My Blog List

Wednesday 23 April 2014

பாராளுமன்ற வழியில் சமுதாயத்தை மாற்றமுடியுமா?


 வன்முறையான புரட்சி இல்லாமலேயே சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும் என்று பிரிட்டனில் சோசலிசவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகளின் அறுதிப் பெரும்பானமையினர் பொதுவாக வாதிட்டுள்ளனர். தேவைப்படுவதெல்லாம் ‘பாரம்பரிய’ அரசியல் நிறுவனங்களின் – பாராளுமன்றம் மற்றும் உள்ளூர் பேரவைகள் - மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்குப் போதுமான வெகுமக்கள் ஆதரவை  சோசலிசவாதிகள் வென்றெடுப்பது தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர் நிலவும் அரசைக் கொண்டு – ஆட்சிப் பணி, நீதித்துறை, காவல்துறை, ஆயுதப்படைகள் ஆகியவற்றைக் கொண்டு – முத்லாளிய வர்க்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, சமுதாயத்தை மாற்றியமைக்கும்  நிலைக்கு சோசலிசவாதிகள் வந்துவிடுவார்கள்.

இந்த வழியில், வன்முறையில்லாமல், தற்போதைய அமைப்பை சீர்திருத்துவதன்  மூலம், சோசலிசம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட முடியும் என்று கூறிக்கொள்ளப் படுகிறது.

இந்தக் கண்ணோட்டம் வழக்கமாக ‘சீர்திருத்தவாதம்’ என்று குறிப்பிடப்படுகிறது, இருந்தாலும் அவ்வப்போது அதைத் ‘திருத்தல்வாதம்’(ஏனென்றால் அது மார்க்சின் கருத்துக்களை முழுமையாகத் திருத்துவதை உள்ளடக்கியதாக இருக்கிறது), ‘சமூக ஜனநாயகம்’ (1914 வரை இது புரட்சிகர சோசலிசம் என்றும் பொருள்பட்டது) அல்லது பேபியனியம் (பிரிட்டனில் நீண்டகாலமாக சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்துவந்த பேபியன் சங்கம் சார்ந்து இப்பெயர் வந்தது) என்றும் குறிப்பிடப்படுவதைக் கேட்டிருப்பீர்கள்.

முதல் பார்வைக்கு சீர்திருத்தவாதம் மிகவும் நியாயபூர்வமானதாகத் தோன்றுகிறது, அதாவது ‘பாராளுமன்றம் நாட்டை ஆள்கிறது’  என்றும் ‘மக்களின் ஜனநாயக விருப்பங்கள் அடிப்படையில் பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது’ என்றும்  நமக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுப்பதைப் போல, அது தாள்களில் அல்லது தொலைகாட்சியில், கூறப்படுவதைப் போல, பொருத்தமாக இருக்கிறது. இருப்பினும் அதற்கப்பால், பாராளுமன்றத்தின் மூலம் சோசலிசத்தை அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரிட்டனில் 1945 க்கும் 1979 க்கும் இடையில் தொழிலாளர் கட்சியின் மூன்று அரசாங்கங்கள் – 1945 இலும் 1966 இலும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் – இருந்தன, இருப்பினும் 1945 இல் இருந்ததை விட சோசலிசத்திற்கு அருகாமையில் கூடச் செல்லவில்லை.

அயல்நாடுகளிலும் அனுபவம் இதுவே. 1970 இல் சிலியில், சோசலிசவாதியான  சால்வடார் அலந்தே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசத்திற்குச் செல்வதற்கு இது ஒரு ‘புதிய வழி’என்று மக்கள் கூறிக் கொண்டார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்ட்டிருந்த தளபதிகள் அல்லந்தேவைத் தூக்கியெறிந்தனர், சிலியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் அழிக்கப்பட்டது.

