My Blog List

Wednesday 23 April 2014

தொழிலாளி வர்க்கம்

ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு கம்பெனிகளின் மற்றும் அவற்றின் தரகு கூட்டாளிகளும் தமது லாபத்தை பெருக்குவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மிக கொடூரமாக தாக்குதல் தொடுத்துவருகின்றன. குறிப்பாக 1990களுக்குப் பிறகு இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்த தொடங்கியவுடன் தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடிகளை இந்திய போன்ற மூன்றாம் உலக நாட்டு உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதும் இங்குள்ள அனைத்து வளங்கள் மீதும் மலிவான உழைப்பு, மூலாதாரங்கள் மீது பெரும் ஏகபோகத்தை செலுத்தி வருகின்றன. இதற்கு சேவை செய்யக் கூடிய அடிவருடி கூட்டங்கள் தான் ஆட்சியாளர்களான இந்த தரகு முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள்.

உலகில் உள்ள பின்தங்கிய நாடுகளின் மீதான சர்வதேச நிதி மூலதனத்தின் கொடூரமான தாக்குதலை குறிப்பதற்கான ஒரு வார்த்தைதான் உலகமயமாக்கல் என்பது. உலகமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி மூலதனம் அதுவும் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகள் மீது மட்டுமல்லாது நாட்டின் அனைத்து சமூக அரசியல் வாழ்வின் மீதும் தனது ஆக்டோபஸ் போன்ற பிடிப்பை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை முக்கியமானதொரு கூறாகக் கொண்டுள்ள ஏகாதிபத்திய உலகமய கொள்கையின் செயலாக்கம்     தொடங்கி இருபது ஆண்டுகளாகியுள்ளன. ஏற்கனவே இருந்த அரசுக் கட்டுப்பாடு ஏதும் இப்போது கிட்டத்தட்ட இல்லை. அதாவது நிரந்தரத் தன்மையுடைய வேலைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்துவது அல்லது ஆட்குறைப்பு செய்வது, தொழிற்சாலைகளை மூடுவது போன்றவை. இதுவே இப்போது நடைமுறை உண்மையாக இருக்கிறது. நிரந்தரத் தொழிலாளர்களின் கூலியில் ஒரு அற்பமான அளவையே கூலியாகப் பெறுகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அமர்த்தப்படுவது வேகமாக அதிகரிக்கிறது. இது எதில் வெளிப்படுகிறது? உற்பத்திச் செலவுகளில் கூலிகளின் பங்கு குறைவதிலும் மொத்த வேலைகளில் ஒப்பந்த வேலைகளின் பங்கு அதிகரிப்பதிலும் இது வெளிப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது. இந்திய கம்பெனிகளுடைய மொத்த செலவுகளில் கூலிகளின் பங்கு 1991-92 நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருந்தது; 2002-03 நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறைந்தது.

உலகமயமாக்கல் காலகட்டத்தில் பனியமர்வுத் தரத்தை நிர்ணயிக்கும் எளிமையான அளவுகோளின் ஒரு முனையில் நிரந்தர வேலைமுறை என்பதும் மறுமுனையில் அமர்த்து துரத்து (hire and fire) ஒப்பந்த வேலைமுறையும் இருக்கிறது. அளவுகோளின் கீழ்முனையான அமர்த்து-துரத்து (hire and fire) வேலைமுறை என்ற இடத்திற்கு அனைத்துத் தொழிலாளர்களையும் தள்ளுவதே உலகமயமாக்கலின் நோக்கமாகும்.

1975க்குப் பிறகு பெரும் தொழிற்சாலைகளின் ஒவ்வொரு பிரிவும் துணைத் தொழில் (Ancillary unit) என்ற போர்வையில் சிறுசிறு தொழில்களாயின. இத்துணைத் தொழில்களில் பணிப்புரியும் தொழிலாளர்களின் ஊதியமானது பெரும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரின் ஊதியத்தைவிடக் குறைவாக ஆகிப்போனது.

