My Blog List

Saturday, 21 April 2012

அழிவின் விளிம்பில் மொழிகள்



உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகள் காலத்துக்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்விதப் பாதிப்புக்கும் உள்படாமல் தழைத்து நிற்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.
 மானுடத்தை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே, சிரிப்பாலும், பேச்சாலும்தான் என்பார்கள். மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, வெறும் சப்தங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில், சப்தங்கள் மொழியாக வளர்ச்சியடைந்தன. மொழி என்பது கலாசாரத்தை வெளிப்படுத்துகிற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால்தான் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.
 அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009-ல் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும், 1950-க்குப் பின் இந்தியாவில் ஐந்து மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியுள்ளது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. 1894-லிருந்து 1928-வரை இந்தியாவில் பழக்கத்திலிருந்த மொழிகள் குறித்து ஜி.ஏ.க்ரியர்சன் ஆய்வு செய்து முழுமையான விவரங்களை வழங்கியிருக்கிறார்.
 மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை, பாரம்பரியத்தை மறக்கும்போது கலாசாரமும் மறையத் தொடங்குகிறது. அப்போது அதற்கு அடிப்படை என்று கருதப்படும் மொழி மட்டும் எப்படி நீடித்து நிலைக்கும்? துருக்கியின் வடமேற்குப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி உபிக். இந்த மொழியைப் பேசத் தெரிந்த நபர் டெப்விக் எசன்ச் என்பர். துருக்கியிலுள்ள மொழியியலாளர்கள் அவரைக்காண அவரது கிராமத்துக்குச் சென்றனர். எசன்ச்சின் மூன்று மகன்களில் ஒருவருக்குக்கூட உபிக் மொழி தெரியாது. மாறாக, அவர்கள் துருக்கி மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர்.
 1992-ம் ஆண்டு எசன்ச் இறந்து போனார். அவரது கல்லறையில், ""இது டெப்விக் எசன்ச்சின் கல்லறை. உபிக் என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதர் இவர்தான்'' என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தவுடன் உபிக் மொழியும் மறைந்துவிட்டது.
 "மறையும் மொழிகள்' என்ற பிரிட்டனைச் சார்ந்த ஒரு கலாசார அமைப்பு, அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ளது. இதில் பணியாற்றும் மொழியியலாளர் ப்ரூஸ் கானல் என்பவர், 1994-95-ல் மாம்பிலா என்ற பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது நிறைய மொழிகள் மறையும் அபாயத்தில் இருந்ததைக் கண்டார். கசாபே என்ற மொழி போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே பேசக் கூடியதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். அவரது சகோதரிக்கு கசாபே மொழி புரியும். ஆனால், பேசத் தெரியாது. அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகள் யாருக்குமே கசாபே மொழி தெரியாது. போகோன் மறைந்தவுடன் கசாபே மொழியும் மறைந்துவிடும்.
 உலகில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சில பகுதிகளில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், பல எழுத்து வடிவத்தில் இல்லை. உலகில் பயன்படும் அனைத்து மொழிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை.
 சில பூர்வகுடிகள் வித்தியாசமாக ஒரு மொழியைப் பேசும் வழக்கம் கொண்டுள்ளனர். உதாரணமாக, 1998-ம் ஆண்டு ஜகார்த்தாவுக்குக் கிழக்கே மாம்பரமோ நதிக்கருகே வஹீததே, ஆகேததே என்ற குழுக்கள் வசித்தனர். மொத்தமே இவை இரண்டையும் சேர்த்தே 50 குடும்பங்கள்தானிருக்கும். இவர்கள் பேச்சு வித்தியாசமாக இருந்ததால், அவர்கள் பேசியது புதிய மொழிகள் என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதென டேவிட் கிறிஸ்டல் என்ற மொழி ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
 உலகில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் 90 சதவீதம் வரை இந்த நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 11 நாள்களுக்கு ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிந்துவிடுகிறது. பிப்ரவரி 21-ம் நாள் பன்னாட்டுத் தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டாலும், மொழிகளைப் பேணிக் காக்கவேண்டிய சிந்தனை உலக அளவில் இல்லாமல் போய்விட்டது.
 உலகில் சராசரியாக 5,000 பேர்வரை ஒரு மொழியைப் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4,000 மொழிகளைப் பேசுபவர்கள் ஆதிவாசிகள் எனக் கணக்கிடப்படுகிறது. 83-84 சதம் மொழிகள் ஒரே ஒருநாட்டில் மட்டுமே பேசப்படுபவையாக உள்ளன.