ஏன் சீர்திருத்தவாதம் எப்போதும் தோல்வியே அடையும் என்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக,  பாராளுமன்றங்களில் சோசலிசப் பெரும்பான்மையினர் படிப்படியாக சோசலிச நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், உண்மையான பொருளாதார அதிகாரம் பழைய ஆளும் வர்க்கத்தின் கரங்களிலேயே இருந்து வருகிறது. தொழில்துறையின் ஒட்டுமொத்தப் பிரிவுகளையும் மூடுவதற்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதற்கும், ஊகவணிகம், பதுக்கல்கள் ஆகியவற்றின் மூலம் விலைவாசிகளை வலுக்கட்டாயமாக உயரச் செய்வதற்கும், ‘பணம் செலுத்தும் சமநிலைப்’ பராமரிப்பில் நெருக்கடியை உருவாக்கும் வகையில் பணத்தை அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்கும், அது அனைத்திற்கும் சோசலிச   அரசாங்கம் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதற்கு ஊடகப் பிரச்சாரங்களைத் தொடுப்பதற்கும் அவர்கள் இந்தப் பொருளாதார அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்விதமாகத்தான் ஹெரால்டு வில்சனின் தொழிலாளர் கட்சி அரசாங்கம் 1964 இலும், பின்னர் மீண்டும் 1966 இலும் தொழிலாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்ட்டது – செல்வம் படைத்த தனிநபர்களும் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாகப் பணத்தை அயல்நாடுகளுக்கு அனுப்பிவைத்தனர். வில்சனே தனது நினைவுக் குறிப்புக்களில் பின்வருமாறு விவரிக்கிறார்:

எந்தக் கொள்கையின் அடிப்படையில் நாம் தேர்தலில் போட்டியிட்டோமோ அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று சர்வதேச ஊகவணிகர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற ஒரு சூழலை நாம் இப்போது எட்டியுள்ளோம்... பிரிட்டனில் தேர்தல் என்பது ஒரு போலி நாடகம், பிரிட்டிஷ் மக்கள் கொள்கைகளுக்கிடையில் தெரிவு செய்துகொள்ள முடியாது என்ற கோட்பாட்டை ஒப்புக் கொள்வதன் மூலம், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மூடுவிழா நடத்துமாறு மகாராணியின் முதலாவது அமைச்சர் கேட்டுக்கொள்ளப் பட்டுகொண்டிருக்கிறார்.

வில்சன் கோபப்பட்டார் என்று கூறபட்டாலும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, அவர் உண்மையில் ஊகவணிகர்கள் கோரிய வகைப்பட்ட கொள்கைகளைத் தான் பின்பற்றினார் என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேபோல வேண்டுமென்றே பணம் செலுத்துகைச் சமநிலையில் நெருக்கடியை உருவாக்கித்தான் 1974 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சி அரசாங்கம் பொதுமக்களுக்கான செலவினத்தில் மூன்று அடுத்தடுத்த வெட்டுக்களை, மருத்துவமனைகள், பள்ளிகள், சமூக சேவைகள் ஆகியவற்றில் அறிமுகப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

பெருந்தொழில் நிறுவனங்களின் கரங்களில் இதைவிடப் பெரிய சீர்குலைவை அல்லந்தேயின் அரசாங்கம் எதிர்கொண்டது. முதலாளிகளின் வேலை நிறுத்தத்தால் இரண்டுமுறை தொழில்துறையின் ஒட்டுமொத்தப் பிரிவுகளும் மூடப்பட்டன,  ஊகவணிகம் விலைகளை மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தியது, தொழில்வணிகர்கள் பொருட்களைப் பதுக்கி, வாழ்க்கைத் தேவைகளைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில்  காத்திருக்கச் செய்தனர்.