1970களின் இறுதியில் சூடுபிடிக்க ஆரம்பித்த காஷூவல்மயம் (Casual Labour) போக்கனாது சீர்திருத்தம் ஆரம்பிக்கும்போது உச்சக்கட்டத்தை எட்டியது. காஷூவல்மயம் என்பது அசுர வேகத்தில் பயணம் செய்ய “அவுட்சோர்ஸ்” என்ற புதிய உத்தி உலகமயமாக்கல் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் மனிதர்களின் தலையை வெட்டுவதற்கு ஆட்கள் போதாமல் கில்லட்டின் இயந்திரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டதோ அதே போன்று வேலைவாய்ப்பை காலி செய்வதற்கு அவுட்சோர்ஸ் உத்தி முதலாளிய வர்க்கத்தால் பயன்படுத்தபட்டு வருகிறது.

அவுட்சோர்ஸிங் என்பது தொழிலின் கருவான நடவடிக்கைகளை மட்டும் நிறுவனத்தின் நேரடி செயல்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவற்றை நிறுவனத்திற்கு வெளியே உள்ளவர்களை வைத்துச் செய்வது. தற்போது அந்தக் கருவான நடவடிக்கைகள் கூட அவுட்சோர்சிங் செய்யப்படுகிறது. அவுட்சோர்சிங் கொள்கை மூலமாக வெளியே செல்லும் நிர்வாக வேலையில் உற்பத்தி (production) மட்டுமே நிறுவனத்திற்கு வெளியே செல்வதில்லை. இதனுடன் சேர்ந்து நிதி நிர்வாகம் (Finance) கொள்முதல் நிர்வாகம் (Purchase) கணக்கு வழக்கு (Accounts and Administration) நிர்வாகம் மற்றும் பொருள்கையிருப்பு நிர்வாகம் (inventory) ஆகியவையும் சென்று இருக்கின்றன. இப்பணிகளில் மட்டும் அல்லாமல் அவுட்சோர்ஸ் ஆர்டர் பெறுபவரால் பணியமர்த்தப்படுபவரின் பணித் தரமானது காஷூவல் முறையை விடக் கேவலமாக உள்ளது.

மொத்தத்தில் அவுட்சோர்சிங்கானது தொழிலாளியைப் பொருத்துவரை நிரந்தரத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திலிருந்து ஒப்பந்தத் தொழிலாளி என்ற பணியமர்வுத் தரத்திற்கு மாற்றிவிட்டது.

இதன் விளைவு தொழிலாளி ஒரு வர்க்கமாக அணிதிரள்வதை தடுப்பதுதான் அடிப்படையாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அரசின் அறிக்கையில் கூறுவதாவது நாட்டில் 45.9 கோடி தொழிலாளர்களின் (விவசாய தொழிலாளிகள் உட்பட) 43.3 கோடி பேர் அமைப்பாக்கப்படாமல் உள்ளனர். அதாவது 94.33 சதவீதம் அமைக்காப்படாமல் உள்ளனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறையில் மட்டுமல்லாமல் சேவைத்துறையிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து, மருத்துவம், கல்வி, அஞ்சல், தொலைத்தொடர்புத், தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறைகளிலும் பணிப்புரியும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமான நிமையில் உள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஊழியர்களை ஒப்பந்தத் தொழிலாளி மயமாக்கும் போக்கு உச்சக் கட்டத்திற்கு சென்று தற்போது இது டிரிப்ரேட் (Trip Rate) என்று மாறிவருகிறது. இது காஷூவல் முறையைவிட மோசமானது.

கல்வித்துறை மிகவும் மட்டமான பணியமர்வுத் தரமுடைய ஊழியர்களைக் கொண்டது இத்தொழில். கல்வியைத் தனியார்மயமாக்கியதும் ஆசியர்களின் பணிதரம் தாழ்ந்துபோனதும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்ச்சிப் போக்குகள் தனியார் கல்வி நிறுவனங்களின் நூறுசதவீத காஷூவல் ஆசிரியர் மூலமாக வெற்றிகரமாக வியாபரம் நடத்திவரும் தொழிலாக விளங்குகிறது.

