந்ததொரு பொருளாதாரம் முதன் முதலாக வளர்ச்சி பெற்ற காலமும்கூட. சந்தைக்குக் கொண்டு வருகிற சரக்குப் பொருள் இன்னொரு பொருளிலிருந்து வேறுபட்டது அல்ல. எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பரிவர்த்தனை மதிப்பு இருக்கும் வரை, அவை அருவமான எண்ணியல் சார்ந்த விலைமுறைத் திட்டத்துக்கு உட்படுத்தப்படும். அவற்றின் மதிப்பு உலக அளவில் சமநிலையிலுள்ள விலைமுறைத் திட்டத்தில் - அதாவது பணத்தின் மூலம் தெரிவிக்கப்படும். ஆதலால், சந்தைக்கான உற்பத்திப் போக்கு மனிதர்களின் மனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் பயன் மதிப்பை விலக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பணம் முன்னுரிமை பெற்று, ஆதிக்கம் செலுத்தக்கூடிய அருவமாகிறது; வெளிப்படையாக எந்த வகை உற்பத்திப் பொருளுக்கும் மாற்றாகப் பயன்படுத்தக் கூடிய தனித்துவம் வாய்ந்தது. கிரேக்க மெய்யியலின் சமகால வளர்ச்சியுடனான இந்தச் செல்நெறிகள்தான் கருத்துகளையும் உருப்படுத்துகின்றன. 
தாம்சன் ஒத்திசைவான செல்நெறிகளைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை; ஒத்திசைவுகள் எதார்த்தமாக நிகழக்கூடியவை அல்ல என்றும், உலகின் மாறிக்கொண்டிருக்கும் எண்ணக்கரு பொருளாதார, சமூக மாற்றங்களினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டி, மெய்யியலாளர்களுக்கும், அவர்களின் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவைத் தேடி ஆய்ந்து, ஒத்திசைவுகளை விரிவாக எடுத்துரைக்கிறார். மேலும் அவர் பண்டைய இஸ்ரேலிலும், பண்டைய சீனாவிலும் உள்ள ஒப்பிடத்தக்க அம்சங் களையும் ஒப்பிட்டுப் பகுந்தாய்ந்தார்.
ஆனால் பொருளாதார வளர்ச்சிதான் இறுதியாகத் தீர்மானிக்கும் ஒரே காரணி என்று அவர் மதிப்பிட்டார். உதாரணத்துக்குச் சடங்கை, மறைஞானத்தைத் தோற்று வாயாகக் கொண்ட ஹெராக்லீடாஸின் புகழ்பெற்ற முரணிலைப் பாணியை (தொல்பொருள் ஆய்வின் புதிய கண்டுபிடிப்பின் மூலம்) தாம்சன் விளக்குவதை நாம் கவனத்தில் கொள்ளலாம். ஹெராக்லீடாஸின் தத்துவத்தின் பெரும்பகுதி - குறிப்பாக, வெவ்வேறு மூலக்கூறுகளின் இடைவிடாத மாற்றங்களை அனுபவித்து, கொதித்துக் கொண்டிருக்கிற ஆன்மாவைப் பற்றிய கருத்து, மறை ஞானத்திலிருந்து, ஆன்மிகச் சார்பான கோட்பாட்டி லிருந்து தருவிக்கப்பட்டதே ஆகும். இதுபோன்ற கண்டு பிடிப்புகளெல்லாம் இன்னும்கூட கான்ஃபார்டின் நோக்கு களில் காணப்படுகின்றன. ஆனால், ஹெராக்லீடாஸின் மெய்யியல் வெறுமனே ஆன்மிகச் சார்பான கோட்பாடு அல்ல; பணப் பொருளாதாரம் மற்றும் பொருள்களின் சரக்குப் பரிவர்த்தனையிலிருந்து தருவிக்கப் படும் முற்புனைவுகளால் உருமாற்றம் பெற்ற, மிகவும் அருவமான வேறொன்றுக்கு நிலைத்திரிவுற்ற ஆன்மிகச் சார்பான கோட்பாடு. ஹெராக்லீடாஸ் கூற்றுப்படி பொருட்கள் தங்கத்துக்கும் தங்கம் பொருளுக்கும் என்று பரிவர்த்தனை செய்யப்படுவதைப் போல நெருப்புக்கு எல்லாப் பொருட்களும் பரிவர்த்தனை செய்யப்படு கின்றது.