முதலாளித்துவதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான இரண்டாவது காரணம், நிலவும் அரசு இயந்திரம் நடுநிலையாக இருப்பதில்லை, மாறாக, அது மேலிருந்து கீழ் வரை முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ, உடல்ரீதியான பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்துச் சாதனங்களையும், அதாவது வன்முறைச் சாதனங்களை, அரசு கட்டுப்படுத்துகிறது. அரசின் அமைப்புக்கள் நடுநிலை வகிப்பவையாக இருந்திருக்குமானால், முதலாளிய அரசோ சோசலிச அரசோ, எந்த ஒரு குறிப்பான அரசாங்கம் கூறியதையும் அவை செய்திருக்குமானால், பின்னர் அரசு பெருந்தொழில் நிறுவனங்கள் செய்த பொருளாதார நாசவேலையைத் தடுத்து நிறுத்தப் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அரசு இயந்திரம் செயல்படும் முறையைப் பாருங்கள், யார் உண்மையாக உத்தரவிடுகிறார் என்பதைப் பாருங்கள், அது நடுநிலையாக இல்லை என்பதை நீங்கள்  பார்க்க முடியும்.

அரசு இயந்திரம் என்பது வெறுமனே அரசாங்கம் மட்டுமல்ல. அது மிகப்பெரிய அமைப்பு, அதற்குப் பல்வேறு கிளைகள் இருக்கின்றன – காவல்துறை, இராணுவம், நீதித் துறை, ஆட்சிப்பணி, மற்றும் தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறைகளை நடத்துவோர் இன்னபிற அதில் அடங்குவர். அரசின் இந்தப் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவோரில் பலர் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வருகின்றனர் – அவர்கள் தொழிலாளர்களைப் போலவே வாழ்கிறார்கள், ஊதியம் பெறுகிறார்கள்.

ஆனால் முடிவுகளை எடுப்பவர்கள் இவர்கள் அல்ல. யுத்தங்களில் எங்கு சண்டையிட வேண்டும், அல்லது வேலைநிறுத்தங்களை முறியடிக்க வேண்டுமா எனபதை படை வீரர்களின் அணிகள் தீர்மானிப்பதில்லை;  சமூகப் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு எழுத்தர்  எவ்வளவு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று முடிவு செய்வதில்லை. ஏணியின் ஒரு படியில் இருப்பவர் அவருக்கு மேல் படியில் இருப்பவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அமைந்துள்ளது.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, காவல்துறை ஆகிய உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் அரசு இயந்திரத்தின் பிரிவுகளில் இதுதான் சாராம்சமான நிலையாகும். படைவீரர்கள் படையில் சேர்த்துக்கொள்ளப்படும் போது முதலில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே – அந்த உத்தரவுகள் பற்றிய சொந்தக் கருத்துக்களை எண்ணக்கூடாது. அதனால் தான் அவர்களுக்கு அபத்தமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பயிற்சிக்  களத்தில் பொருளற்ற ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அதைப்பற்றி சிந்திக்கக் கூடாது, சுடுமாறு உத்தரவிட்டால், அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிராமல் சுடவேண்டும்.

எந்த ஒரு படையிலும் மிகமோசமான குற்றம் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பது தான் – மறுத்தால் அது கலகம். அந்தக் குற்றம் அவ்வளவு தீவிரமானதாகக் கருதப்படுகிறது,  யுத்த நேரத்தில் கலகம் எனபது பிரிட்டனில் இன்னும் மரணதண்டனைக்குரிய குற்றமாகும். உத்தரவுகளை இடுவது யார்?