தகவல் தொழில்நுடபம் பொறுத்தவரை இங்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் அமலாவதில்லை. இதில் 8 மணி நேர வேலை என்பது கிடையாது. சராசரியாக 9 மணிமுதல் 10 மணி நேரம் வரை உழைக்கிறார்கள் என்று நிறுவனங்களின் மனிதவளத் துறைகள் கூறினாலும் அது திட்ட ஒப்பந்தங்கள் (project) இல்லாத நாட்களில் வேலைப் பளு குறைவாக இருப்பதை குறிப்பதாகும். எனினும் திட்ட ஒப்பந்தங்கள் இருக்கும் நாட்களில் 14லிருந்து 16 மணி வரை வேலை நேரம் நீட்டிக்கப்படுகிறது. இத்தொழிலில் 35 வயதைக் கடந்தவர்களுக்கு இடமில்லை. 35 வயதைக் கடந்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே பணியாற்ற முடியும் என்பதால் தற்போது பணியிலிருக்கும் அனைவரும் அடுத்த பத்தாண்டுகளில் வேலையில்லாதவர்களாகி விடுவார்கள். அவர்கள் அனைவரும் வேறு வேலைக்கும் செல்ல முடியாது. ஆகவே தொழிலாளர் உரிமை, நலன் மற்றும் பணிப்பாதுகாப்பு அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ள சைபர் கூலிகள் (cyber cooli)தான் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள்.

பன்னாட்டு நிறுவனமும் மற்றும் தரகு முதலாளிகளும் தமது லாபத்தை அதிகபட்சமானதாக்கிக் கொள்வதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகின்றன. அதாவது தொழிலாளர் நலச் சட்டங்களைத் தளர்த்துவது விருப்பத்திற்கேற்ப வேலைக்கமர்த்திக் கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் உரிமையை இந்திய ஆளும் தரகு நிலப்பிரபுத்துவ அரசு உத்தரவாதப் படுத்தும் விதமாக 2008-2009 ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு மூன்று பரிந்துரைகளை முன்வைக்கிறது.

அ) முதலாளி தன் விருப்பம்போல் வேலையிலிருந்து தொழிலாளியை வெளியேற்றுவதற்கான உரிமை.

ஆ) நிரந்தர தொழிலாளார்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் வைத்துக் கொள்வது.

இ) 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேர வேலையாக உயர்த்துவது.

போன்ற பரிந்துரைகளை பொருளாதார ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழிலாளர்களின் கொத்தடிமைக் கூடாரங்களாக உள்ளன. இங்கு தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எட்டு மணிநேர வேலை, தொழிற்சங்க உரிமை, வேலை நிறுத்த உரிமை, உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மலிவன கூலி உழைப்பின் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் அதீத லாபம் (super profit) பெருவதற்கு சிறப்புப் பொருளாதர மண்டலங்கள் வழிவகுக்கின்றன.

இந்தியாவின் கனிவளங்களும், மனித உழைப்பும் ஏகாதிபத்திய வாதிகளால் கேள்விக்கேட்பாரன்றி கொள்ளையடிக்கப் படுகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் ஒரு சங்கமாக ஒன்று சேர்ந்து இத்தகைய தாக்குதலை எதிர்த்து போராட வேண்டியது உடனடி பணியாகியுள்ளது.

முதலாளிய வர்க்கத்தால் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் பெருகுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு போர்குணமிக்க தொழிற்சங்க அமைப்பு தேவையாகியுள்ளது. அத்தகைய தொழிற்சங்கம் எவ்வாறு கட்டியமைக்கப்பட வேண்டும்? அதன் கடமைகள் என்ன? என்பதற்கு மார்க்சிய லெனினிய அடிப்படையில் ஒரு தெளிவான வரையரை வேண்டும்.

நம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்புமுறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்குமிடையே உள்ள இணக்கம் காணமுடியாத பகைமையை தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்டவேண்டும்.

மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்பட்டிருக்கிறது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதும் இந்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தொழிலாளர்களுக்கு ஊட்டுவதுதான் இன்றைய முதன்மையான கடமை.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க கூலி உயர்வுக்காக மட்டுமின்றி சொத்துடமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுதல் வேண்டும். தொழிற்சங்கங்கள் கூலி முறையைத் ஒழிப்பதற்கும் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார இழிவு கூலி உயர்வாக இருப்பதலோ குறைவாக இருப்பதிலோ இல்லை. தன் உழைப்பிற்குத் தன் உழைப்பின் உற்பத்திப் பொருள் முழுவதையும் பெறுவதற்குப் பதிலாகத் தன் சொந்த உற்பத்திப் பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டியிருப்பதுதான். அதன் மாபெரும் இழிவாகும் என்பதை எடுத்துறைக்க வேண்டும்.