 சில மொழிகள் மிகச் சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. பப்புவா நியூகினியாவில் உள்ள குருமுலும் என்ற இனத்தில் 10 பேர் மட்டுமே ஒரு மொழியைப் பேசுகின்றனர். மொழிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களிலுள்ள மொழிகள் மொத்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதம் மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
 சில மொழிகளின் எண்ணிக்கை வருமாறு: அமெரிக்கா 1,013 மொழிகள் (15சதம்), ஆப்பிரிக்கா 2,058 மொழிகள் (30 சதம்), ஐரோப்பா 230 மொழிகள் (3 சதம்), ஆஸ்திரேலியா 250 மொழிகள் (1 சதம்), ஆ சியா 2,197 மொழிகள் (32 சதம்), பசிபிக் 1,311 மொழிகள் (19 சதம்). பப்வா நியூகினியா 850 மொழிகள். இந்தோனேஷியா 670 மொழிகள். நைஜீரியா 400 மொழிகள். இந்தியா 380 மொழிகள். கேமரூன் 270 மொழிகள். மெக்சிகோ 240 மொழிகள். பிரேசில் 210 மொழிகள். ûஸர் 210 மொழிகள்.
 ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர் டோவ் ஸ்கட்நாப் கங்காஸ் என்பவர் மொழி ஆய்வுகள் பல நடத்தப்பட்டபோதிலும், புள்ளிவிவரங்கள் துல்லியமானதாக இல்லையென்றே கருதுகிறார். மொழிகளுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் நிதின் சேத்தி என்கிற ஆய்வாளர். மொழி உலகம் என்ற வரைபடம் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி, தென் கிழக்காசிய பகுதிகளிலுள்ள இந்தோனேஷியத் தீவுகள் பசிபிக் வரையுள்ள பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட 17 மிகப்பெரிய நாடுகளில் உள்ள மொழிகளில் 60 சதவீதம் பேசப்படுகின்றன.
 அமெரிக்கா மற்றும் கனடாவில் பழங்குடி மக்களால் பேசப்படும் சுமார் 80 சதவீத மொழிகள் அவர்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால் கனடாவில் 60 மொழிகள் பேசப்பட்டு இன்றைக்கு 4 மொழிகளே நிலைத்து நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிகள் பேசிய 250 மொழிகள் மறைந்தே விட்டன என்று மொழியியல் அறிஞர் நெட்டல் கூறுகிறார்.
 இப்போது ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 54 மொழிகள் படிப்படியாக அழிந்துவிட்டன. 116 மொழிகள் மறையும் சூழலில் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 பூர்வகுடி இன மக்கள் பேசுகிற மொழிகள்தான் படிப்படியாக அழிந்து வருகின்றன என்றும், நகர்ப்புற வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்றவை மொழிகளின் அழிவுக்குக் காரணங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
 மொழிகள் அழிவது குறித்து தடுக்கக்கூடிய முயற்சிகள் எவை எவை என்று மைசூரில் உள்ள இந்திய மொழியியல் கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மொழிகளைப் பாதுகாப்பதன் மூலமாக ஓர் இனத்தின் கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க முடியும்.
 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் நிக்கோபர் தீவில் பேசப்பட்ட போ என்ற மொழி அழிந்துவிட்டது. அந்தமான் மொழிகளில் சிறப்பு வாய்ந்த போ மொழி பேசிய 80 வயதான பெண் இறந்தவுடன் அந்த மொழி முடிவுக்கு வந்துவிட்டது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி கோரத்தின்போதுகூட துக்கத்தில் பாடப்பட்ட போ மொழி பாடல் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.
 இதுதான் உலகிலேயே பழமையான மொழி என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி கூறுகிறார். அந்தமானில் மறைந்த போ மொழியில் அரிய மருத்துவச் செய்திகள் இருந்தன. செடி, கொடிகளிலிருந்து மருந்து தயாரிக்கக்கூடிய நடவடிக்கைகள் அந்த மொழியில் இருந்தன. ஆனால், அந்த மொழியின் மறைவால் நமக்கு மருத்துவத் தகவல்கள் கிடைக்காமலேயே போய்விட்டன.
 குரா என்ற அந்தமான் மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.அங்கு ஜிரா என்ற மொழியை 50 பேர் மட்டுமே இப்பொழுது பேசி வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் தீவில் 10 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பெரும்பாலான மொழிகள் இப்பொழுது பேச்சு வழக்கில் இல்லை.
 கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ல் மரணமடைந்தவுடன் அப்பகுதியில் பேசப்பட்ட மலையாள போர்ச்சுகீஸ் கிரியோல் என்ற மொழி மறைந்தது. 400 ஆண்டுகளாக கேரள கத்தோலிக்கர்களின் அடையாளமாக இந்த மொழி திகழ்ந்தது.
 ரெமோ என்ற ஒரிய மொழி போண்டா என்ற ஆதிவாசிகளால் பேசப்பட்டு, இந்த ஆதிவாசிகள் மக்கள்தொகை குறைந்து இம்மொழியும் அழிந்துவிடும்.
 20 லட்சம் மக்கள் பேசும் கோந்தி மொழி சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் பாட நூலாகவே இருக்கவில்லை. அதன்பின் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தால் அந்த கோந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