பிரிட்டிஷ் படையில் (வேறு படைகளிலும் இது மாறுபடுவதில்லை) படைத்தலைமைப் படிநிலையைக் காண்பீர்களானால், பின்வருமாறு செல்கிறது:  ஜெனரல் - பிரிகேடியர்  - கர்னல் – லெப்டினன்ட் – என்.சி.ஒ. – படைவீரர்.. எந்தக் கட்டத்திலும் இந்த படிநிலை வரிசையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் – பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூர் பேரவை உறுப்பினர்கள் கண்காணிப்பு - இருப்பதில்லை. படைவீரர்களின் ஒரு குழு தமது வட்டாரப் பாராளுமன்ற உறுப்பினரை எதிர்ப்பதை விட மேலதிகாரிகளை எதிர்ப்பது கலகமாகும். படை என்பது ஒரு பெருந்திரள் கொலைகார இயந்திரமாகும். அதை நடத்துவோர், பிற படைவீரர்களை படைத்தலைமைப் பதவிகளுக்கு உயர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள், (ஜெனெரல்கள்) தளபதிகளே ஆவர்.

உண்மையில் கொள்கையளவில் தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குப் பொறுப்பாக இருக்கவேண்டியவர்கள் ஆவர். ஆனால் படைவீரர்கள் –அரசியல்வாதிகளுக்கு அல்ல - தளபதிகளுக்கே கீழ்ப்படியக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு மாறுபட்ட உத்தரவுகளைப் படைவீரர்களுக்குப் பிறப்பிப்பதற்கு தளபதிகள் முடிவு செய்வார்களானால், அந்த உத்தரவுகளை அரசாங்கம் எதிர்த்துக் கட்டளையிட முடியாது. தளபதிகள் தங்கள் மனதை மாற்றிக்கொள்வதற்கு இணங்கச் செய்ய முயற்சி மட்டுமே மேற்கொள்ள முடியம்.  அரசாங்கத்துக்கு கொடுக்கப்படும் உத்தரவுகளின் வகைகள் பற்றித் தெரியும் – ஏனென்றால் இராணுவ விவகாரங்கள் மாற்றத்துக்கிடமின்றி ரகசியமானவை, தளபதிகள் தாங்கள் விரும்பாத அரசாங்கங்களிடமிருந்து தாங்கள் செய்வதை மறைப்பது மிகவும் எளிதாகும்.

அரசாங்கம் அவர்களிடம் சொல்வதை தளபதிகள் வழக்கமாக, அல்லது எப்போதுமே  புறக்கணிக்கிறார்கள் என்று அதற்குப் பொருளல்ல. பிரிட்டனில் அவர்கள் வழக்கமாக அரசாங்கம் சொல்வதுடன் இணங்கிப் போவதை வசதியாகப் பார்க்கிறார்கள். ஆனால் வாழ்வா சாவா என்ற ஒரு சூழலில் தளப்திகள் அரசாங்கம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தமது கொலைகார இயந்திரத்தை விருப்பம் போல் இயக்க முடியும், அரசாங்கம் அதில் ஒன்றும் செய்யமுடியாது. இதைத்தான் சிலியில் அல்லந்தே தூக்கியெறியப்பட்ட போது தளபதிகள் இறுதியாகச் செய்ததாகும்.

எனவே படையை நிர்வகிப்பது யார்? என்ற கேள்வி, உண்மையில், தளபதிகள் யார்? என்பதே ஆகும். பிரிட்டனில் முதுநிலை அதிகாரிகளின் 80 விழுக்காட்டினர் கட்டணம் செலுத்தும் ‘பொதுப்’ பள்ளிகளுக்கு சென்றனர் – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே விகிதத்தில் தான் சென்றனர். (17 ஆண்டுத் தொழிலாளர் அரசாங்கம் அதை மாற்றவில்லை). அவர்கள் பெரும் தொழில்நிறுவனர்களின் உறவினர்களாக இருகிறார்கள், அதே பணம் படைத்த வர்க்கத்தினருக்கான பொழுதுபோக்கு மன்றங்களில் இருக்கிறார்கள், அதே சமூக நிகழ்வுகளில் பங்கு கொள்கிறார்கள், அதே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் (இதில் உங்களுக்குச்  சந்தேகம் இருந்தால், டெய்லி டெலகிராப்பின் எந்த ஒரு கடிதப் பகுதியைப் பாருங்கள்). ஆட்சிப் பணியில் இருப்பவர்கள், நீதிபதிகள், காவல்துறையினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர் விடயத்திலும் இதுவே உண்மையாகும்.