அதே வழிமுறையில், கேம்பிரிட்ஜ் பள்ளியின் இன்னொரு புலமையாளரான கில்பெர்ட் மர்ரே, சடங்கு முறையில் துன்ப நிகழ்ச்சியின் மூலகாரணங்களை, விவாதித்திருந்ததுதான் தாம்சன் தமது விவாதத்தை மேலும் இறுக்குவதற்கும் வளர்ச்சி என்பது பண்டைய நகரக் குடியரசு அரசமைப்பின் உருவாக்கமே என்று விளக்கமாக எடுத்துரைப்பதற்கும் மூல காரணமாக அமைந்தது. கேம்பிரிட்ஜ் பள்ளி தொல்பொருளியல், இனவரைவியல், சமூகவியல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சி நிலைகளுடனான மரபுவழிப் புலமையின் மீது ஆர்வம் நிரம்பிய இணைப்பாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தாம்சன் அதன் வாய்ப்பெல்லையை மேலும் விரிவுபடுத்தி இந்த இணைப்பாக்கத்தை உருமாற்றினர்; அவரது ஆய்வு கேம்பிரிட்ஜ் பள்ளியின் உச்சகட்டச் செயல்பாட்டை எடுத்துரைக்கிறது. ஆனால் இன்று புதிய முயற்சிகளுக்கான ஆர்வத்துக்கு இடம்கொடுக்காமல், பொதுமக்களின் நீடித்த ஆர்வத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இந்தப் பேசுபொருள்கள் பற்றிய தெளிவிப்பில் மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. செறிவூட்டப்பட்ட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மதிப்பூட்டக்கூடிய தொடர்ச்சி மட்டும் இங்கே இடம் பெறவில்லை. இந்த மரபுத் தொடர்ச்சியின் தேவைகூட அவ்வப்போது புறக்கணிக்கப்படுகிறது; மறுதலிக்கிறது. இது மிகவும் மோசமானது.
தாம்சன் இந்த நாட்டில் சிறந்த கிரேக்க ஆய்வு மரபின் உச்ச கட்ட வளர்ச்சி நிலையைச் சுட்டி நிற்கும்போது, நமது பல்கலைக்கழகங்களில் உள்ள இன்றைக்குச் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தொல்சீர் இலக்கிய ஆய்வுப்பாங்கு தாம்சனின் ஆய்வு பற்றிய மறுதலிப்பை எடுத்துரைக்காமலிருப்பதும் அல்லது மேலும் எல்லாவித கொள்கைசார் முன்னேற்றமும் விக்டோரிய அரசியின் ஆட்சிக்காலத்திலேயே இருக்கிறது என்று நடிக்கும் மனப்போக்கு தொடர்ந்து நீடித்திருப்பதும் நமக்குப் புதிராகத் தோன்றலாம். மொத்தத்தில் இன்றைய தொல்சீர் இலக்கியப் புலமைப்பாடு தாம்சனின் ஆய்வை உறுதிப் படுத்தவோ அல்லது மறுக்கவோ திறனற்றது. மற்றத் துறைகளில் தாம் செய்துள்ள பங்களிப்புகளுக்கு அப்பால், தமது தலைமுறையின் மிகப் பெரிய கிரேக்க மொழிப் புலமையாளராக இருந்த நபர் பிரிட்டிஷ் அகாடமியின் உறுப்பினராகக்கூட இடம்பிடிக்க முடியவில்லை என்பது இந்த நாட்டில் உள்ள தொல்சீர் இலக்கியப் புலமைப் பாட்டின் விசித்திரமான கிட்டப் பார்வை.
பண்டைய கிரேக்க ஆய்வுகளுக்கு தாம்சனின் பங்களிப்பைப்பற்றிச் சிறிதளவு மட்டும் இங்கே குறிப்பிட்டேன். முதலாவது, கிரேக்கப் பண்பாட்டின் இயங்கியல் வளர்ச்சியைப் பற்றிய விளக்கம். இரண்டாவது, கிரேக்கர்களின் புலனுணர்வில் பருப்பொருளுலகின் இயங்கியல் ரீதியான பிரதிபலிப்பு; மூன்றாவது, கிரேக்க ஆய்வுகளின் மரபுடன் தாம்சன் கொண்டுள்ள இயங்கியல் ரீதியான உறவு.