 தென்னிந்தியப் பகுதிகள் டெக்கான் என்று அழைக்கப்பட்ட காலத்தில் அங்கு மராட்டி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசப்பட்டன. வட இந்தியப் படையெடுப்புக்குப் பின் அவர்களது மொழியான அவதியும் இங்கு பேசப்பட்டது. இவையாவும் ஒன்றுசேர்ந்து தக்கனி மொழி உருவாயிற்று.
 பாமினி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தக்கனி மொழிதான் ஒருகாலத்தில் பேசப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
 உலகமயமாதலின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மறைந்துள்ளன என்று அழுத்தமாகக் கூறும் கிறிஸ்டல், தொழில் நுணுக்கத்தின் ஊடுருவலால், உலகின் மூலை முடுக்குகளில்கூட பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது.
 எடுத்துக்காட்டாக, கனடாவில் ஆங்கில மொழியும், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் அன்விதா அப்பி, இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு மொழியின் ஆதிக்கம் காரணமாக காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள் மறைவதைப் பற்றி டோவ் கூறுகையில், மொழிகளின் மரணம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மாறாக, படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன்.
 மொழி உரிமை என்பது மனித உரிமையாகும் என்கிறார் டோவ். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தபோதிலும், 16 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதை அங்கீகாரம் செய்வதே மொழிப் பாதுகாப்பின் முதல் படியாகும்.
 இந்திய அரசியல் சாசனத்தில் 8-வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ள மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கை மீது, அரசுத் தரப்பில், ஒரு மொழியை குறைந்தபட்சம் 10,000 பேர்களாவது பேசினால்தான் மொழி என்ற வரையறைக்கு உள்படும்.அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்படாத 100 மொழிகளை மூன்று விழுக்காடு இந்திய மக்களே பேசுகின்றனர்.
 குஜராத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பிலி என்ற மொழியைப் பாதுகாக்கும் காஞ்சிபடேல் கூறுவது என்னவென்றால், "ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் இலக்கியங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு மொழியைப் பாதுகாக்க முடியும்' என்கிறார்.
 இம்மாதிரி மொழிகளைப் பாதுகாக்க பாஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்லி என்பவர் நடத்தி வருகிறார். இமாலயப் பகுதியில் ஹிம்லோக் அமைப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்டர், ஹோ, அகர், க்ரியா, குருக்ஸ் போன்ற மொழிகளைப் பாதுகாக்க ஜார்கண்டி பாஷா சாகித்திய சனஸ்க்ருதி அகரா என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது.
 ஜோகர் நிகம் கபர் என்ற மாத இதழ் மூலமாக மொழிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரசன்னஸ்ரீ குர்ரு இன மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கொண்டா டொரா மொழி பேசப்பட்டு வந்தது. ஆனால், பழங்குடி மக்கள் தற்சமயம் ஒரிய மொழியைப் பேச ஆரம்பித்துவிட்டதால், இந்த மொழியைக் காக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 மேற்கு வங்கத்தில் சந்தால் மக்களின் மொழியான ஒல்சிக்கி பேச ஊக்குவிக்கப்படுகிறது. லிவிங் டங்க்ஸ், சர்வைவல் இன்டர்நேஷனல், சொரோ சொரோ போன்ற அமைப்புகள் அழிந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
 யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அழியும் மொழிகள் பட்டியலில், தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த்தன்மை அந்த நிலைக்குச் செல்கிற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 அந்நிய கலாசாரம் பற்றிக் கூறும்போது, ""எனது வீடு சுவர்களால் அடைத்து இருப்பதை நான் விரும்பவில்லை. எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். உலகின் அனைத்துப் பகுதி கலாசாரமும் எந்தத் தடையுமின்றி வீட்டுக்குள் வருவதை விரும்புகிறேன். ஆனால், அந்த அலை என்னை அடித்துச் சென்றுவிடவும் விடமாட்டேன்'' என்று அண்ணல் காந்தி கூறினார்.
 இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்குத் தாய்மொழி மீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். தான் பிறந்த மண், தாய் தந்தை, தாய் மொழி, தனது கலாசாரத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். தாய்மொழி என்பதில் ஒவ்வொருவரின் தன்மானமும், பெருமையும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


No comments:

Post a Comment