மக்களவையின் வராந்தாக்களில் 330 பேர்  நடைபயிலுவதாலேயே, பெரும் தொழில்நிறுவனர்களாக இருக்கும் அவர்களுடைய  நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பொருளாதார அதிகாரத்தைப் பறிக்கும் அரசாங்க உத்தரவுகளுக்கு இந்த மனிதர்கள் கீழ்ப்படிவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மூன்று ஆண்டுகள் அரசாங்கத்தின் உத்தரவுகளைக் குப்பையில் போட்டுவிட்டு, பின்னர் சரியான நேரம் வந்ததும் ஆட்சியைத் தூக்கியெறிந்த சிலியின் தளபதிகள், நீதிபதிகள், முதுநிலை ஆட்சிப் பணியில் உள்ளோரின் அதே எடுத்துக்காட்டை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நடைமுறையில், பிரிட்டனில் உள்ள குறிப்பான நமது ‘அரசியலமைப்பு’ அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்துவோர் அதைத் தூக்கியெறியாமலேயே  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடதுசாரி அரசாங்கத்தின் விருப்பத்தை தடுக்க முடியும் என்பதைப் பொருள்படுத்துகிறது.  அத்தகைய ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது முதலாளி வர்க்கத்தால் (தொழிற்சாலை மூடல்கள், பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுதல், அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குதல், விலையேற்றத்தை அதிகரித்தல் ஆகியவழிகளில்)  மேற்கொள்ளப்படும் பெரும் பொருளாதாரச் சீர்குலைவை எதிர்நோக்கியிருக்கும். அத்தகைய சீர்குலைவை அரசியலமைப்பு வழிகளில் – சட்டங்களை இயற்றுவதன் மூலம் – சரிசெய்ய அரசாங்கம் முயற்சி செய்தால் – அதன் கரங்கள் பின்புறமாகக் கட்டப்படுவதைக் காணவேண்டி வரும்.

பிரபுக்கள் அவை அத்தகைய எந்தச் சட்டத்திற்கும் ஒப்புதலளிக்க உறுதியாக மறுக்கும் – குறைந்தது அந்தச் சட்டத்தை ஒன்பது மாதங்களுக்குத் தாமதப்படுத்தும். நிறைவேற்றபட்ட சட்டங்களுக்கு அதன் அதிகாரங்களைத் தடுக்கும் வகையில் நீதிபதிகள்  விளக்கமளிப்பார்கள்.’ ஆட்சிப்பணித் தலைமை அதிகாரிகள், தளபதிகள், காவல்துறை தலைமை அதிகாரிகள் ஆகியோர் நீதிபதிகளின் முடிவுகளை பயன்படுத்திக் கொள்வார்கள், பிரபுக்கள் அவை அமைச்சர்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அவர்களுடைய விருப்பத்தை நியாயப்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்த ஊடகமும் ஆதரவளிக்கும், அரசாங்கம் ‘சட்டவிரோதமாக’, ‘அரசியலமைப்பு விரோதமாக’ நடந்துகொள்வதாக அவை ஓலமிடும். பின்னர் தளபதிகள் ஒரு சட்டவிரோத அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான தயாரிப்புக்களை நியாயப்படுத்துவதற்கான மொழியைப் பயன்படுத்துவார்கள்.

ஆட்சிப்பணி, காவல்துறை, படைவீரர்கள் ஆகியவற்றின் ஊழியர்களை, அவர்களுடைய உயர்அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க அறைகூவல் விடுப்பதற்கும், உண்மையில் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படுவதற்கும்   ஆயத்தமாக இல்லாவிட்டால், அரசாங்கம் பொருளாதாரப் பெருங்குழப்பத்தைக் கையாளும் ஆற்றலற்றுப் போகும்.