ஆனால் தொழிற்சங்கவாதிகலும் திருத்தல்வாதிகளும் உழைக்கும் மக்கள் நடத்தும் அன்றாட நலன்களுக்கான போராட்டமும் வர்க்கப் போராட்டங்கள் என்ற தவறான கருத்தை மக்களுக்கிடையில் பரப்பி வருகின்றனர். வர்க்கப் போராட்டம் குறித்து மார்க்சியவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றியும் மிதவாதிகள் கண்ணோட்டத்தைப் பற்றியும் வேறுபடுத்தி பின்வருமாறு லெனின் கூறுகிறார்.

 “ “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமாகும்” மிதவாத கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுள்ள சந்தர்ப்பவாதிகள் மார்க்சின் தெட்டத் தெளிவான இவ்வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஒரு வக்கிரமான முறையில் வியாக்கியானம் செய்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் என்போர், “பொருளாதாரவாதிகளும்”, அவர்களுடைய அண்ணன்மார்களான “கலைப்புவாதிகளையும்” உள்ளிட்டோர் ஆவர்.

வர்க்கங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற எல்லா மோதல்களும் ஒரு வர்க்கப் போராட்டம் என்று கருதுகிறார்கள். ஆகையால், அவர்கள் மிக உயர்ந்த, மேலும் வளர்ச்சிப் பெற்ற நாடு தழுவிய வர்க்கப் போராட்டத்தை அரசியலாக கருதாமல் ஒவ்வொரு ரூபிளுக்கும் அதிகமாக 5 கோபெக்குகளுக்காக (ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகமாக 5 காசுகளுக்காக உதாரணம் கூறலாம்) நடத்துகின்ற போராட்டத்தை “ஒரு வர்க்கப் போராட்டம்” என அங்கீகரிக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் ஆரம்ப நிலையிலுள்ள வர்க்கப் போராட்டத்தைத்தான் அங்கீகரிக்கிறார்கள். அதனுடைய வளர்ச்சி பெற்ற வடிவத்திலுள்ள போராட்டத்தை அங்கீகரிப்பதில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் மிதவாத முதலாளிகளின் கண்ணோட்டத்திலிருந்து எவ்வகையான போராட்டம் அவர்களால் மிகவும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றதோ அத்தகைய போராட்டங்களை மட்டுமே வர்க்கப் போராட்டம் என பொருளாதாரவாதிகள் அங்கீகரிக்கிறார்கள். மிதவாதிகளால் ஏற்க முடியாத உயர்நிலையிலுள்ள வர்க்கப் போராட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு பொருளாதாரவாதிகள் தொழிலாளர் அரசியல் வாதிகளாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் இம்முறையில் வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய புரட்சிகரமான கண்ணோட்டத்தை நிராகரிக்கிறார்கள்.

மேலும் வர்க்கப் போராட்டமானது அரசியல் துறையைத் தழுவினால் மாத்திரமே அது உண்மையான நிலையான வளர்ச்சி பெற்றதாக ஆகிவிடுகிறது என்று சொன்னால் மட்டுமே போதாது. அரசியலிலும் கூட ஒருவர் தன்னை அற்ப விவகாரங்களுடன் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஒருவர் இன்னும் ஆழமாகவும், அதனுடைய சாரத்தை அடையும் வரை செல்லலாம். வர்க்கப் போராட்டம் அரசியலை தழுவிக் கொள்வதோடு மட்டும் நிற்காமல், அத்துடன் அரசியலில் மிக சாராம்சமாக உள்ள அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சனையை தன் பிடிக்குள் கொண்டு வரும்போதுதான் அதை முழுமையான வளர்ச்சி பெற்ற ‘நாடு தழுவிய’ வர்க்கப் போராட்டமாக மார்க்சியம் அங்கீகரிக்கிறது.