உண்மையில், கிரேக்க ஆய்வுகளுக்குள்ளே கூட அவரது பரப்பெல்லை மிகவும் அசாதாரணமானது; யாப்பியல், மொழிபெயர்ப்பு, மொழியியல், தொன்மவியல், ஹோமர் குருதியுறவுமுறை, மூலபாட விமர்சனம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சிறப்புப் பண்பு களுக்குள் ஒன்றைப் பற்றி மட்டும் ஒரு வார்த்தை சொல்லி அத்துடன் முடித்துக் கொள்கிறேன். அவரது மூலபாட விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதாவது, பழங்கால நூலாசிரியர் எழுதிய நூல் ஓர் எழுத்துப் பிரதி யிலிருந்து மற்றோர் எழுத்துப் பிரதியாக உருவெடுக்கும் போது, நூற்றாண்டு காலமாக அந்த இலக்கியத்தின் தூய்மைப் பண்பைப் பாதிக்கும் இடைச் செருகல்களைக் களைந்து நூலாசிரியர் என்ன சொன்னாரோ, அதை மீளுருவாக்கம் செய்யும் கலைப் பணியே மூலபாட விமர்சனம் ஆகும். நான் மூலபாட விமர்சனத்தைக் குறிப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக கேம்பிரிட்ஜ் பள்ளியின் சமகால அறிஞரான வால்டர் ஹெட்லாம் விரித்துரைத்த ஆய்வு மரபின் சிறப்பான வளர்ச்சியின் அடிப்படையில் தாம்சன் வெற்றி பெறு வதற்கான அடிப்படையை நிறுவிக்கொண்டார்.
இரண்டாவது, கிரேக்க மூலப்பாட விமர்சனம் என்பது பண்டைய கிரேக்கத்தைப் பற்றிய அறிவு, நூலாசிரியரின் பாணி, நூலாசிரியரின் இதர நூல்களுக்கு இடையேயான உறவு ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் தேவைப்படாத நிலையில் உள்ள, மிகக் குறுகிய பரப்பெல்லை மட்டுமே போதுமென்ற நிலையில் உள்ள நீண்ட கால மரபுள்ள ஒரு துறை. இன்றும் கூட, பல முன்னணி விமர்சகர்கள் இந்தக் குறுகிய வழிமுறையைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், ஏஸ்கைலஸ் எத்தகைய சமூக மற்றும் அறிவுசார் சூழமைவில் நாடகத்தை எழுதினாரோ, அந்தச் சூழமைவை மீளுருவாக்குதல், மிகப் பிந்தைய நூலாசிரியர்களின் இலக்கியங்களில் மறுபடி இடம்பிடிக்கக்கூடிய மரபுவழிக் கருத்துகளுக்கு ஏஸ்கைலஸ் வழங்கும் மறைகுறிப்புகளைக் கண்டறிதல், எழுத்துப் பிரதி மாற்றப்பட்ட காலம் முழுவதும் நிலவி வந்த வரலாற்றுச் சூழல், அதன் மூலம் இலக்கியங்களைப் பிரதியெடுப்பதில் நேரக்கூடிய தவறு களைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் இன்றியமையா அவசியத்தை ஹெட்லாம், தாம்சன் இருவரும் வலியுறுத்தத் தவறவில்லை. அதோடு, சிக்கல்களும்கூட மரபுவழி ஆய்வு நெறிகளுக்கு அப்பால் செயல்படும்படி நம்மை வலிவுடன் ஊக்குவிக்கின்றன.
தாம்சனின் பதிப்பை ஃப்ரான்கெல் பதிப்புடனும், பேஜ் பதிப்புடனும் ஒப்பிடும் பொழுது - நான் ஒரு மாணவராக இருந்து படித்ததைத்தான் சொல்கிறேன் - தாம்சன் சரியாகப் புரிந்துகொண்டிருக் கிறார்; அவர்கள் இருவரும் தவறாகவே புரிந்து கொண்டு உள்ளனர். தாம்சனிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளத் தவறியது மூலபாட விமர்சகர்களாக மட்டும் இருந்தால் மூலபாட விமர்சனத்தில் திறன் பெற்றவராக உருவாகிவிட முடியாது என்பதைத்தான்! இன்னொன்று கிரேக்க மொழிப் புலமையாளராக மட்டுமே இருப்பதால் ஒரு மாபெரும் கிரேக்க மொழிப் புலமையாளராகிவிட முடியாது.
ரிச்சர்டு ஸீஃபோர்டு 
தமிழாக்கம்: சா.ஜெயராஜ்