இது அனைத்தும் மோசமான கறபனை என்று ஒருவர் நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அண்மைப் பிரிட்டிஷ் வரலாற்றில் குறைந்தது இரண்டு நிகழ்வுகளில், தாம் விரும்பாத  அரசாங்கத்தின் முடிவுகளை, தளபதிகள் சீர்குலைத்தனர் என்பதைச் சேர்த்துகொள்ள வேண்டும்.

1912 இல் மக்கள் அவை ஒன்றுபட்ட அயர்லாந்தை நிர்வகிக்க ‘ஹோம் ரூல்’பாராளுமன்றத்திற்கு அனுமதியளிக்கும் வரைவுச் சட்டத்தை நிறைவேற்றியது. டோரி கட்சித் தலைவர் போனார் லா உடனடியாக (லிபரல்) அரசாங்கத்தை  ஒரு சட்டவிரோதக் கும்பல் என்றும், அரசியல் சாசனத்தை விற்றுவிட்டார்கள் என்றும் கண்டித்தார். பிரபுக்கள் அவை இயல்பாகவே அதனால் முடிந்தவரை (இரண்டு ஆண்டுகள்) தாமதித்தது, அதேவேளையில் முன்னால் டோரி அமைச்சர் எட்வர்ட் கர்சன் அந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்காக அயர்லாந்தில் வடக்கில் ஒரு துணை இராணுவப்படையை ஒழுங்கமைத்தார்.

அப்போது இந்தப் படையைச் சமாளிப்பதற்கு, அயர்லாந்தில் பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய தளபதிகள் அவர்களுடைய படைகளை வடக்கு நோக்கிக் கொண்டுசெல்லுமாறு கூறப்பட்டனர், ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டு, தங்களுடைய பதவிகளை விட்டு விலகுவதாக அச்சுறுத்தினர். வழக்கமாக,  கராக் கலகம்’ என்று குறிப்பிடப்படும் இந்த நடவடிக்கை காரணமாகத் தான், வடக்கு மற்றும் தெற்கு அயர்லாந்து 1914 இல் ஒரே பாராளுமன்றத்தைப் பெறவில்லை, மேலும் இன்றும் கூடப் பிரிக்கப்பட்ட தேசமாக இருந்துவருகிறது.

1974 இல், 1912 ஆம் ஆண்டின் நிகழவுகள் சிறிய அளவில் திரும்பவும் நிகழ்ந்தன. வடக்கு அயர்லாந்தின் வலதுசாரி குறுங்குழுவாத விசுவாசிகள், வடக்கு அயர்லாந்தில் ஒரு பிராடஸ்டன்ட்-கத்தோலிக்கக் கூட்டு அரசாங்கத்தை ஏற்றுகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து, தொழில்துறையை நிறுத்திவைக்கும் ஒரு பொதுவேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்தனர், மக்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் தடைகளை அமைத்தார்கள். தடைகளை அகற்றி, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரிட்டிஷ் படையையும் வடக்கு அயர்லாந்துக் காவல்துறையான ராயல் உல்ஸடர் கான்ஸ்டபுளரியையும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டார்கள். முதுநிலைப் படை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் இது அறிவுறுத்த உகந்ததல்ல என்று அரசாங்கத்திடம் கூறினார்கள், மேலும் படைவீரர்களோ காவல்துறையினரோ விசுவாசிகளுக்கு எதிராகச் செல்லவில்லை. பிராடஸ்டன்ட் – கத்தோலிக்கக் கூட்டு அரசாங்கம் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டது, படை அதிகாரிகளின் கருத்துக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்துக்களை விட மிகவும் சக்திவாய்ந்தவை என்பது நிரூபணமானது.