அதற்கு மாறாக, மிதவாதமானது தொழிலாளர் இயக்கம் ஓர் அளவு பலம் அடைந்துவிட்டபோது வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்கிறது. ஆனால் அது வர்க்கப் போராடத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை குறுக்கி, கட்டுப்படுத்தி, காயடிக்க முயல்கிறது; மிதவாதமானது அரசியல் துறையிலும் வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் துறையில் அரசு அதிகாரத்தின் கட்டமைப்புப் பற்றிய பிரச்சினை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் அது அங்கீகரிக்க தயாராக இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றி இவ்வகையாக மிதவாதம் திரித்துக் கூறுவது முதலாளிகளின் எவ்வகையான வர்க்க நலன்கள் இடமளிக்கிறது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல”.
(லெனின் தொகுப்பு நூல் எண் 19 பக்கம் 121, 122)

அரசியல் போராட்டமும் பொருளாதாரப் போராட்டமும்

அரசியல் போராட்டத்திற்கும் பொருளாதாரப் போராட்டத்திற்கும் உள்ள உறவு நிலையை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் போராட்டம் பொருளாதாரப் போராட்டம் ஆகிய இரு அம்சங்களைக் கொண்டதுதான் வர்க்கப் போராட்டம்.

ஒரு புரட்சிகரமான சூழிந்லையில் வர்க்கப் போராட்டத்தின் பிரதான அம்சமாக அரசியல் போராட்டம் இருக்கிறது; இரண்டாம் நிலையான அம்சமாக பொருளாதாரப் போராட்டம் இருக்கிறது.

பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமைந்து ஒன்று மற்றொண்றின் சக்திக்கு மூலாதாரமாக அமைகிறது. இவ்விரண்டு போராட்ட வடிவங்களும் இணைக்கப்பட்டால்தான் ஒரு சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை தோற்றுவிக்க முடியும்.

அரசியல் போராட்டம் பற்றி நமக்கு ஒரு தெளிவான வரையறை வேண்டும். அதாவது தொழிலாளி வர்க்கம் தனது நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமைதாங்கி நடத்தும் போராட்டம்தான் அரசியல் போராட்டம்.

ஆனால் திருத்தல்வாத தொழிற்சங்கங்களும் ஆளும் வர்க்கத்தின் தொழிற்சங்கங்களும் பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் ஒன்றிணைப்பதில்லை. அப்படி ஏதாவது அரசியல் போராட்டத்தை நடத்தினாலும் அது தொழிலாளர்களின் தனி நலன்களுக்கான போராட்டமாகத்தான் உள்ளது.

தொழிற்சங்கப் போராட்டம் ஏன் மக்களிடையே அங்கீகாரத்தையோ அல்லது ஆதரவையோ பெறுவதில்லை?

திருத்தல்வாதிகள் தொழிலாளர் போராட்டத்தை பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் இவ்வர்க்கங்களுக்கு தலைமைத் தாங்கும் வர்க்கப் போராட்டமாகவும் அரசியல் போராட்டங்களை நடத்துவது இல்லை. உண்மையில் பொருளாதார நலன்களுக்கான தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதை எதிர்த்து தொடுக்கப்படும் ஒடுக்கு முறையை விட பிற வாழ்வுத்ட் துறைகளில் குறிப்பாக சாதிமத, மொழி இன ஒடுக்குமுறைகள் குறைவானதல்ல.

எனவே அரசியல் வகையில் பிற வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை தொடுக்கப்படும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து ஒடுக்குப்படுபவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஈடுபடும்போதுதான் அவர்கள் குறுகிய சுயநல உணர்விலிருந்தும் பின் தங்கிய தொழிற்சங்க உணர்விலிருந்தும் விடுபட்டு வர்க்க அரசியல் உணர்வைப் பெறுவது மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் ஆதரவைப் பெறுவதும் சாத்தியம்.

அறைகாலனிய அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு சமூக அமைப்பில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெறுவது மட்டுமல்லாமல் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமெனில் வர்க்கப் போராட்டத்தின் மூலமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தி சோசலிச புரட்சியை நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறமுடியும்.

எனவே, தொழிலாளி வர்க்கத்திற்கு தலையாய பணியாக இருப்பது நாட்டையும் தன்னையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிற வர்க்கங்களை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயக புரட்சிக்கு அடிமைப்பட்டிருக்கும் வர்க்கங்களை திரட்டுவதுதான்.

No comments:

Post a Comment