மென்மையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்யும் மிதவாத அரசாங்கங்களுக்கே 1914 இலும் 1974 இலும் இது நிகழ முடியமென்றால், ஒரு போர்க்குணமிக்க சோசலிச  அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் எந்தத்தீவிரமான சீர்திருத்தப் பெரும்பான்மையும் விரைவிலேயே, ஒன்று தொழில்துறையை சொந்தமாகிக் கொண்டுள்ளவர்களையும் அரசில் முக்கியப் பதவி வகிப்பவர்களையும் சாந்தப்படுத்துவதற்காக சீர்திருத்தங்களைக்  கைவிட வேண்டும் அல்லது ஒரு ஒட்டுமொத்த மோதலுக்குத் தயாராக வேண்டும். அது தவிர்க்கமுடியாத வகையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளவர்களுக்கு எதிராக ஒருவகை பலவந்தத்தைப் பயன்படுத்துவதில் தான் முடியும்.

சீர்திருத்தவாதம் என்பது ஒரு முட்டுச் சந்து என்பதற்கு மூன்றாவது காரணம், பாராளுமன்ற ‘ஜனநாயகத்தில்’ எந்த ஒரு புரட்சிகர இயக்கமும் அதன்வழியாக வெளிப்படுவதைத் தடுப்பதற்கான அமைப்புக்கள் அதற்குள்ளேயே கட்டப்பட்டுள்ளன என்பதாகும்.

அரசு இயந்திரத்தில் முக்கியமான பதவிகளைக் கட்டுப்படுத்துவோரின் அதிகாரத்தைக் கைபற்றுவற்கான சிறந்த வழி இடதுசாரிகள் முதலில் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப பெறுவது தான் என்று சில சீர்திருத்தவாதிகள் வாதிடுகிறார்கள். பாராளுமன்றங்கள் எப்போதும் மக்கள்தொகையின் பெருந்திரளின் புரட்சிகர உணர்வுநிலையின் மட்டத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதால் இந்த வாதம் விழுந்துவிடுகிறது.

போராட்டத்தின் மூலம் சமுதாயத்தை மாற்றுவதை நடைமுறையில் அவர்களே தொடங்கும்போது தான், மக்களின் பெருந்திரளினர் தாங்களே சமுதாயத்தை நிர்வககிக்க முடியும் என்று நம்புவார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் அவர்களுடைய தொழிற்சாலைகளை ஆக்கிரமிக்கும்போது தான், அல்லது பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது தான் புரட்சிகர சோசலிசத்தின் கருத்துக்கள் திடீரென்று உண்மைநிலையாகத் தெரியும்.
                              
ஆனால் பழைய ஆளும்வர்க்கம் அதிகாரத்திலிருந்து அக்ற்றப்படாவிட்டால்,  போராட்டத்தின் அத்தகைய ஒரு மட்டம் முடிவற்ற காலத்திற்கு நிலைநிறுத்தப்பட முடியாது. அது அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்குமானால், தொழில்களோ வேலைநிறுத்தங்களோ வீழும்வரை அது காத்திருக்கும், பின்னர் படை, காவல்துறை ஆகியவற்றின் மீதான அதன் கட்டுப்பாட்டை போராட்டத்தை முறியடிக்கப் பயன்படுத்தும்.

மேலும் வேலை நிறுத்தங்கள் அல்லது ஆக்கிரமிப்புக்கள் வலுவிழக்கத் தொடங்கியதும், தொழிலாளர்களிடம் ஒற்றுமை உணர்வும் நம்பிக்கையும் பலவீனமடையத்  தொடங்குகிறது. நம்பிக்கையிழப்பும் கசப்புணர்வும் வரத் தொடங்குகிறது. சிறந்த தொழிலாளர் கூட சமுதாயத்தை மாற்றுவது ஒரு அடிப்படையற்ற கனவே என்று நினைக்கத் தொடங்குகிறார்.

அதனால் தான் தொழிலாளர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தொலைக்காட்சி வாயிலாகவும் செய்தித்தாள்கள் வாயிலாகவும் பெற்றுக் கொண்டிருக்கும் போது, வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடத்துவதை முதலாளிகள் எப்போதும் விரும்புகிறார்கள். சகதொழிலாளர்களின் வாதங்களைக் கேட்கும் வாய்ப்புள்ள அவர்களுடைய ஒன்றுபட்ட பெருந்திரள் கூட்டங்களில் வாக்கெடுப்பு நடத்துவதை விரும்புவதில்லை.

அதனால் தான் தொழிற்சங்க விரோதச் சட்டங்களில், ரகசிய மற்றும் அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தும் போது வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிர்பந்திக்கும் விதியை எப்போதும் ஏறத்தாழ சேர்த்துக்கொள்கிறார்கள். அத்தகைய விதிகள் ‘ஆறப்போடும்’ காலகட்டங்கள் என்று துல்லியமாக குறிப்பிடப்படுகின்றன – அவை தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் ஒற்றுமையையும் வலுவிழக்கச் செய்கின்றன.

பாராளுமன்றத் தேர்தல் முறையில் உள்ளார்ந்த ரகசிய வாக்குச் சீட்டுக்களும் ஆறப்போடச் செய்யும் காலக்கட்டங்களும் அடங்கியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பெரும் வேலை நிறுத்தம் மூலம் பணியச் செய்யப்படுகிறது என்றால், அது, ‘நல்லது, இந்தப் பிரச்சனையை ஜனநாயக முறையில் தீர்க்கக் கூடிய ஒரு பொதுத்தேர்தல் வரை,    மூன்றுவாரங்கள் காத்திருங்கள்’ என்று கூறலாம். அந்த இடைக்காலத்தில் வேலைநிறுத்தம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அது நம்புகிறது. தொழிலாளர்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் மங்கி விடும். முதலாளிகள் தொழிலாளர்களில் போர்க்குணமிக்கவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடியும். முத்லாளித்துவ செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் தமது நடவடிக்கைகளை இயல்பாகத் தொடங்கி, அரசு ஆதரவுக் கருத்துக்களைத் திணிக்கலாம்.. காவல்துறையினர் ‘தொல்லைகொடுப்போரைக்’ கைது செய்யலாம்.

பிறகு, இறுதியாத் தேர்தல் வரும்போது, தொழிலாளர்களின் போராட்டத்தின் உயர்ந்த கட்டத்தைப் பிரதிபலிக்காது, மாறாக வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய வடிந்து போன நிலையைப் பிரதிபலிக்கும்.

பிரான்சில் 1968 இல், தளபதி டி காலேயின் அரசாங்கம் தேர்தல்களை மிகத் துல்லியமாக இந்த வழியில் தான் பயன்படுத்தியது. சீர்திருத்தவாதத் தொழிலாளர் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறின, டிகாலே தேர்தலில் வெற்றிபெற்றார்.

1974 இல் சுரங்கத் தொழிலாளர்களின் மிகப்பெரிய வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை பிரிட்டிஷ் பிரதமர் எட்வர்ட் ஹீத் எதிர்கொண்ட போது அதே தந்திரத்தைப் பயனபடுத்த முயற்சி செய்தார். ஆனால் இம்முறை சுரங்கத் தொழிலாளர்களை ஏமாற்றமுடியவில்லை. அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தார்கள், ஹீத் தோற்றுப்போனார்.

தொழிலாளர்கள் வர்க்கப்போராட்டத்தின் முக்கியப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பதற்கு, தேர்தலுக்காகக் காத்திருப்பார்களானால், அவர்கள் ஒருபோதும் உயர்மட்டத்தை எட்ட முடியாது.

‘ஹவ் மார்க்சிசம் வொர்க்ஸ்’ என்ற கிரிஸ் ஹார்மனின் நூலிலிருந்து,
தமிழில் நிழல்வண்ணன்.


No comments:

Post a Comment